Thursday, February 14, 2013

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

கே.எம். அப்துந்நாசிர்.
 
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.

கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.

வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், பிளாட்பாரங்களிலும், மூலை முடுக்குகளிலும், குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும், ஆடு, மாடுகளுடனும், தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.  இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்