Thursday, April 28, 2016

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்
யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இது பற்றி பீஜே தனது தமிழாக்கத்தில் விளக்கியுள்ளார்.
 
508. மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?
இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு
وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 46 : 15 )

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், '' நான் நபி (ஸல்) அவர்களிடம் '' அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?'' என்று கூறினார்கள். ''அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (138)

Wednesday, April 13, 2016

பெண்களின் பொறுப்புகள்

பெண்களின் பொறுப்புகள்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா MISc.
குடும்பத்திற்கு செலவு செய்வது ஆண்களுக்குத் தான் கடமை என்று ஆதாரங்களைப் படித்தவுடன் பெண்கள், கணவன் சம்பாதிக்கிற அனைத்தையும் கேட்டுவிடக் கூடாது. கேட்கவும் முடியாது. அதனை மார்க்கம் அனுமதிக்கவுமில்லை. குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றால் என்ன? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கித்தான் சென்றுள்ளார்கள்.
முஆவியா அல்குரைஷி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டியது என்ன?'' என்று கேட்கும் போது, "நீ உண்ணும் போது அவளுக்கும் உண்ணக் கொடு, நீ ஆடையணியும் போது அவளுக்கும் ஆடையணிக் கொடு, அவளை முகத்தில் அடித்து விடாதே, அவளை ஒரேயடியாக வெறுக்காதே, அவளை வீட்டில் வைத்தே தவிர மற்ற இடங்களில் கண்டிக்காதே'' என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா அல் குஷைரிய்யி(ரலி), நூல்: அபூதாவூத் 1830
நீங்கள் உண்ணும் போது அவளுக்கும் உண்ணக் கொடுங்கள் என்றால், கணவன் எந்த ரகத்தில் சாப்பிடுகிறானோ அந்த ரகத்தில் மனைவிக்கும் உணவளிப்பது என்று பொருள்.
கணவனுக்கு ரேஷன் அரிசி என்றால் மனைவிக்கு கைக்குத்தல் அரிசி கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் எந்தக் கணவனையும் சிரமப்படுத்திடவில்லை. அதே போன்று நீங்கள் உடையணியும் போது மனைவிக்கும் உடையணியக் கொடுங்கள் என்றால், தராதரத்திற்குத் தகுந்தவாறு மனைவிக்குச் செலவு செய்வது தான் கணவன் மீது கடமை என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.
எனவே மனைவிமார்கள், தங்களது கணவன்மார்களின் வருவாய்க்குத் தகுந்த மாதிரி தான் கணவனிடம் எதையும் கேட்க வேண்டும். வருவாயை விட அதிகமானதைக் கணவனிடத்தில் கேட்டு, கணவன் அதை மனைவிக்குக் கொடுக்க வில்லையெனில் எந்தக் கணவனும் இறைவனால் குற்றம் பிடிக்கப்பட மாட்டான். அதே போன்று கணவனின் வருமானம் மனைவியாக இருக்கிற நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது.

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் MISc

மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது; அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோம்.
முஸ்லிம்களின் நம்பிக்கைப் பிரகாரம் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இறைவனால் வானத்தின் பால் உயர்த்தப்பட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றோம். கடைசிக் காலத்தில் இந்தப் பூமிக்குத் திரும்பவும் வந்து சில காலம் வாழ்ந்து தான் மரணிப்பார்கள்.
அப்படிப்பட்ட, தற்போது வரை உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியவர்கள், தற்போது நாம் செய்யக்கூடியதை அறிகிறார் என்று சொல்ல முடியுமா? அதிலும் குறிப்பாக இறந்து போன, மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்களை விட உயிரோடு இருக்கின்றவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களை அறிவதற்குச் சாத்தியம் இருக்கிறது. மேலும் மண்ணறைக்குள் இருந்து உலகத்தைப் பார்ப்பதை விட வானத்தில் இருந்து பார்ப்பது தான் மிகவும் எளிதும் கூட. வானத்திலிருந்து நாம் அனைத்தையும் பார்த்து விடலாம்.
ஆனால் இறைவன் மறுமையில் நபி ஈஸா அவர்களை எழுப்பி விசாரிக்கும் போது கிறித்தவர்கள் தன்னை வணங்கியதைக் கூட அவர்களால் அறிய முடியவில்லை என்பதை திருக்குர்ஆனிலே நாம் பார்க்க முடிகிறது.
"மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?'' என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப் பார். "நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.) (அல்குர்ஆன் 5.116,117)
உயிரோடு இருக்கின்ற ஒரு நபியால் இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாத போது, இறந்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்ட அப்துல் காதிர் ஜீலானியால் அறிய முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தூதரின் பக்கம் திரும்புவோம்

தூதரின் பக்கம் திரும்புவோம்

-எம். முஹம்மது சலீம் (MISc), மங்கலம்
நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.
எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறை! இது தொடர்பான செய்திகளைக் கடந்த டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
வணக்கம் தொடர்பான பிரச்சனை
நம்மிடம் இருக்கும் இறை நம்பிக்கையை வெளிபடுத்தச் செய்யும் வகையில் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் தொடர்பாக மட்டும் விதவிதமான செயல்பாடுகள் முஸ்லிம்களிடம் இருப்பது கண்கூடு. இபாதத் - வணக்க வழிபாடுகள் தொடர்பான சர்ச்சைகள் நிகழும் போது இமாம்கள், பெரியார்கள் போன்ற முன்னோர்களின் செயல்முறையின் பக்கம் படையெடுப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவ்வாறு தங்களின் சிந்தனைத் தேடலுக்குத் தோதுவாக இருக்கும் முன்னோர்களை நோக்கிச் செல்லும் காலமெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.
அல்லாஹ்வின் தூதரை நோக்கித் திரும்பும் போது மட்டுமே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பயன்படுத்தி சஹாபாக்கள் தங்களுக்கு மத்தியிலான முரண்பாடுகளைக் களைந்து எறிந்தார்கள் என்பதற்கு சான்றுகளைப் பார்ப்போம்.
என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்: "நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப் பட்ட மாமிசத்தை உண்ணலாமா?'' என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்: பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக் கிறோம்!'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?'' என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் "இல்லை!'' என்றனர். "அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புஹாரி (1824)

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்


இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
இஸ்லாம் என்பது அல்லாஹ் விற்குச் சொந்தமான மார்க்கமாகும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்,
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (3:9)
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிட மிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (3:85)

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதன் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (12:40)

இறைவனுக்கு மட்டுமே சொந்த மான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.
(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்! (18:27)
இது அகிலத்தாரின் இறைவனிட மிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (70:43-48)
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் "இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!'' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! (10:15)
நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்க மாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளான்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66:1)
என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
மேலும் பத்ருப் போர் கைதிகள் விஷயமாக நபியவர்கள் சுய முடிவு எடுத்த நேரத்திலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்குப் போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது, ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்தி தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
இறைத்தூதரும் கூட இறை வனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதையே இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர் களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறை வாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3)
(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (6 :106)