Tuesday, February 21, 2012

தொடர் :2


அல்லாஹ்வை எப்படி நம்புவது?      
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை


நமது வாழ்வில் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும்.

நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் எப்படிப்பட்ட துன்பமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை

அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 54:04)

அவனால் முடியாதது எதுவுமில்லை. எந்தத் தேவையானாலும் அவனிடம் கேட்கலாம். அவன் நிச்சயமாகத் தருவான் என்ற நம்பிக்கை நபிமார்களுக்கு இருந்தது. நாம் பார்த்த நபிமார்களின் வரலாறுகளை வைத்துக் கொண்டு

அல்லாஹ் பற்றிய நமது நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் அல்லாஹ்விடம் கேட்பதற்குக் கூட கஞ்சத்தனம் செய்கின்றோம். எதெல்லாம் நம்மால் முடியும் என்று தோன்றுகிறதோ அதுதான் அல்லாஹ்வால் முடியும், அது அல்லாதது எதையும் செய்யவோ அல்லது செயல்படுத்தவோ

அல்லாஹ்வால் முடியாது என்று நினைக்கிறோம்.

நாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விதத்தில் நாம் கேட்கவில்லை என்பதற்கு நமது வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறு உதாரணங்களைப் பார்க்க முடியும்.

இருபத்தி ஐந்து வயதுடைய ஒருவர் திருமணம் முடித்து குழந்தைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அவர் முப்பது வயது அல்லது நாற்பது வயது வரை தனக்கு குழந்தை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். நாற்பத்தி ஐந்து வயதை அல்லது அதைவிட அதிகமான வயதை எட்டியவுடன் இதற்குப் பிறகு நமக்கு இனி எப்படிக் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அவர் தீர்மானித்து விடுகிறார். அதன் பின்னர் அல்லாஹ்விடம் அவர் குழந்தையைக் கேட்டு பிரார்த்திப்பதை விட்டு விடுகிறார்.

இந்த செயலில் இருந்து அவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். எனக்கு குழந்தைப் பேறு எப்படிக் கிடைக்கும் என்று நினைப்பதற்குப் பதிலாக என்னால் வேண்டுமானால் முடியாமல் இருக்கலாம். என்னைப் படைத்த அல்லாஹ்வால் முடியும், அவன் தான் சகல ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் அவனால் முடியாத ஒன்று இந்த உலகில் உண்டா என்று நினைக்க வேண்டும்?

ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்வால் எனக்கும் குழந்தைப் பாக்கியத்தைத் தர முடியும். நிச்சயமாக அவன் எனக்கு குழந்தை பாக்கியத்தைத் தருவான் என்று உறுதியாக நம்ப வேண்டும். அதன் பிறகு அதில் முடியுமான அளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினை மட்டுமில்லை இது போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து அவனிடம் நமது முழுப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன்:65:03)

அவனிடம் உறுதியாகக் கேட்க வேண்டும். எந்த அளவுக்கென்றால் பெரிய குற்றச்சாட்டில் கைதியாகப் பிடிக்கப்பட்டு அடுத்த நாள் தூக்கு மேடை என்றிருந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்சியாளனாகிய அல்லாஹ் எதையாவது செய்து அந்த நேரத்தில் காப்பாற்றுவான்.

(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.

(அல்குர்ஆன்:3:54)

நோயாளியாக இருக்கின்றவர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.

அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு அல்லாஹ்விடம் நோயைக் குணப்படுத்தும் படி கேட்கிறார்கள். சாதாரண தலைவலி காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். இதை விடவும் நோய் கடுமையாக அதிகரிக்கும் போது வைத்தியர்களை நாடிச் சென்று அவர்களிடம் அதற்குரிய சிகிச்சைகளைச் செய்தும் பலன் ஏற்படாமல் போய்விடும். இவர் பிழைப்பது நிச்சயமல்ல என்று மருத்துவர்கள் கூறி கைவிடும் போது இனி இவர் எப்படி குணமாவார்? குணப்படுத்தக்கூடிய மருத்துவரும் கையை விரித்து விட்டாரே என்று நம்பிக்கை இழந்து விடுகிறோம்..

அல்லாஹ்விடம் இத்தனை நாட்களாகச் செய்து வந்த பிரார்த்தனையையும் கைவிட்டு அதில் நம்பிக்கை இழந்து விடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் மருத்துவருக்கு வேண்டுமானால் முடியாது போகலாம். என்னுடைய இறைவனால் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாக அல்லாஹ்விடம் நம்பிக்கை வைத்து பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு தான் ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் உறுதியான பிராத்தனை இருந்தது.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல்குர்ஆன்:26:80)

மரணிக்க இருக்கின்ற மனிதனையும் நோயிலிருந்து குணப்படுத்தி நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல அல்லாஹ்வால் முடியும்.

பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களிடம் நம் தேவையைக் கேட்டால் அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை யாரும் கேட்பதில்லை. அவர்கள் அந்த அளவுக்குத் தரமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வைப் பற்றியும் நமது நிலை இப்படித்தான் இருக்கின்றது. பணக்காரன் எப்படி பெருந்தொகையை தரமாட்டானோ அதை போன்று தான் அல்லாஹ்வும் தரமாட்டான் என்று நினைக்கின்றோம். 

நமது பார்வையிலும் கணிப்பிலும் மனிதர்கள் தான் தர மாட்டார்கள்.

அல்லாஹ் நினைத்தால் அவன் நமக்கு உதவி செய்வது அவனுக்கு சாதாரணமானது என்று நம்புவதில்லை. நமக்கு முன்னால் இறைத்தூதர்கள் வரலாறு இதற்கு படிப்பினையாக இருக்கிறது.

அல்லாஹ்வை உண்மையாக நம்ப வேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எப்படி உறுதியாக நம்புகின்றோமோ, அப்படி சந்தேகமில்லாமல்

அல்லாஹ்வை நம்ப வேண்டும். கண் முன்னால் ஒன்றைப் பார்த்து எப்படி இது மனிதன், இது மிருகம் என்று எவ்வாறு உறுதியாகக் கூறுகின்றோமோ அப்படி நம்ப வேண்டும். நமது கண் முன்னால் நிற்கும் ஒருவரைப் பற்றி இவர் யார் என்று கேட்டால் சற்று பொறுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று யாரும் சொல்ல மாட்டோம். அப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும்.

இரண்டு கால்களும் இரண்டு கைகளும் உடல் உறுப்புக்களும் இருப்பதை எப்படி நம்புகின்றோமோ? அதில் சந்தேகம் வராதோ அதுபோன்று

அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய தூதர்கள், மலக்குகள், வேதங்கள் போன்ற மறைவானவற்றையெல்லாம் நம்பவேண்டும். உறுதியான வேர்களைக் கொண்ட ஆலமரத்தின் விழுதுகள் எப்படி ஆழமாக வேர்களை நிலத்தில் வேரூன்றி இருக்கின்றதோ அப்படி அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையும் உறுதியாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன்:14:24)

மரத்தின் வேர்களைப் போன்று நமது கொள்கை ஆழமாக உள்ளதா? நூற்றக்கு நூறு சதவீதம் நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் மறுமையையும் வேதங்களையும் நம்புகிறோமா?.

இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் நமது வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால்

அவனுடைய வானவர்களின் உதவியும் நிச்சயமாகக் கிடைக்கும். வாழ்க்கையில் துன்பமோ துயரமோ ஏற்படாது. 

இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறிய நிகழ்ச்சி போதுமான ஆதாரமாகும்.

சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்' அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்' அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாது'' என்று வினவினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்' என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!'' என்று சொன்னார்கள்.    (நூல் முஸ்லிம்:62)

இதில் இருந்து நாம் விளங்க வேண்டியது அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் எந்தத் தீய பழக்களிலும் நீடித்து நிலைத்து நிற்க மாட்டோம். என்பதுதான் இதில் இருந்து நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment