Wednesday, April 13, 2016

தூதரின் பக்கம் திரும்புவோம்

தூதரின் பக்கம் திரும்புவோம்

-எம். முஹம்மது சலீம் (MISc), மங்கலம்
நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.
எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறை! இது தொடர்பான செய்திகளைக் கடந்த டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
வணக்கம் தொடர்பான பிரச்சனை
நம்மிடம் இருக்கும் இறை நம்பிக்கையை வெளிபடுத்தச் செய்யும் வகையில் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் தொடர்பாக மட்டும் விதவிதமான செயல்பாடுகள் முஸ்லிம்களிடம் இருப்பது கண்கூடு. இபாதத் - வணக்க வழிபாடுகள் தொடர்பான சர்ச்சைகள் நிகழும் போது இமாம்கள், பெரியார்கள் போன்ற முன்னோர்களின் செயல்முறையின் பக்கம் படையெடுப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவ்வாறு தங்களின் சிந்தனைத் தேடலுக்குத் தோதுவாக இருக்கும் முன்னோர்களை நோக்கிச் செல்லும் காலமெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.
அல்லாஹ்வின் தூதரை நோக்கித் திரும்பும் போது மட்டுமே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பயன்படுத்தி சஹாபாக்கள் தங்களுக்கு மத்தியிலான முரண்பாடுகளைக் களைந்து எறிந்தார்கள் என்பதற்கு சான்றுகளைப் பார்ப்போம்.
என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்: "நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப் பட்ட மாமிசத்தை உண்ணலாமா?'' என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்: பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக் கிறோம்!'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?'' என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் "இல்லை!'' என்றனர். "அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புஹாரி (1824)

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நான் பெருந்துடக்குடையவனாகி விட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. (இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?)'' என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், "நாம் ஒரு (போர்ப்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம்; அதில் நானும் நீங்களும் இருந்தோம். அப்போது (பெருந்துடக்கு ஏற்பட்ட நமக்கு குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை ஆகவே) நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்குப் பதிலாக தயம்மும் செய்வது போன்று குளியலுக்குப் பதிலாக) மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விருகைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள் வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து "இவ்வாறு செய்திருந்தால் அது உமக்குப் போதுமே'' எனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி), நூல்: புஹாரி (338)
குற்றம் தொடர்பான பிரச்சனைகள்
நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்குத் துன்பம் தரக் கூடாது; அவர்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்று பொதுநலம் போதிக்கும் மார்க்கத்தில் இருக்கிறோம்.
இருப்பினும், தமது நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு அடுத்த மக்களிடம் வரம்பு மீறும் மக்கள் இருக்கிறார்கள். இப்படி ஏதேனும் வகையில் எவருக்கு இடையேனும் சண்டைகள் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி நீதம் செலுத்தும் வழிகாட்டுதல் நபிகளாரிடம் இருக்கிறது. மாமனிதர் அவர்கள் தலைசிறந்த சட்ட வல்லுநர். அநீதத்தை ஒரு போதும் ஆதரிக்காதவர். ஆதலால் தான் அன்றைய கால மக்கள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள நபிகளாரிடம் வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைல்'' குலத்துப் பெண்கள் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி யின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவி ட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (5758)
நபி (ஸல்) அவர்களிடம் (யன்ன் நாட்டிலுள்ள) "ஹள்ர மவ்த்'' எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் "கிந்தா'' எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்து விட்டார்'' என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், "அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்து வருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், "(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை'' என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)'' என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் "அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லை'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைத் தவிர உனக்கு வேறு வழி கிடையாது'' என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கிந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற் காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் (223)
தூதரின் வழியேதூய வழிமுû
நபித்தோழர்கள் தங்கள் வாழ்வில் வரும் சில வகையான பிரச்சனை களுக்கு மட்டுமே தூதரிடம் சென்றார்கள் என்று கருதிவிடக் கூடாது. எல்லா விதமான சிக்கல்களுக்கும் தூதரிடமே தீர்வை நாடினார்கள். அதை நிலைநாட்டி னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பிறகு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் மூலம் தங்களுக்கு இடையே வரும் கருத்து வேறுபாடுகளுக்குத் தக்க பதில்களைத் தெரிந்து கொண்டார்கள்.
தாங்கள் மட்டுமல்ல! தங்களை அடுத்து வரும் தாபியீன்களுக்கும் இப்படித்தான் மார்க்கத்தை அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். இது கற்பனையான சொந்த கருத்து அல்ல. இந்த உண்மையைக் கீழ்வரும் செய்தியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, "நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச் சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை'' என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்'' என்று கூறியுள்ளார்கள்'' என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்'' என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற் றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "அல்லாஹ் வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்'' என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உன்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: புஹாரி (6245)
அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்வா'' எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்'' என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது'' என்றார்கள். இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற் காக அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப் பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக் கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக் கொண்டிருந் தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், "யார் அது?'' என்று கேட்டார்கள். "நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்'' கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?'' என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்'' என்று சொன்னேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், "தண்ணீர் ஊற்று'' என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூ அய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுச் சென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, "இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த் திருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (2278)
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "மூசா (அலை) (அவர்கள் சில ஞானங்களைக் கற்றுக் கொள்வதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர், "களிர்'' அவர்கள்தானா என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு வழக்காடிக் கொண்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர், களிர் (அலை) அவர்கள் தான்'' என்றார்கள். அப்போது உபை பின் கஅப் அல்அன் சாரீ (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, "அபுத்துஃபைல் அவர்களே! இங்கே வாருங்கள். நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாக வழக்காடிக் கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?'' என்று வினவினார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: பனூ இஸ்ராயீல் மக்களின் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், "இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)'' என்று சொன்னார்கள். உடனே மூசா (அலை) அவர்களுக்கு, "இருக்கிறார்; அவர்தான் நம் அடியார் களிர் ஆவார்'' என்று அல்லாஹ் (வஹீ) அறிவித்தான். அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்க வழி கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கி, "நீர் எந்த இடத்தில் மீனைத் தவற விடுகிறீரோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லும். அங்கு களிரைச் சந்திப்பீர்'' என்று அவரிடம் கூறப் பட்டது. அவ்வாறே மூசா (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய தூரம்வரை (தம் உதவியாளருடன்) நடந்தார்கள். பிறகு தம் ஊழியரிடம் "நமது காலை உணவைக் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள். அதற்கு மூசா (அலை) அவர்களின் உதவியாளர், "கவனித்தீர்களா! நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைக் கூறவிடாமல் ஷைத்தான் தான் என்னை மறக்கச் செய்து விட்டான்'' என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், "அதுதான் நாம் தேடிவந்த இடம்'' என்று தம் உதவியாளரிடம் சொல்ல, இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பின்னர் அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நூல்: முஸ்லிம் (4746)
அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்து கிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)'' என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழு பவர் யார்?'' என்று கேட்டார்கள். நாங்கள் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்'' என்றோம். அதற்கு, "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்'' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இன்னொரு நபித் தோழர் அபூமூசா (ரலி) ஆவார்'' என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
நூல்: முஸ்லிம் (2004)
நபித்தோழர்கள் மட்டுமல்ல தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள், இமாம்கள் ஆகியோர் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதுதான் மார்க்கம் என்பதில் ஒருமித்தக் கருத்தில் இருந்தார்கள். இதற்குச் சான்றாக இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன. இவர்கள் யாருமே தங்களுடன் இருக்கும் சக தோழர்களின் சுய கருத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை இன்றைய மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தூதரை நோக்கி வாருங்கள்
நபித்தோழகள் முதல் இமாம்கள் வரை அனைவரும் நபிமொழியைக் கவனித்து தங்களுக்குப் புரிந்த வகையில் மார்க்கத்தைக் கடைப் பிடித்தார்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து எந்தவொரு வஹீயும் வராது. அவர்களிலும் நபிமொழியை சரியாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள்; தவறாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள். சில செய்திகளை கூடுதல் குறைவாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள்.
எனவே, ஏக இறைவனால் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவன் வழங்கிய வேதத்திற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.
"அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியா மலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
திருக்குர்ஆன் (5:104)
"அல்லாஹ் அருளியதை நோக்கி யும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடி யாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.
(திருக்குர்ஆன் 4:61)
சகோதரர்களே, இந்த வசனத்தின் கண்டனத்தைப் படித்த பிறகாவது விரைவாக முடிவெடுங்கள். முன்னோர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் சுய விளக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனது தூதரை நோக்கி வாருங்கள். அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழியும் மட்டுமே மார்க்கம் என்பதில் நாம் உறுதியோடு இருப்போம். இதற்கு எதிராக இருக்கும் காரியங்களை விட்டும் விலகி இருந்து, சிறப்பாக செயல்பட்டு அல்லாஹ்வின் அருளால் ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

1 comment:

  1. Blackjack & Casino (Jurisdiction) - Missouri Department of
    Blackjack is one 공주 출장마사지 of the most popular games 전주 출장안마 played in a casino. It is 광주광역 출장샵 most 오산 출장마사지 commonly played in brick-and-mortar 구미 출장안마 hotels, hotels, and other

    ReplyDelete