கசகசா என்ற பொருளை உணவில் சேர்த்து பயன்படுத்தலாமா?
கசகசா என்ற பொருள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களும் பெரும்வாரியாக இதை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்த கசகசா வை ஆங்கிலத்தில் POPPYSEED என்று கூறுகின்றனர்.
இந்த பாப்பி விதை எனப்படும் கசகசா என்பது பாப்பி செடியில்(அபினிச் செடியின் விதைகள்.)விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.
ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்
அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.
இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி
அரேபியா, சிங்கப்பூர், மலோசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.
கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009லிம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004லிம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியத் கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய்
அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.
என்று இணையதள செய்திகள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
போதைப் பொருட்கள் எல்லா வகைகளையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் "பித்உ' (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585)
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்கüடம் விசாரித்தேன். அதற்கு
அவர்கள் "அவை யாவை?'' என்று கேட்டார்கள். நான் "அல் பித்உ, அல் மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343)
கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழி கவனிக்கட்டும்.
1788 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ رواه الترمذي
அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில் குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)
எனவே கசகசா என்ற பொருள் சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதே சரியான வழியாகும்.