இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்
இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்கு மாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.
அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர் என்பதற்கும் ஆதாரமாக ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் அமைந்துள்ளதால் அறிவுடைய மக்கள் யாரும் இது போன்ற கிறுக்குத்தனங்களை ஆதரிக்க முடியாது. மக்களை ஏமாற்றும் இது போன்ற தீர்மான்ங்களை சிந்தனையாளர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பட்தை முதலில் நாம் தெளிவுபடுத்துகிறோம்.
நாட்டில் உள்ள ஊடகங்களும், தமிழக மக்களை உசுப்பேற்றி வந்த தமிழினத் தலைவர்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்? இலங்கை அதிபர் ராஜ்பக்சே போர்க்குற்றம் செய்திருக்கிறார். நிராயுதபாணிகளைக் கொன்று குவித்துள்ளார். சரணடைய வந்த தமிழர்களை ஏமாற்றி சுட்டுத் தள்ளி இருக்கிறார். சிறுவர்களையும் பெண்களையும் கூட கொன்று குவித்துள்ளார். அவரைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்றம் செய்ததற்காக மரண தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவது போலவும் அந்த நேரம் நெருங்கி விட்டது போலவும் படம் காட்டினார்கள்.
திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்டிய கோரக்காட்சிகளும் அதற்கு நியாயம் கிடைக்க உள்ளது என்ற பிரச்சாரமும் எந்த அளவுக்கு இருந்தன என்பதை நாம் அறிவோம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்ன என்பதை அறியாமலே இவர்களே தீர்மானத்தைத் தயாரித்தவர்கள் போல வீறாப்பு காட்டினார்கள். ஆனால் ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தில் இவர்கள் சொன்னது போல் ஒன்றுமே இல்லை.
தீர்மானத்தின் விவரம்:
2009 மே மாதத்தில் இலங்கை அரசு , விடுதலைப் புலிகள் இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில், போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் போன்றவற்றுக்கு இலங்கை அரசுக்கு 3 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு நியமித்த ‘தெரிய வந்த பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு கமிஷன்(எல்.எல்.ஆர்.சி.)’ அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, மனித உரிமை மீறல்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் பரிசீலிக்க வேண்டும். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் விவாதித்து, உரிய ஆலோசனைகளை ஐ.நா. கவுன்சில் அளிக்க வேண்டும்.
இது தான் தீர்மான வாசகம்
அதாவது இலங்கை அரசு நியமித்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லையாம். அதை நிறைவேற்ற வேண்டுமாம். இது தான் தீர்மானத்தின் சாராம்சம்.
இதன் மூலம் இலங்கையில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சில நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் இவர்கள் விழுந்து விழுந்து படம் காட்டியதற்கு ஒரு தீர்வையும் காணோம். போர்க்குற்றவாளியை ஐநா பாதுகாப்புப் படை பிடித்து வந்து தூக்கில் போடப்போவது போல் என்னமோ நடக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பூ இவ்வளவு தானா? இதற்குத் தானா இந்த ஆர்ப்பாட்டம்?
எந்தக் கொடுங்கோல் அரசாக இருந்தாலும் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து விட்டு எஞ்சி இருப்பவர்களுக்கு சில வசதிகளைச் செய்து கொடுப்பது எல்லா நாடுகளிலும் நடக்கக் கூடிய ஒன்று தான். இந்தத் தீர்மானம் இல்லாவிட்டாலும் இதைச் செய்வதற்கு இலங்கைக்கு எந்தச் சங்கடமும் கிடையாது. தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோ, வேலை வாய்ப்பு கொடுப்பதோ ராஜபக்சேவுக்குச் சிரமமானதல்ல. சொல்லப் போனால் நாட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்க இது அவருக்கு உதவவே செய்யும்.
தீர்மானம் என்ற பெயரில் உலக மக்கள் அனைவரையும் எல்லா அரசுகளும் ஏமாற்றியுள்ளன. அவர்களை மன்னிக்கலாம். ஆனால் தமிழர்களின் காவலர்களாக வேடம் போடும் தமிழ்த் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை பார்த்த பிறகாவது அமெரிக்காவும் மற்ற நாடுகளும் சேர்ந்து அயோக்கியத்தனம் செய்துள்ளன என்று கொந்தளிக்க வேண்டுமல்லவா? ஆனால் என்னால் தான் இந்த வெற்றி என்று கருனாநிதியும் ஜெயலலிதாவும் மற்ற அனைத்து தமிழ்ச் சமுதாயக் காவலர்களும் கூறி தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர். ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தால் இவர்கள் அமெரிக்கக் கைக்கூலிகளாக இருக்க வேண்டும். அல்லது அடி முட்டாள்களாக இருக்க வேண்டும்.
பயனற்ற ஒரு விஷயத்துக்காக உலகமே சேர்ந்து குரல் கொடுத்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வழியில் செல்லாது.
அடுத்ததாக ராஜ பக்சே போர்க்குற்றம் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் ராஜபக்சே சந்தித்த நிலையை எந்த நாடு சந்தித்தாலும் அந்த நாடுகள் ராஜபக்சே போல் தான் செயல்படும். தனது நாட்டில் தலைவலியைக் கொடுத்துக் கொண்டு ஆயுதம் தாங்கிப் போராடுவோரை அழிக்க இது போன்ற வழிமுறைகளைத் தான் கையாள்வார்கள். சில நாடுகள் இது போல் செய்யவில்லை என்றால் அவர்கள் ராஜ்பக்சே சந்தித்தது போன்ற நிலையைச் சந்தித்தது இல்லை. அந்த வாய்ப்பு இல்லாததால் தான் சில நாடுகள் போர்க்குற்றம் செய்யவில்லையே தவிர மற்ற எல்லா நாடுகளுமே போர்க்குற்றவாளிகள் தான்.
ஜப்பானில் சரணடைந்த மக்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி அப்பாவிகளைக் கொன்றதற்கு நிகரான ஒரு போர்க்குற்றம் உலகில் நடந்தது இல்லை. வியட்நாம், கவுதமாலா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்க மிருகங்கள் நடத்திய போர்க் குற்றத்தில் இலட்சத்தில் ஒரு பங்காகக் கூட ராஜபக்சேயின் போர்க் குற்றம் இருக்கவில்லை.
ஏன் நமது நாட்டிலும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டிருப்பதும் ராஜ்பக்சே செய்தது போன்ற குற்றம் தான். தமிழகத்தில் நக்ஸலைட்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தேவாரம் என்ற அதிகாரி தலைமையில் நடந்த வேட்டைகளும் இந்த வகையானது தான். வீரப்பனைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி கிராம மக்களைக் கொன்று புதைத்ததும், சித்திரவதை செய்ததும் இந்த வகையானது தான். ஏன் சமீபத்தில் நடந்த என்கவுண்டர்களும் கூட இந்த வகையானது தான். இவை அனைத்துமே சட்டப்படி செய்யக் கூடாத காரியங்கள் தான். இலங்கை அரசு செய்ததும் இது போன்றது தான்.
இதனால் தான் எந்த நாடும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானங்களைக் கொண்டு வருவதுமில்லை. ஆதரிப்பதும் இல்லை. நாளை நமக்கு எதிராகவும் இது போன்ற தீர்மானங்கள் வந்து விடுமே என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.
இதன் காரணமாகவும் நாம் இதை ஆதரிக்க முடியாது. போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டு வந்தால் ராஜ்பக்சே போல் செயல்பட்ட ஜார்ஜ் புஷ் உட்பட அனைவருக்கும் எதிராகத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். உலகை ஏமாற்ற பெரிய போர் குற்றவாளி சிறிய போர்க்குற்றவாளிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் இந்தத் தீர்மானத்தை நாம் ஆதரிக்க முடியாது.
மேலும் இலங்கை அரசு எந்த மாதிரியான போர்க்குற்றம் செய்ததோ அதே போன்ற போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் தான் விடுதலைப்புலிகள்.
யாழ்ப்பானம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். ஒரு முஸ்லிம் கூட அங்கே இல்லாத வகையில் துடைத்து எறிந்தனர்.
மேலும் கிழக்கு மாகான முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களுக்குள் புகுந்து பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற மாபாவிகள் தான் விடுதலைப் புலிகள்.
நாங்கள் இலங்கை சென்றிருந்த போது கொழும்பில் இருந்து புறப்பட இருந்த நாளில் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தார்களே அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் தான். அரை மணி நேரம் நாங்கள் முன்னதாகச் சென்றிருந்தால் அந்தப் பட்டியலில் நாங்களும் இடம் பெற்றிருப்போம்.
கணக்கெடுத்துப் பார்த்தால் ராஜபக்சேயை விட அதிகமான அப்பாவிகளைக் கொன்றவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும். அவர்களை ஆதரிப்பவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் வேண்டும். அப்படி இருந்தால் தான் போர்க்குற்றம் குறித்த தீர்மானம் நேர்மையானதாக இருக்க முடியும்.
புலிகள் ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடிகிறது என்பதை நியாயமான பார்வை உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உலக முஸ்லிம் சமுதாயத்தால் மறக்க முடியாத விடுதலைப் புலிகளின் வெறியாட்டக் காட்சிகளில் சில.
காத்தாங்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த மக்கள் மீது புலி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறுவர்கள் முதியவர்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ராஜ பக்சேய்யைவிட படு பயங்கரமான குற்றத்துக்கு இவை சாட்சிகள். ராஜ பக்ச்சே கோவிலுக்குள் அல்லது சர்ச்சுக்குள் புலிகள் நடத்தியது போன்ற பயங்கரவாதத்தை நிகழ்த்தியதில்லை .
Jazakallhu Hairan.