பொறாமையால் ஏற்படும் தீங்குகள்
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
وَمِنْ شَرِّ
حَاسِدٍ إِذَا حَسَدَ - பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இறுதி வசனத்தின் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு மனிதனிடமிருந்து நமக்குக் கேடு வருவதாக இருந்தால், பொறாமையினால்தான் கேடு வரும். நமக்கு எவன் கேடுசெய்தாலும் கண்டிப்பாக அதில் பொறாமை இருக்கும். அதனால்தான் தெரிந்தவர்களுக்குக் கேடுசெய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு மத்தியில் எந்தக் கேடும் நடப்பதில்லை.
நீங்கள் யார்?
என்று எனக்குத் தெரியாவிட்டால் நான் யார்? என்று உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எனக்கு எந்தக் கேடும் செய்ய மாட்டீர்கள். நானும் உங்களுக்கு எந்தக் கேடும் செய்யமாட்டேன். நீங்கள் உங்களது வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பீர்கள். நான் எனது வேலையை மட்டுமே செய்து கொண்டிருப்பேன்.
ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்ற இருவர் டீக்கடையில் வேலை பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்விருவரில் ஒருவர் கோடீஸ்வரனாக ஆகிவிட்டால், நம்மோடு வேலைக்குச் சேர்ந்தவன் கோடிஸ்வரனாகி விட்டானே என்று தன்னைத் தானே அங்கலாய்த்துக் கொண்டு அவன் மீது பொறாமை கொள்கிறான். இவனைத் தவிர இன்னும் பல பேர் அடித்தட்டில் இருந்து முன்னேறி கோடிஸ்வர்ர்களாக ஆகியிருப்பார்கள். அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ள மாட்டோம்.
நம்மோடு ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்தவன். நாம் 100 மதிப்பெண் வாங்கும்போது இவன் 60 மதிப்பெண்தான் வாங்கினான். ஆனால் இன்று கலெக்டராக (மாவட்ட ஆட்சியர்) ஆகிவிட்டானே என்று மனம்தாங்கிக் கொள்ளாமல் பொறுக்காமல் அவன் மீது பொறாமை கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளக்கூடியவனையெல்லாம் நாம் உலகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படி இதுபோன்று பிறர் மீது பொறாமை கொள்பவன் பொறாமை கொண்டு, மற்றவன் மீது தவறான வதந்திகளைப் பரப்புவது, அவனுக்கு ஏதேனும் கேடுசெய்வது, அல்லது வேறெதாவது ஒன்றின் மூலம் பொறாமையினால் இடைஞ்சல்கள் கொடுத்துக் கொண்டே இருப்பது என பொறாமையால் பல விதமான கேடுகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.