Sunday, June 05, 2011

மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவோம்.


எழுத்து : எம். முஹம்மது சலீம், மங்கலம்

வழிகெட்டவர்களின் பண்பு.

இஸ்லாமிய வளையத்தை விட்டு வெளியேறிய நிலையில், தனி மதங்களாக இயங்குகிற  காதியானிசம்சூபியிஸம், ஷியாயிஸம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பவர்கள், இவர்கள் இஸ்லாத்திலுள்ள ஏதாவதொரு அல்லது முக்கியமான சில கோட்பாட்டை மறுத்தோ அல்லது மாற்றியோ அதை தங்களுக்கு சாதகமாக பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, இங்கு இரு கூட்டத்தாரை பற்றி மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
அஹ்லே குர்ஆனிகள் :
முதலில், "குர்ஆன் மட்டுமே மார்க்கம்; ஹதீஸ் மார்க்க ஆதாரமில்லை'' என்று சொல்லக்கூடிய அஹ்லே குர்ஆனிகளைப் பற்றி காண்போம். இவர்களின் சித்தாந்தம் "கவாரிஜ்கள்' என்ற வழிகேடர்களின் நகலாகும். இந்த கவாரிஜ்கள் எப்படி உருவானார்கள்? என்பதை பார்ப்போம். உஸ்மான் (ரலி) அவர்களை கொன்ற கலகக்காரர்கள் மக்களோடு மக்களாக கலந்திருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு மதினாவில் மிகைத்திருந்த இக்கட்டான நேரத்தில்தான் அலீ (ரலி-) அவர்கள் ஆட்சிகட்டிலில் அமருகின்றார்கள். அந்த வேளையில் கலகக்காரர்களை கண்டுபிடித்து கொல்லவேண்டும் என்ற கருத்தை சில நபித்தோழர்கள் முன்வைத்தார்கள். தற்போதுள்ள தடுமாற்றமான ஆட்சி நிலையை சீர்படுத்திய பிறகு கோரிக்கையை நிறைவேற்றுவதாக அலீலி (ரலி) அவர்கள் மறுப்பளித்தார்கள். இருதரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து துளிர்விடாததின் விளைவாக இரு பெரும் போர்களை இந்த முஸ்லிம் சமுதாயம் சந்தித்தது.

ஹிஜ்ரி 36ல் ஆயிஷா (ரலி) அவர்கள் மற்றும் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஜமல் யுத்தம் (ஒட்டகப்போர்) நடந்தது, அதையடுத்து, ஹிஜ்ரி 37ல் சிப்பீன் போர்  நடந்தது. இந்த போர் முஆவியா (ரலி) மற்றும் அலீ (ரலி) அவர்களின் தரப்பினர்களுக்கு இடையே நடைபெற்றது. இப்போருக்கு பிறகு, இருதரப்பினரும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தார்கள். இந்த காட்சியை கண்டு, கேள்விப்பட்டு கலவரமடைந்த கலகக்காரர்கள், "அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விற்குரியது' என்று  திருமறை வசனத்திற்கு தப்பான விளக்கம் கொடுத்து  சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். இந்நேரத்திலே, ஹதீஸ்களில் கொட்டிக்கிடக்கின்ற உடன்படிக்கை செய்வதற்கான ஆதாரங்களை நபித்தோழர்கள் எடுத்துக் காட்டினார்கள். அப்போதுதான், ஆட்சியாளரையே கொன்று அராஜகம் புரிந்தவர்கள், "தங்களின் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; தங்களுக்கு வந்திருக்கின்ற ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும்' என்பதற்காக முதன் முதலில் ஹதீஸ்களை மறுத்தார்கள். "நபிமொழிகள் மார்க்கத்தின் ஆதாரங்கள் கிடையாது' என்று கூக்குரலிட்டார்கள். தங்கள் பாதுகாப்புக்கு பாதகமாக இருக்கிற மார்க்கத்தின் ஆதாரத்தை ஏற்பதற்கு மறுத்தார்கள். அதை ஏற்று கொண்டவர்கள் காஃபிர்கள் என்று கொக்கரித்தார்கள். இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தின் வளையத்தை விட்டு இறை மறுப்பாளர்களாக வெளியேறினார்கள்.
முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் இடையில் ஹிஜ்ரி 36ல் முஹர்ரம் முதல் 10 ம்நாள் பெரும்போர் வெடித்தது. அதில் பல உயிர்கள் பலியாயின. முஆவியா (ரலி) அவர்களின் அணி சார்பாகக் கலந்துகொண்ட நபித்தோழரான அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் ஆலோசனையின் பேரில் போரின் நடுவில் முஆவியா (ரலி) அவர்களின் அணியில் இருந்து அல்குர்ஆன் உயர்த்தப்பட்டது. உடனே போரும் நிறுத்தப்பட்டது. இறுதியில் ஈரணிகளும் சமரசம் செய்வதென உடன்பாட்டிற்கு வந்தனர். இங்கு தான் ஹவாரிஜ்கள் குர்ஆன் வசனங்களுக்குத் தவறான விளக்கங்களை முன்வைத்து வெளியேறினர்.
(ஃபத்ஹுல்பாரி)
உடன்படிக்கை நடைபெற்று முடிந்ததும் அது மனிதச்சட்டம். மனிதனுக்குக் கட்டுப்படுவது கூடாது எனக் காரணம் கூறினர். பின்னர் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியை விட்டுப் பிரிந்து சென்றதுடன், அவர்களைக் காஃபிர் என்றும் கூறினார்கள்.  
  (ஃபத்ஹுல்பாரி, பாகம் : 12, பக்கம் : 153)
திருக்குர்ஆனின் கட்டளைகளை முழுமையாக படிக்காததால் திருக்குர்ஆனின் கட்டளைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கும் சட்டங்களை கூறும் அதிகாரம் இறைவனால் வழங்கப்பட்டுள்ளது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 7:157)
ஷியாக்கள் :
இன்னொரு பக்கம் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியை ஆதரிக்கின்றோம் என்று சொன்னவர்கள், அலி (ரலி) அவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் வரம்பு மீறிச் சென்றார்கள். ஆரம்பத்தில் ஆட்சியை ஆதரிக்கின்றோம் என்று சொன்னவர்கள், நாளடைவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்த்தி பேச ஆரம்பித்து விட்டார்கள். முதல் கலீஃபாவாக வரவேண்டியவர் அலீ (ரலி) அவர்கள் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனிப்பட்ட முக்கியமான இரகசியமான விஷயங்களை அலி (ரலி) அவர்களுக்கு அறவித்துள்ளார்கள் என்றெல்லாம் மார்க்கத்தின் எல்லை மறந்து பசப்ப ஆரம்பித்தனர். கடைசியில் தனி மதத்தையே தோற்றுவித்து விட்டார்கள்.
இந்த உலகத்தின் பிரதிபலனை மட்டுமே பிரதானமாக நோக்கமாக கொண்டு மார்க்கத்தின் போதனைகளை பொருட்படுத்தாமல் வாழ்பவர்கள் அல்லது அதற்கு ஏதுவாக மார்க்கத்தை உருமாற்றி பின்பற்றுபவர்கள் பல பாரதூரமான பாவகரமான சிந்தனைகளுக்கு பலியாகிக்கிடக்கின்றனர். அனைத்து வழிகேட்டினரும் மார்க்க விஷங்களில் தங்களது சித்தாந்தங்களுக்கு தோதுவாக இருப்பதை மட்டும் எடுத்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இறைத்தூதர் விடுத்த எச்சரிக்கை.

 

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி (5063)
நோன்பு, தொழுகை, திருமணம் என்ற மூன்று விஷயங்களும் நபிகளாரின் வழிகாட்டுதல்களுள் உள்ளவைதான். இந்த மூன்று காரியங்களை நம்மால் இயன்றளவு கடைபிடிக்க வேண்டும். இவற்றில் ஒன்றை மட்டும் செய்வதாக சொல்-லிக்கொண்டு மற்றவற்றை புறக்கணிப்பது என்ற நிலை நம்மிடம் இருக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதுபோல, நாம் நீதமாக வாழவேண்டும். எந்நேரத்திலும் நீதிதவறி வாழகூடாது. சமுதாயத்தில் மதிப்புமிக்கவர், எளிமையானவர், நன்கு அறியப்படுபவர், அறியப்படாதவர், உறவினர், உறவினர் அல்லாதவர் இப்படி யாருக்காகவும் நீதியை தளர்த்திவிடக்கூடாது. மாறாக, நமது சுயநலத்துக்காக ஆளைப்பார்த்து நீதியை வளைப்பது, தளர்த்துவது, கண்டுகொள்ளாமல் விடுவதெல்லாம் தவறு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இதை பின்வருகின்ற சம்பவத்தின் மூலம் அறியலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து  (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?'' என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?'' என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார்.       
நூல் : புகாரி 6788
ஆட்சியாளருக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று இஸ்லாத்தில் கட்டளையிடப்பட்டுள்ளது. அதை விடுத்து, தனது சுயநலனுக்காகவும் தேவைக்காகவும் ஆட்சியாளருக்கு கட்டுப்பட்டுவிட்டு மற்ற விஷயங்களில் கட்டுப்படாமல் மாறு செய்வதுமாபெரும் குற்றம் என்பதை பின்வரும் நபிமொழியில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். எனவே எப்போதும் மார்க்கத்திற்கு ஏற்றவகையில் ஆட்சியாளருக்கு அழகிய முறையில் விசுவாசமாக இருக்கவேண்டும். இல்லையெனில் மறுமையில் கைசேதப்பட்டவர்களாக இருப்போம் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமைநாளில் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன் ஆவான். இன்னொருவன் (ஆட்சித்) தலைவரிடம் தனது உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிராமணம் செய்து கொண்டவன். தான் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பான்; இல்லையென்றால் அவருக்கு விசுவாசமாக நடக்க மாட்டான். மற்றொருவன் அஸ்ர் நேரத்திற்குப் பிறகு தனது வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, "இந்தப் பொருள் இன்ன (அதிக) விலை கொடுக்கப்(பட்டு வாங்கப்) பட்டது'' என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து, அதை உண்மையென நம்பவைத்து (தன் வாடிக்கையாளர்) அதை எடுத்துக்கொள்ளச் செய்தவன் ஆவான்.                                          
 நூல் : புகாரி (7212)

இவர்கள் முஸ்லிம்களா?

மார்க்கம் சம்பந்தமாக நமக்குள் கருத்துவேறுபாடுகள் வரும்போது அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னபடி செயல்பட்டால் நமக்குள் பிரச்சனைகள் நீங்கி அமைதியாக வாழலாம். மாறாக, குர்ஆன் ஹதீஸை முழுமையாகப் பின்பற்றாமல் அதில் தமக்கு சாதகமானதை மட்டும் (சிலதை மட்டும்) ஏற்றுகொண்டு வாழ்ந்தால் அல்லது அதை விடுத்து கண்டதையெல்லாம் மார்க்கமாகப் பின்பற்றி வாழ்ந்தால் நாம் நன்றாக நம்பிக்கைக் கொள்ளாமல் ஏதோ பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருப்பதாகத் தான் அர்த்தம். அதுட்டுமின்றி, மறுமை நாளில் இறைவன் முன் குற்றவாளிகளாக கேவலப்பட்டு நிற்கும் நிலை வந்துவிடும். இதை பின்வரும் வசனங்களின் வாயிலாக விளங்கலாம்.
தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான். "அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர். 
 (அல்குர்ஆன் 24:46,48)

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, "சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.   
(அல்குர்ஆன் 4 : 150)

இத்தகையவர்களுக்குரிய பரிசு

முழுமையான இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவேண்டும் எனில் முதலில் மார்க்கத்தின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப்படுபவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில். இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவனின் தண்டனையைப் பெற்ற கைசேதப்பட்ட மக்களாக பரிதவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். மோசமான கேவலமான நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு திருமறையில் இறைவன் எச்சரிக்கின்றான்.
வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி- இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக
இல்லை.
(அல்குர்ஆன் 2 : 83,84,85)
அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, "சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.  
 (அல்குர்ஆன் 4 : 150)
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதாக சொல்-லிக்கொண்டு பல முஸ்லிம்கள், அவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அடுத்தவர்களுக்கு கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
திருத்தூதரை பின்பற்றுகிறோம் என்று சொல்-லிக்கொண்டு முன்னோர் களை பின்பற்றுவதை பார்க்கின்றோம். கொடுக்கப்பட்ட கடமைகளில் சிலதை பின்பற்றிவிட்டு சிலதை பொருட்டாகவே மதிக்காமல் வாழ்வதை பார்க்கின்றோம்.
அதுபோல தடுக்கப்பட்ட காரியங்களில் சிலதை மட்டும் விட்டும் விலகிக்கொண்டு சிலதை கண்மூடித்தனமாக காலங்காலமாக கடைபிடித்து வருதை காண்கிறோம்.
இன்னும் சொல்வதென்றால், மார்க்கத்தின் கட்டளைகளில் சிலதை மட்டும் கொள்கையாக கருதிச் செயல்பட்டு, அதைபற்றி மட்டும் பிரச்சாரம் செய்வதால் பல்வேறு பிரிவுகளாக முஸ்லி-ம்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த வகையில், மார்க்கத்தில் சொல்லப்படும் வணக்க வழிபாடுகளை பற்றி மட்டும் எடுத்துச்சொல்வோம் என்று ஒரு பிரிவினர். மாற்றுமத சகோதரர்களுக்கு அழைப்புப்பணி செய்வதுதான் முக்கியமானது;

மஸாயில்களைப் பற்றி பேசவே மாட்டோம் என்று சிலபிரிவினர்.

அரசியல் போன்ற உலக விஷயங்களில் மட்டும் களமிறங்குவோம் என்று சில பிரிவினர்கள். ஜிகாத் சம்பந்தமான வசனங்களை மட்டும் தூக்கிவைத்துக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவது தான் முஸ்லிம்களின் முதன்மையான இலட்சியமாக இருக்கவேண்டும் என்று ஒரு பிரிவினர். நன்மைகளை மட்டும் ஏவுவோம், தீமைகளைத் தடுக்கமாட்டோம் என்று சொல்லும் ஒரு பிரிவினர். இவ்வாறு, மார்க்க சிந்தனைகளில் சிலதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை கண்டுகொள்ளாமல் இருப்பவர்களை ஒதுக்குபவர்களைப் பார்க்கின்றோம். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவினரும் ஒரு பெயரில் இயக்கமாக சங்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள பணிகள் மற்றும் காரியங்களில் எதையும் மறுக்காமல் மறைக்காமல்  முடிந்தளவிற்கு முழுமையாக கடைப்பிடிப்பவர்களாக முஸ்லிம்கள் நாம் இருக்க வேண்டும். இதை விளங்கி வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெற நமக்கு இறைவன் உதவிபுரிவானாக.

(மே 2011 தீன்குலப்பெண்மணி)


No comments:

Post a Comment