Sunday, May 08, 2016

பெண்களின் உரிமைகள்

ஆண்களுக்கு அவர்கள் பாடு பட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:32

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியாக வருவதற்கு முன்னால் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார்கள். அபூஸலமாவின் மூலமாகச் சில குழந்தைகள் உம்மு ஸலமாவுக்கு இருந்தன.

நபியவர்கள் குடும்பச் செலவிற்காக உம்மு ஸலமாவிற்குக் கொடுக்கும் தொகையில் தனது முன்னால் கணவர் அபூஸலமா மூலமாகப் பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கூலி கிடைக்கும் என்று சொன்னார்கள். தடையேதும் போடவில்லை.
அப்படியெனில் கணவனிடமிருந்து மனைவிக்குக் கிடைத்த பொருளா தாரத்தில் அந்தக் கணவருக்குச் சம்பந்தமில்லாத குழந்தைகளுக்கு, அதாவது வேறொரு கணவன் மூலமாகப் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் தாய் என்ற அடிப்படையில் செலவு செய்தால் அது கூடுதலான கூலியை இறைவனிடம் பெற்றுத் தரக்கூடிய காரியம் எனப் புரிந்து கொள்ளலாம்.
கணவனின் அனுமதி தேவையில்லை, செலவழித்துக் கொள்ளலாம், மறுமையில் கூலியும் கிடைக்கிறது. இதுவும் இஸ்லாம் பெண்களுக்குச் செலவு செய்வதற்காக வழங்கியுள்ள உரிமையாகும்.
இதுபோக பெண்களுக்கு சுய செல்வமும் இருக்கத்தான் செய்யும். அதாவது வாரிசு முறையில் கிடைத்த சொத்து இருக்கலாம். அல்லது தகப்பனார் கொடுத்த அன்பளிப்புகள் இருக்கலாம். அல்லது கணவன் செலவுக்காகக் கொடுத்ததில் சிக்கனமாக செலவு செய்துவிட்டு சேகரித்து வைத்திருக்கலாம். இப்படி நகை நட்டுக்கள் என்று பெண்களுக்கு என தனி சொத்துக்களைச் சேர்த்து வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் மனைவிக்குரியதுதான்.
அதுபோக கணவனே அடிக்கடி அன்பளிப்பாக நகை நட்டுக்களை வாங்கிக் கொடுப்பான். இப்படி மனைவிக்குக் கணவன் கொடுத்தால் அது அவளுக்குரிய அன்பளிப்பாகத் தான் ஆகும். அவளுக்குத் தான் அது சொந்தம்.  கணவன் கொடுக்கும் போதே இது எனது சொத்து, நீ அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் உரிமை என்னுடையது என்று சொன்னால் அதில் மனைவிக்கு அனுபவிக்க மட்டும் தான் உரிமையுண்டே தவிர, அவற்றை தன்னுடைமை என உரிமை கொண்டாட முடியாது.

இப்படி பெண்கள் தங்களுக்குரிய சொத்துக்களை மார்க்கத்திற்காகவும், நன்மையான காரியங்களுக்காகவும் பயன்படுத்தினால் கணவன் அதில் தலையிட உரிமையில்லை என்றும் மார்க்கம் குறிப்பிடுகிறது. கணவனின் அனுமதியைப் பெறாமலேயே அவற்றைச் செலவிடலாம்.
எவ்வளவு பெரிய உரிமை இது?  கணவனுக்குரிய பொருளையும் அவனைக் கேட்காமல் செலவு செய்யலாம், தனக்குரியதையும் கணவனிடம் கேட்காமலேயே செலவு செய்யலாம் என்பது பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கிய கூடுதலான உரிமையாகும். பெண்ணுக்கு இவ்வளவு உரிமையை இஸ்லாம் வழங்குகிறது என்பதை உணர்ந்து ஆண்கள் செயல்பட வேண்டும்.
இதற்குச் சரியான சான்றாக பெருநாள் தினத்தன்று நபியவர்கள் பெண்களுக்கென திடீரென நடத்திய குத்பா உரை சம்பவத்தை ஆதாரமாகக் கொள்ளலாம்.
பெருநாள் தினத்தில் நபியவர்கள் தொழுகை முடித்துவிட்டு பெருநாள் குத்பா உரை நிகழ்த்துகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு எட்டிய அளவுக்குப் பெண்களுக்கு உரை எட்டவில்லை என நபியவர்கள் நினைக்கிறார்கள். அதன் பிறகு பெண்கள் பகுதிக்கு பிலால் (ரலி) யுடன் சென்று பிரத்யோகமாக மீண்டும் தனி குத்பா உரை நிகழ்த்துகிறார்கள். அதில் தர்மம் சம்பந்தமான செய்தியைச் சொல்கிறார்கள். பெண்கள் மனமுருகி தங்களின் அணிகலன்களான காதணி, கழுத்தணி, கால்தண்டை போன்ற நகைநட்டுக்களை பிலால் (ரலி) விரித்த விரிப்பில் தர்மமாக இடுகிறார்கள்.
இது தற்செயலாக நடந்த சம்பவம் தான். நபியவர்கள் இன்னது தான் பேசுவார்கள் என்று பேசும் வரைக்கும் ஸஹாபியப் பெண்களுக்குத் தெரியாது. கணவன்மார்களிடம் தர்மம் செய்வதற்கு அனுமதி கேட்டிருப்பதற்கும் வாய்ப்பே கிடையாது. நபியவர்களின் பேச்சைக் கேட்டு அந்த சபையிலேயே பெண்களாக எடுத்த முடிவின் அடிப்படையிலேயே தங்களது நகைகளை மார்க்கத்திற்காக, பைத்துல்மாலுக்காகக் கொடுக்கிறார்கள்  எனில் இது கணவனிடம் அனுமதி பெறாமலேயே பெண்கள் செலவிட லாம் என்பதற்குச் சிறந்த சான்றாக உள்ளது.
இந்தச் சம்பவம் புகாரியில் 98, 863, 964, 1431 இதுபோன்று நிறைய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம் பெண்களுக்கு எந்த வகையில் வந்திருந்தாலும் தங்களுக்கென உரிமையாகிவிட்டால் அதைச் செலவழிப்பதற்கு கணவனின் அனுமதி பெறாமலேயே தங்களின் சுய முடிவின் அடிப்படையில் செலவழிக்கலாம்.  பெண்களின் செல்வத்திற்குப் பெண்கள் தான் சொந்தக்காரார்கள் என்பது இதிலிருந்து விளங்கும் முக்கியமான விஷயமாகும்.
அதுபோன்று அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
ஆண்களுக்கு அவர்கள் பாடு பட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:32
ஆக, இவ்வளவு சான்றுகளையும் வைத்துப் பார்க்கும் போது பெண்களுக்கு இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை போன்று எந்த மார்க்கத்திலும் மதத்திலும் வழங்கப்படவே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிற சமுதாயங்களில் பெண்கள் பெயரில் சொத்து வைத்துக் கொள்ளவே கூடாது என்றெல்லாம் உள்ளது.
அதாவது, உலக நடைமுறையில் சொத்துக்கள் கணவன் பெயரில் இருக்க வேண்டும். இல்லையெனில் தகப்பனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதுதான் பெண்களின் தலைவிதி என்று வைத்திருந்தார்கள்.
இஸ்லாம் அன்றைய காலத்தில் மஹர் என்ற பெயரில் பெண்களுக்குச் சொத்துரிமையை நிலைநாட்டியது. வாரிசு என்ற முறையில் சொத்துரிமை, அன்பளிப்பு வகையில் சொத்துரிமை,  அதுபோக தன்னால் வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடியுமானால் அதுபோன்ற சொத்துரிமைகளையும் பெண்கள் தங்கள் பெயரிலேயே வைத்துக் கொள்ள அனுமதியும், உரிமையும் வழங்கியுள்ளது.
எனவே பெண்கள் வேலைக்குப் போய் தான் சம்பாதித்து குடும்பத்தைப் பேணவேண்டும் என்கிற நிலை நிர்பந்திக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற பெண்களுக்கு கிடையாது.
ஆக, ஆண்களும் மார்க்கத்தைப் பேணி, பெண்களும் மார்க்கத்தைப் பேணி தன்னிறைவுடையவர்களாக வாழ்வதற்கு இஸ்லாம் வழிவகை செய்கிறது. இதுபோன்ற சுதந்திரத்தைக் கொடுத்து பெண்கள் தன்னிறைவாக வாழ்வதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
குடும்பம் என்பது மனைவி மட்டுமல்
இதுபோக ஆண்கள் மனைவிமார்களுக்குச் செலவு செய்வதைத்தான் பார்த்தோம். இதில் குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றாலேயே மனைவிக்குச் செலவு செய்வது தான் என்று சிலர் நினைப்பது முற்றிலும் தவறானது.
முழு வருவாயையும் மனைவிக்கு மட்டுமே செலவு செய்வது கூடாது. பலர் வெளிநாடுகளில் இலட்சம் இலட்சமாக சம்பாதித்து அனைத் தையும் மனைவி பெயரிலேயே அனுப்பி வைக்கிறார்கள். அத்தனையும் கொடுத்துவிட்டு, கடைசியில் என்றாவது ஒருநாள் மனக் கசப்பு ஏற்பட்டு, விவாகரத்து ஏற்பட்டு விட்டால் அனைத்தையும் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று விடுகிறாள். இதனால் நிற்கதியாக வாழும் ஆண்களைப் பார்க்கிறோம். எனவே பெண்களுக்குத் தேவைக்குப் பொருளாதாரத்தைக் கொடுக்கலாமே தவிர, எல்லாவற்றையும் கொடுத்து விடக்கூடாது.
எனவே இதில் கணவமார்கள் புரிய வேண்டிய முக்கிய செய்தி, மனைவிக்குக் கொடுப்பதைப் போன்று குடுபத்திலுள்ள மற்றவர்களுக்கும் இன்னும் குடும்பத்தில் தேவைப்படுகிற மற்ற செலவுகளையும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது என்பதுதான்.
நாம் சம்பாதிக்கும் பொருளில் தாய் தந்தையருக்கும், மனைவி மக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இன்னும் பல நற்காரியங்களுக்கும் சமூகப் பணிகளுக்கும் செலவழிக்கும் உரிமை ஆணுக்கு இருக்கிறது என்பதை முதலில் புரிய வேண்டும்.
ஆண் சம்பாதிப்பது எதற்கு என்பதைப் பற்றி நபியவர்கள் இப்படிக் கூறுவதைப் பார்க்க முடிகிறது.
உலகிலேயே அழகிய முறையில் உறவாடுவதற்கு தகுதியானவர் யார்? என நபியவர்களிடத்தில் கேட்டபோது, தாய் தான் என்றார்கள். அப்படியெனில் ஒரு ஆண் மகன் சம்பாதிக்கும் பொருளிலேயே முதன் முதலாக செலவு செய்வதற்குத் தகுதியான நபர் தாய் தான். இப்படியே மூன்று முறை கேட்கிறார்கள்; மூன்று முறையும் தாய் என்றார்கள். நான்காவதாக தந்தை என்றார்கள்.  ஒரு ஆண் தாயிற்குப் பிறகு தந்தைக்குச் செலவு செய்திட வேண்டும்.
ஆனால் இன்று பலர், திருமணம் ஆனதும் தாய் தந்தையரை மறந்து விடுவதைப் பார்க்கிறோம். தாய் தந்தையர்களை நடுரோட்டில் விடுகிற நிலைமையைப் பார்க்கிறோம். இது மார்க்கத்திற்கு விரோதமானது. மனைவி என்ற ஒரு பெண் திட்டமிட்டு கணவரைத் தனிக் குடும்பம் நடத்திட வலியுறுத்துகிறாள்.  மாமனார், மாமியாரைப் பார்ப்பதை வெறுக்கிறார்கள். அதற்கு எதையாவது கதைகளை அளந்து கணவனிடம் உசுப்பேற்றி விடுகிறார்கள். ஆண்களும் இதைப் பாவம் என்று விளங்காமல் வாழ்வதைப் பார்க்கிறோம்.
இதில் பெண்கள், தாய் தந்தையரைக் கவனிக்காத பாவியாக தமது கணவனை ஆக்குகிறோம், நரகவாதியாக மாற்றுகிறோம் என்கிற குற்ற உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள். இவையெல்லாம் மார்க்கத்தில் சரியான காரியங்களா? என்று பகுப்பாய்ந்து பெண்கள் தங்களைப் பேணிக் கொள்ள வேண்டும்.
எனவே ஆண்கள் தாய் தந்தையரை விட்டுவிட்டு வருகிறார்கள் எனில் அந்த நிலையைத் தூண்டியது, அதனை வலியுறுத்தியது பெண்தான். எனவே பெண்கள் நமது கணவன்மார்கள் தாயைக் கவனித்து சொர்க்கம் செல்ல வேண்டும், தந்தையைக் கவனித்து நரகிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டும், அதில் ஏற்படுகிற சிரமங்களை நாம் தாங்கிக் கொண்டு கணவனைப் பெற்றோர்களைப் பேணுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
இன்னும் சொல்வதாக இருந்தால் தாய் தந்தை என்று இருப்பதுதான் கணவன் மனைவிக்கிடையேயுள்ள பிரச்சனைகளையும், குழப்பங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.
பெண்களில் அதிகமானோர், தனிக் குடும்பமாக வாழ்வது சரியானது என நினைக்கிறார்கள். ஆனால் இது பல கட்டங்களில் மார்க்கத்தின் வரம்புகளை மீறுவதற்கு வழிவகை செய்கிறது.
இவ்வுலக வாழ்விலும் பல கட்டங்களில் எதிர்பார்த்த நன்மைக்குப் பதிலாக எதிர்ப்பார்ப்புகள் பொய்த்து தீங்கு நேரிடுவதைப் பார்க்கிறோம். குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையைக் கவனிப்பதற்கு தந்தையால் முழு நேரம் செலவிட முடியாது. தாயால் கூட முழுநேரமாக முடியாது.
பெரும்பாலான நேரங்களில் தாத்தா பாட்டியாக இருக்கிற கணவனின் தாய், தந்தையர் அல்லது மனைவியின் தாய் தந்தையர் தான் பேணி வளர்க்கின்றனர். சில நேரங்களில் தனிக் குடும்பத்தில் குழந்தைகள் கணவன் மனைவியரை சந்தோஷமாகக் கூட இருக்க விடாத சூழ்நிலையெல்லலாம் உள்ளது.
தாய் தந்தையர் இருந்தால் குழந்தைகளைப் பேணுவார்கள், வேலைகளைப் பகிர்ந்து செய்து கொள்ளலாம், தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்கள், பக்கபலாமாக, துணையாக நிற்பார்கள். அதேபோன்று கணவன் வேலைக்குச் சென்று விடுவார்; மனைவி தனியாக இருப்பார். இதுவே பலவிதமான மன அழுத்தத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்தி விடும்.
இவற்றையெல்லாம் மாற்றி இயல்பாக வாழ்வதற்கு கணவனின் பெற்றோருடன் இருப்பதே சிறந்த வழிமுறையாகும். அதற்குத் தேவையான பொருளாதாரமும் கணவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படியிருந்தால் மறுமையில் கணவன் சிறப்பான அந்தஸ்தில் இருக்க முடியும். பெண்களாகிய நாமும் மாமியார் மாமனாரைப் பார்ப்பதினால் மறுமையில் சிறப்பான இடத்தைப் பெறமுடியும். ஆண்கள் பெற்றோருக்குச் செய்கிற கடமைகளில் மனைவி குறுக்கிடவே கூடாது. குடும்பத்தினரில் யாருக்கெல்லாம் பொருளாதாரத்தில் கணவன் செலவழிக்க வேண்டும் என ஒரு பட்டியலேயே நபியவர்கள் போடுகிறார்கள்.
தாய் தந்தையரையும் சகோதரிகளையும் சகோதரர்களையும் பிறகு அதற்கடுத்த அதற்கடுத்த சொந்தங் களையும் கவனிக்கச் சொல்கிறார்கள் நபியவர்கள்.
ஆனால் சமூக அமைப்பில் ஒரு மனைவிக்கு வில்லியாக சித்தரிப்பது, கணவனின் உடன் பிறந்த சகோதரிகளைத் தான்.
உண்மையில் கணவனின் உடன் பிறந்தோர்களிடம் ஒரு பெண் எவ்வளவு நேசபாசமாக நடக்க வேண்டும்?
கணவன் சம்பளம் வாங்கியதும் முதலில் உங்களது தாயாருக்கும் பிறகு உங்களது தந்தைக்கும் கொடுங்கள் என்று சொல்பவளே நல்ல மனைவியாவாள். உங்களது அக்கா தங்கைக்கெல்லாம் ஏதேனும் கொடுத் தீர்களா? என்று கணவனிடத்தில் கேட்பவள் தான். அப்போதுதான் கணவன் அல்லாஹ்விடத்தில் நல்லவனாக முடியும். அப்படி ஒரு மனைவியைப் பெற்றிருப்பவன் குடும்ப வாழ்வில் சிறப்பாகச் செயல்பட முடியும். ஏனெனில் இப்படியொரு நல்ல மனைவியைப் பெற்றதே பெரிய பாக்கியமாக நினைப்பான். வெறுமனே காசு, பணம் மட்டும் நமது சந்தோஷங்களைத் தீர்மானித்து விடாது.
அல்லாஹ்வும் இவ்வாறு தான் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிக்காதே என்று சொன்ன இறைவன் எல்லா இடங்களிலும், அதற்கடுத்ததாக உங்களது பெற்றோர்களைப் பேணுங்கள் என்றே சொல்கிறான்.
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ'' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!
அல்குர்ஆன் 4:23, 24
இதுபோன்ற வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.
பார்க்க: அல்குர்ஆன் 4:36,37, 6:151
உங்கள் பெற்றோருடன் அழகான முறையில் தோழமையாக இருந்து கொள் என்றும் கூறுகிறான். எனவே பெற்றோர்களைப் பேணுவதைப் பற்றி மார்க்கம் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. எனவே ஆண்களுக்கு பெற்றோரைப் பேணுவது கட்டாயக் கடமை. அதனை மனைவிமார்கள் தூண்ட வேண்டும். எனவே பெண்களும், ஆண்களும் பெற்றோரையும் மாமனார் மாமியாரையும் பார்ப்பது மார்க்கத்தில் மிகவும் முக்கியமான நன்மை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒருவேளை தனிக்குடித்தனம் போவது தான் மாமியாருக்கு நன்மை என்ற நிலை வந்தால் கூட கணவன் அவர்களது பெற்றோர் விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்வதைத் தூண்டுவது பெண்ணின் முக்கியக் கடமையாகும். அப்போது தான் அது மறுமைக்காக உழைக்கிற குடும்பமாக இருக்க முடியும்.
அப்படிப்பட்ட மறுமை நலனுக்காக உழைக்கிற குடும்பமாக மாறுவோம். இரு உலகிலும் வெற்றி பெறுவோம்.

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி

ஏகத்துவம் மே 2016

No comments:

Post a Comment