Wednesday, June 08, 2016

நோன்பு வைக்க இயலாத ஒருவர் நோன்புக்கு பகரமாக ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற சட்டம்





நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்கு பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன என்று எதிர்மறைச் சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.

சக்தியுள்ளவர்கள் நோன்பு தானே நோற்க வேண்டும். அவர்கள் எப்படி பரிகாரம் செய்ய முடியும் என்று இவர்கள் சிந்தித்ததால் இப்படி இல்லாத அர்த்தம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப குர்ஆனை வளைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது "நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்'' என்ற சலுகை இருந்தது. அதுதான் இவ்வசனத்தில் (2:184) கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

இது குறித்து புகாரியில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.

நூல் : புகாரி 4507


இதில் இருந்து தெரிய வருவது என்ன? மேற்கண்ட வசனம் அருளப்பட்டபோது நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம், அல்லது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கான உணவு என்ற கணக்கில் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தைச் சொல்லவே இவ்வசனம் அருளப்பட்டது என்று தெரிகிறது.


மேலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் நோன்பும் நோற்க வேண்டாம்; பரிகாரமும் செய்ய வேண்டாம் என்ற கருத்தை இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரிகிறது.

இது இப்போது மாற்றப்பட்டு விட்டதால் சக்தி உள்ளவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அவர்கள் நோன்புக்குப் பகரமாக உணவு வழங்க முடியாது.

ஆனால் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்காமல் இருந்ததற்காக பரிகாரம் செய்ய வேண்டுமா என்றால் அது தேவை இல்லை என்பது தான் சரியான கருத்தாகும். ஏனெனில் மேற்கண்ட வசனம் நோன்பு வைக்கச் சக்தியுள்ளவர்களைத் தான் பரிகாரம் செய்யச் சொல்கிறது. நோன்பு வைக்கச் சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையாகாது. எப்போது நோன்பு கடமையாகவில்லையோ அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. எப்போது ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாக கூறியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சக்தியுள்ளவர்கள் நோன்பை விட்டால் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நூல் : புகாரி 4505


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போல் இவ்வசனம் முதியவர்களுக்கு நோன்பைக் கடமையாக்கும் வகையில் அமையவில்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தரவில்லை. எனவே மேற்கண்ட வசனம் சொல்வதற்கு மாற்றமாக அவர்கள் சொன்னதாக இச்செய்தியில் கூறப்படுவதால் இதை நாம் ஏற்க முடியாது.

ஹஜ் செய்ய வசதியில்லாதாவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை. அது போல் நோன்பு நோற்க சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.




2:185. இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு *எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்*எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
2:220.அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். *அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான்*.அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக!26
2:233. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள்  பாலூட்ட வேண்டும்.  அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. *சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்*. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்  என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
2:286. *எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்*. அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
4:28. *அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்*
5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!117 *அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை*. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
6:152. அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! *எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்*. உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
7:42. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். *எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை*.
23:62. *எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்*. நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
65:7. வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். *அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான்*. சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
ஆகிய வசனங்கள் மனிதனின் *சக்திக்கு உட்பட்டதாகவே இஸ்லாத்தின் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன* என்று கூறுகின்றன.
இந்தச் சொற்றொடர் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகும்.
நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்தும்,  உடல்நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாகவும் சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல் போகலாம். ஒருவருக்கு இயலவில்லை என்ற நிலையில் சில கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் கூறும் அரசியல் சட்டங்களை இலங்கையில்  நடைமுறைப்படுத்த நம்மால் இயலாது. ஏனெனில் நம்மிடம் ஆட்சி இல்லை. இலங்கையில்  உள்ள சூழ்நிலையில் இதை நடைமுறைப்படுத்தாமலிருப்பது குற்றமாகாது என்பதற்கும் இவ்வசனங்கள் சான்றுகளாக உள்ளன. இன்னும் கவனமாகச் சிந்தித்தால் இந்தச் சொற்றொடர் இன்னும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதை அறிந்து கொள்ளலாம்.
 


No comments:

Post a Comment