இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்
கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
இஸ்லாம் என்பது அல்லாஹ் விற்குச் சொந்தமான மார்க்கமாகும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்,
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (3:9)
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிட மிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (3:85)
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதன் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (12:40)
இறைவனுக்கு மட்டுமே சொந்த மான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.
(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்! (18:27)
இது அகிலத்தாரின் இறைவனிட மிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (70:43-48)
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் "இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!'' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! (10:15)
நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்க மாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளான்.
நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66:1)
என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
மேலும் பத்ருப் போர் கைதிகள் விஷயமாக நபியவர்கள் சுய முடிவு எடுத்த நேரத்திலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்குப் போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது, ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்தி தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
இறைத்தூதரும் கூட இறை வனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதையே இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர் களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறை வாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3)
(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (6 :106)