Tuesday, May 15, 2012

பைத்தியம் பலவிதம் -தொடர்: 2

உத்தம நபி ஒளியால் படைக்கப்பட்டார்களா?
நபி (ஸல்) அவர்கள் மனிதரல்ல! ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்பது பரேலவிகளின் வாதம். இது எவ்வளவு பைத்தியக்காரத்தமானது என்பதைச் சென்ற இதழில் கண்டோம்.
பரேலவிகள் தங்கள் அறியாமைக்கு ஆதாரமாகக் காட்டுகின்ற சில சான்றுகளை இந்த இதழிலும் பார்ப்போம். அதற்கு முன்னால், நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் கூறுவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை, அவதூறை பரேலவிகள் கூறி வருகின்றனர். முதலில் அதைப் பார்த்து விட்டு அவர்கள் வைக்கின்ற சான்றுகளைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் சொன்னோமா?
நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் என்று நாம் ஒரு போதும், எந்தவொரு காலகட்டத்திலும் சொன்னது கிடையாது. அவ்வாறு சொல்லவும் மாட்டோம். அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்?
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி (வஹீ) வந்தது. இந்த இறைச் செய்தி இனி எவருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறுதிநாள் வரை வராது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அந்த இடத்தை மனித குலத்தில் யாரும் பிடிக்க முடியாது. இந்த அடிப்படையில் அவர்கள் சாதாரண மனிதர் கிடையாது என்றே அடித்து, ஆணித்தரமாகச் சொல்கின்றோம்.
ஆனால் அதே சமயம் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களா? என்றால் நிச்சயமாக, ஒரு போதும் கிடையாது. அந்த வகையில் அவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றோம். இதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. இதற்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் குர்ஆனை மறுத்தவர்கள். காரணம் இந்தக் கருத்தை நாமாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. அல்லாஹ் தான் இவ்வாறு கூறுகின்றான்.
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 18:110
குர்ஆனுடைய இந்த நிலைபாடு தான் நம்முடைய நிலைபாடு! இந்த நிலைபாட்டைச் சொல்லும் போது, "நபி (ஸல்) அவர்களை சாதாரண மனிதர்' என்று நாம் கூறுவதாக பரேலவிகள் நம்மைப் பார்த்துக் குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையில் இவர்கள் குர்ஆனுக்கு மாற்றமான நிலைபாட்டிற்குச் சென்று விட்டு, அதாவது இறை மறுப்பைச் செய்து கொண்டு, நம்மைக் குற்றவாளியாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.
இவர்களுடைய இந்த இறை மறுப்புக் கொள்கையை முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்து விட்டனர். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வளர்ச்சியே சிறந்த சான்றாக அமைந்திருக்கின்றது.
இது தான் நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் கூறுவதாக இவர்கள் சொல்கின்ற அவதூறுக்கும் அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலாகும்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல, ஒளியினால் படைக்கப்பட்ட உன்னதப் படைப்பு என்பதற்குக் காட்டுகின்ற சான்றுகளைப் பார்ப்போம்.
அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த் தளத்திலும் நான் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?'' என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த் தளமே மிகவும் வசதியானது'' என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல் தளத்தில் இருக்கமாட்டேன்'' என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.
இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபியவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை'' என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.
மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடை செய்யப்பட்டதா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை'' என்று பதிலளித்தார்கள்.
நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேதஅறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.
நூல்: முஸ்லிம் 3828
இந்த ஹதீஸிலிருந்து இவர்கள் சொல்ல வருவது என்ன?
நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதரல்ல என்று நபித்தோழர்கள் கருதியதால் தான் நபியவர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது, அபூஅய்யூப் அல்அன்சாரி அவர்கள் மேல் தளத்தில் இருக்க மறுத்து விடுகின்றார்கள். இது தான் இவர்கள் சொல்ல வருகின்ற சான்று.
அதாவது, நபித்தோழர்களே நபியவர்களைச் சாதாரண மனிதராகப் பார்க்கவில்லை என்று இதன் மூலம் நிறுவ வருகின்றார்கள்.
இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால் நபியவர்களுக்கென்று உள்ள தனிச்சிறப்புக்களைப் பற்றி நாம் அறிந்தாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் இருக்கின்றன.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
அல்குர்ஆன் 49:2
இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது; அப்படிப் பேசினால் அவ்வாறு பேசியவர்களின் வணக்கங்கள் பாழாகி விடும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் இந்த உத்தரவு நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டுமென்றால் அன்பளிப்பு வழங்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 58:12
இந்த உத்தரவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பொருந்தாது.
3. உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.
அல்குர்ஆன் 24:63
நபி (ஸல்) அவர்களை, நம்மில் சிலர் சிலரை அழைப்பது போல் அழைக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
இந்த உத்தரவும் நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பொருந்தாது.
4. முஸ்லிம்கள் யாரும் ஒரே சமயத்தில் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் முடிக்கக் கூடாது. ஆனால் இந்தச் சட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும். (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:50
இதிலும் நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகின்றார்கள்.
5. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்üவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்களுக்கு வாழ்வüக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்'' என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?'' என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், "குர்ஆனின் அத்தியாயங்கüலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்üவாசலிலிருந்து வெüயே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்'' என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
அவர்கள் வெüயே செல்ல முனைந்தபோது நான் அவர்கüடம், "நீங்கள் "குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் "அல்ஃபாத்திஹா' அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 4474
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை கூறப்படுகின்றது. இந்தத் தகுதியையும் யாரும் அடைய முடியாது. இதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது.
6. ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள் தனித்தன்மை மிக்கவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
 இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல்பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூ செய்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் (மீண்டும்) அவர்கள் உளூ செய்யவில்லை.
(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், "மக்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கண்கள்தாம் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது'' என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?)' என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள் "''இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும்' என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்று கூறினார்கள். பிறகு "(மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்'' எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள்.
நூல்: புகாரி 138, 859, 3569
இவையெல்லாம் நபி (ஸல்) அவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்ற தன்மைகள். இந்தத் தன்மைகளில் மற்றவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை நெருங்க முடியாது. காரணம், இவை அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் அமைந்தவை. இந்த வகையில் அவர்கள் சாதாரண மனிதர் கிடையாது.
இந்த அடிப்படையில் தான் அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது, நாம் மேல் தளத்தில் இருக்கலாமா? என்று கருதி தயங்கியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கீழ் தளத்திற்கு மாறியிருக்கின்றார்கள். அவ்வளவு தான்.
அபூஅய்யூப் அல்அன்சாரி இவ்வாறு மாறியதற்குக் காரணம், அவர் நபியவர்களை நம்மைப் போன்ற மனிதராகப் பார்க்காமல் வேறு படைப்பாகப் பார்த்திருக்கின்றார்கள் என்பது போன்ற தோற்றத்தை இதில் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸில் அப்படிக் கருதுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. இருப்பினும் இந்த ஹதீஸை இழுத்து வளைத்து நபி (ஸல்) அவர்கள் ஒளியினால் ஆன படைப்பு என்று நிறுவ முன்வருகின்றார்கள்.
இது பரேலவிச சிந்தனையின் பச்சையான பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இவர்களுடைய பரேலவிசக் கொள்கையே நபி (ஸல்) அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்; அவர்கள் மனிதப் படைப்பு கிடையாது என்பது தான்.
இவர்களுடைய இந்தக் கொள்கை மிகவும் ஆபத்தானது; அபாயகரமானது. இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தைத் தகர்க்கக் கூடியது. இதை மக்களிடம் தெளிவுபடுத்தும் போது, "நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர்' என்று நாம் கூறுவதாக இவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.
இவர்களது பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றாலும் இந்த வாதங்கள் ஒவ்வொரு ஏகத்துவவாதிக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலை ஏகத்துவத்தில் விரிவாக எடுத்து வைக்கின்றோம்.
அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் செலுத்திய மரியாதை இந்தத் தவறான, தறிகெட்ட பரேலவிசப் பாதையில் அமைந்ததல்ல. நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு என்ற வட்டத்தின் அடிப்படையில் தான் அமைந்திருந்தது. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) போன்று அனைத்து நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களை மனிதர்களாகவே பார்த்தார்கள். ஏன்? அன்றைய இஸ்லாத்தின் எதிரிகளான மக்கா காபிர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பாகவே பார்த்தனர். அதனால் தான் நபியவர்களை மறுக்கவும் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பாக இல்லாமல் ஒளியினால் படைக்கப்பட்ட அற்புதப் படைப்பாக இருந்தால் அவர்களை அந்தக் காபிர்கள் மறுத்திருக்க மாட்டார்கள்.
"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.
அல்குர்ஆன் 25:7
மக்கா காபிர்களின் எதிர்பார்ப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிடக்கூடாது என்பது தான். அதாவது நபியவர்கள் மலக்காக, ஒளியாக இருக்க வேண்டும் என்று தான் அந்த மக்கள் எதிர்பார்த்தார்கள்.
இது மக்கா காபிர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல! உலகத்தில் தூதர்கள் அனுப்பப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்த எதிர்பார்ப்பில் தான் இருந்தனர். இந்த எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, அதாவது மனிதப் படைப்பாக அந்தத் தூதர்கள் இருந்ததால் தான் தூதரை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
இதோ அல்லாஹ் கூறுகின்றான்:
"மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?'' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
"பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்'' என்பதைக்  கூறுவீராக!
அல்குர்ஆன் 17:94, 95
மக்கத்து காபிர்கள் வைத்த இந்த வாதங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மனிதத் தூதர் தான் என்று நம்பியே நபித்தோழர்கள் ஏற்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்ற வரையிலும், மரணித்த பின்பும் மனிதராகவே பார்த்தார்கள்.
இரத்தம் சிந்திய இறைத்தூதர்
நபி (ஸல்) அவர்கள் பசியுடன் இருந்ததையும், உணவு உண்டதையும், தண்ணீர் அருந்தியதையும் இதன் விளைவாக அவர்கள் மலஜலம் கழித்ததையும் அந்த மக்கள் கண்டார்கள். நபியவர்கள் திருமணம் முடித்ததையும் பிள்ளைகள் பெற்றதையும் கண்கூடாகக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் வெட்டப்பட்டதையும் அதன் விளைவாக அவர்களது உடலில் இரத்தம் பீறிட்டுக் கொப்பளித்ததையும் தங்கள் கண்களால் சந்தேகமின்றி பார்த்தார்கள்.
இவையெல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி நபி (ஸல்) அவர்களை மனிதர் தான் என்பதைத் தெளிவுபடுத்தின.
ஆனால் இந்தப் பரேலவிகள் மட்டும், "நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை மனிதராகப் பார்க்கவில்லை, மலக்காக அல்லது ஒளியாகப் பார்த்தார்கள்' என்பது போன்று சித்தரிக்கின்றார்கள். இதனைச் சிந்தனைக் குருடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
இன்னும் இதுபோன்று நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பிலிருந்து வேறுபடுத்துவதற்காக என்னென்ன உருப்படாத ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.

No comments:

Post a Comment