Sunday, January 01, 2012

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்

குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும். ஒரு வணக்கம் இஸ்லாத்தில் உள்ளதாக அங்கீகரிப்பதாக இருந்தாலும், அல்லது அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்துவதாக இருந்தாலும் அதை இந்த இரண்டின் மூலமே தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் உயிர் மூச்சாக, வழிகாட்டு நெறியாக, வாழ்வியல் வழிமுறையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டியது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டைத் தான். இதுவே நம்மை சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாகும். குர்ஆன், ஹதீஸ் எனும் பாதையில் பயணிக்க வேண்டிய முஸ்லிம்கள் புதிய பாதைகள் பலவற்றை ஏற்படுத்திக் கொண்டு அவ்வழிகளில் பயணிக்கின்றார்கள். அவர்கள் புதிதாக உருவாக்கிய அப்பாதைகள் தங்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்பவை என்பதை ஏனோ உணராமல் உள்ளனர். முஸ்லிம்களை நரகை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகளில் பெரும் பங்களிப்பாற்றுவது மத்ஹபு எனும் ()பாதையாகும். முஸ்லிம்கள் வணக்க வழிபாடு முறைகளில் பல பிரிவுகளாகப் பிளவுண்டு கிடப்பதற்கும், இஸ்லாத்தின் அடிப்படைத் தூண் என்று போற்றப்படுகின்ற தொழுகை முறையிலும் சில முஸ்லிம்கள் வேறுபட்டிருப்பதற்குக் காரணமும் இந்த மத்ஹபுகளே!

கேள்வி பதில்

தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

காஜா முஹைதீன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி பைஹகியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ (2392)

மேற்கண்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். அபூ ளப்யா நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் தஹபீ அவர்களும் கூறியுள்ளனர்.

நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 9, பக்கம் : 103

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 542

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 7, பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 7, பக்கம் : 60

இமாம் அஹ்மது அவர்கள், இந்த ஹதீஸ் மறுக்கப்படவேண்டியது. ஏனென்றால் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா, பாகம் : 1, பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இப்படியும் சில தப்ஸீர்கள்- தொடர்: 11

நாற்பது இரவுகள்
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.


மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.

அல்குர்ஆன் 2:51

தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக மூஸா (அலை) அவர்களை தூர் மலைக்கு வருமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதற்காக நாற்பது நாட்கள் வாக்களித்து நாற்பதாம் நாள் அவ்வேதத்தை பலகைகளில் வழங்கினான் என்று இது தொடர்பான பிற வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதில் இறைவன் மூஸா (அலை) அவர்களுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தான் என்று வருவதால், அவை எந்த மாதங்கள்? அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதை ஆய்வு (?) செய்து அதன் முடிவை விரிவுரை நூல்கள் வாயிலாக இமாம்கள் நமக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அவர்கள் சமர்ப்பித்த விளக்கங்கள் இதோ: ???

தானம், தர்மம்

தவ்ஹீதுக்கு முன் தானம், தர்மம்

தவ்ஹீதுக்குப் பின் கஞ்சத்தனமா? தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலர் லோக்கல் (கிராம, நகர, மாவட்ட அளவிலான) தர்ஹாக்களுக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். தர்ஹாக்களுக்குச் சந்தனம் பூசுதல், விளக்கேற்றுதல், போர்வை போர்த்துதல், உண்டியல் காணிக்கை போன்ற வகைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தார்கள்.

ரீஜினல் அவ்லியா - அதாவது நாகூர், ஏர்வாடி போன்ற மாநில அளவிலான தர்ஹாக்களுக்குப் பயணம் செய்து சென்று தங்கள் கைகளிலிருந்து காசு பணத்தைக் காலி செய்தனர்.

இந்திய அளவில் அஜ்மீர் போன்ற நேஷனல் அவ்லியா, இன்டர்நேஷனல் அளவில் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (பாக்தாத்) போன்ற தர்ஹாக்களுக்குச் சென்று தங்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.

இதுபோக, வீடுகளில் மவ்லிது, கத்தம் பாத்திஹா என்ற அனாச்சாரங்களில் பணம் செலவழித்தனர்.

இந்தச் செலவினங்கள் அனைத்தும் அவ்லியாக்களின் பக்தியின் பெயரால் நடைபெற்றவை.

மற்றொரு புறம் சினிமா, மது, பீடி, கிகரெட், டி.வி. டெக்குகள், ஆடியோ வீடியோ கேஸட்டுகள் என்று தடபுடலாக ஆடம்பர, அனாச்சார வகைகளில் செலவழித்துத் தள்ளினர்.

பொருளியல்தொடர்: 19

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

அமர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். "அல்லாஹ்வின் துதரே என்னிடத்தில் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றது ஆனால் என்னுடைய தந்தை என்னிடம் தேவையுடையவராக இருக்கின்றார்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), "நீயும் உன்னுடைய செல்வமும் உன் தந்தைக்குரியது; நீங்கள் சம்பாதித்ததில் துய்மையானது உங்களுடைய குழந்தைகளே'' என்று கூறினார்கள்.

(நுல் : அபூதாவுத் 3063)

ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் சம்பாத்தியத்தில் ஒரு அளவு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். அந்த அனுமதி என்னவென்றால் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் வீட்டிற்குச் சென்றால் யாரிடமும் அனுமதியில்லாமல் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது பிள்ளை தடுக்கக்கூடாது. அந்த அனுமதி கூட சாப்பிடுவதற்கு மட்டும் தான். அதை எடுத்து வருவது கூடாது.

கணவன் அனுமதியின்றி பொருளை எடுத்தல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:  (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கடம் "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!'' என்று சொன்னார்கள்

(நூல் : புகாரி 5364, 2460, 5359, 5370, 2211, 7161, 7180)

நல்லவராவதும் தீயவராவதும்


நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!

கே.எம். அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1359)

குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 5


கியாம நாளின் அடையாளங்கள்
பி. ஜைனுல் ஆபிதீன்
1.      عَمَّ يَتَسَاءَلُونَ
2.      عَنِ النَّبَإِ الْعَظِيمِ
3.      الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
4.      كَلاَّ سَيَعْلَمُونَ
5.      ثُمَّ كَلاَّ سَيَعْلَمُون

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். 
(திருக்குர்ஆன் 78:1-5)


உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் புகை மூட்டம் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். தஜ்ஜாலைப் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் மேலும் சில விபரங்களைக் காண்போம்.

தஜ்ஜால் இனிமேல் தான் பிறப்பானா? தஜ்ஜால் இனி மேல் பிறந்து வரப் போகிறானா? அல்லது முன்பே பிறந்து பிற்காலத்தில் வெளியே வருவானா? இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். தஜ்ஜாலைச் சந்தித்த விபரத்தை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். எனவே அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதை நாம் நம்பியாக வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தஜ்ஜால் பற்றி அதிக விபரங்கள் கிடைப்பதால் அந்த ஹதீஸை முழுமையாகப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் "அஸ்ஸலாத்து ஜாமிஆ'' (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு "நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர் கூறியதாவது: லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை. அப்பிராணியிடம் "உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?'' என்று கேட்டோம். "நான் ஜஸ்ஸாஸா'' என்று அப்பிராணி கூறியது. "நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்'' எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் "அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ'' என்று அஞ்சினோம். நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். "உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அம்மனிதன், "என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.'' "நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத்தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.'' எனக் கூறினோம். "பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா?'' என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன், "விரைவில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம்'' என்றான். "தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா?'' என்று அவன் கேட்டான். "அதில் அதிகமான தண்ணீர் உள்ளது'' என்று நாங்கள் கூறினோம். "அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும்'' என்று அவன் கூறினான். "ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் "ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது; அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர்'' என்றோம். "உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள்'' என்று அம்மனிதன் கேட்டான். அவர் "மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார்'' என்று கூறினோம். "அவருடன் அரபுகள் போர் செய்தார்களா?'' என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். "போரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்'' எனக் கூறினோம். "அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்'' என்று அவன் கூறினான். நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். "நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்'' என்று அம்மனிதன் கூறினான். இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, "இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா; இது தைபா'' எனக் கூறினார்கள். "இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?'' என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் "ஆம்''என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை; இல்லை; அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5235.

தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பிருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இஸ்லாத்தை எதிர்ப்பான் முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான். அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான். இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் 5237.

"தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர் என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5223

அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.  அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான். "தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408

தஜ்ஜாலின் அற்புதங்கள் இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம். தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான். ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். "மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

"பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

பாழைடந்த இடத்துக்குச் சென்று "உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து'' என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின் தொடரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

"திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூற்கள்: முஸ்லிம் 5228

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார். "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அவர் கூறுவார். "இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?'' என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்'' என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 7132, 1882

இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை. இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்; தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

நூல்: அஹ்மத் 22573

தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம் "நானே உங்கள் இறைவன்'' என்பான். "யாரேனும் நீ தான் என் இறைவன்'' என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். "அல்லாஹ் தான் என் இறைவன்'' என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி),

நூல்: அஹ்மத் 19292

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். "இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),

நூல்: அஹ்மத் 14426

தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: புகாரி 7130

தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?

இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான். "தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),

நூல்: முஸ்லிம் 5228

தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள் இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். மதீனா நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),

நூல்: புகாரி 7125

"தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம் பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 2450

"இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத் எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: அஹ்மத் 23327

மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது. "அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது'' என்பது நபிமொழி.

நூல்: அஹ்மத் 22571

தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று "தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்'' என்பதாகும்.

நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள். தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க கஹ்ப் அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.

"உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்: முஸ்லிம் 5228 தஜ்ஜால் வெளிப்படும் இடம் தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். "அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியாக நில்லுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : திர்மிதீ 2163

தஜ்ஜால் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவான் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்