Sunday, January 01, 2012

இப்படியும் சில தப்ஸீர்கள்- தொடர்: 11

நாற்பது இரவுகள்
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.


மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.

அல்குர்ஆன் 2:51

தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக மூஸா (அலை) அவர்களை தூர் மலைக்கு வருமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதற்காக நாற்பது நாட்கள் வாக்களித்து நாற்பதாம் நாள் அவ்வேதத்தை பலகைகளில் வழங்கினான் என்று இது தொடர்பான பிற வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதில் இறைவன் மூஸா (அலை) அவர்களுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தான் என்று வருவதால், அவை எந்த மாதங்கள்? அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதை ஆய்வு (?) செய்து அதன் முடிவை விரிவுரை நூல்கள் வாயிலாக இமாம்கள் நமக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அவர்கள் சமர்ப்பித்த விளக்கங்கள் இதோ: ???


(அந்த நாற்பது நாட்கள்) துல்கஃதா (30 நாட்கள்) மற்றும் துல்ஹஜ்ஜில் 10 நாட்களாகும் என அபுல்ஆலியா கூறுகின்றார். நூல்: ஜாமிஉல் பயான் பாகம் 2 பக்கம் 62

நாற்பது நாட்கள் என்று தான் குர்ஆனில் உள்ளதே தவிர அது எந்த மாதம் போன்ற மேலதிகத் தகவல்கள் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ தெரிவிக்கப்படவில்லை.  நிலைமை இவ்வாறிருக்க இந்த அறிஞர் அது துல்கஃதா, மற்றும் துல்ஹஜ் மாதத்திலிருந்து 10 நாட்கள் என்று மூஸா (அலை) அவர்கள் அருகில் இருந்ததைப் போன்று துல்லியமான தகவலை தருகின்றார்.

அரபு மாதங்களான, அரபு மொழிச் சொல்லில் பெயரிடப்பட்ட  இந்த மாதங்கள் தான் அரபியரல்லாத மூஸா நபி சமுதாயத்துக்கும் இருந்தது என்பது மடமையாகும் என்பது கூட இவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது

மேலும், இது நமக்குத் தேவையில்லாத வேலை. அது எந்த மாதமாக இருந்தால் நமக்கென்ன? ஏன் இல்லாததை நாமாக வலிந்து கொண்டு விளக்கம் என்ற பெயரில் அள்ளிக் கொட்ட வேண்டும்?

இது மட்டுமல்ல. இன்னும் முக்கிய விவரமும் நமக்கு தரப்படுகின்றது. அது.....



அந்த நாற்பது இரவுகளில் தூர் மலையிலிருந்து இறங்கும் வரை மூஸா (அலை) அவர்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என நமக்கு தகவல் வந்தது.

அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) அவர்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என்று மேற்கண்ட விரிவுரை நூலில் அதன் தொடர்ச்சியில் கூறப்படுகின்றது.

இது எப்படி சாத்தியாமாகும்? இறைவன் இதைக் கூறியிருந்தால் நாம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்க மாட்டோம். ஏனெனில் இறைவனுக்கு இது சாத்தியமே. ஆனால் இறைவன் இவ்வாறு கூறாமல் இந்த இமாம்கள் சுயமாகக் கூறும் இது போன்ற கூறுகெட்ட விளக்கங்களுக்கு நாம் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?

மேலும் இன்னார் இத்தனை நாட்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என்றெல்லாம் யாராலும் கூறமுடியாது. காரணம் யாருக்கும் தெரியாமல் ஓரிரு தருணங்களிலாவது அவர் மலம் கழிக்கச் சென்றிருப்பார். இறைத்தூதராக இருந்தாலும் மலம், ஜலம் கழிக்கப் போகும் போது கூட இவர்களுக்குத் தகவல் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? இதற்கெல்லாம் மேல், அந்த வேதப் பலகை எதனால் ஆனது என்பதிலும் மல்லுக்கட்டிக் கொண்டு ஆளாளுக்கு விளக்கமளிக்க முன்வருகின்றார்கள்.

இவர்கள் என்ன விரிவுரையாளர்களா? அல்லது தச்சர், ஆசாரிகளா? என்ற கேள்வியுடன் இந்த விளக்கத்தை முடித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment