திருக்குர்ஆனை தாயத்தில் எழுதி தொங்கவிடலாமா?
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை
அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம்.
இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும். இப்படி நினைக்கும் போது அல்லாஹ்வின் வசனங்களுக்கு சக்தி இருப்பதாகக் கருதாமல் அதை ஓதும் மனிதனுக்கு விஷேச சக்தி உள்ளதாக கருதும் நிலை இதனால் ஏற்படும்.
சாதாரண நோய்களை நீக்கும் மாத்திரைகளை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். நோய் ஏற்படும் போது சிறிய நோய்களுக்கு சின்ன சின்ன நோய் நிவாரணிகளை இன்றைய உலகில் நாம் பயன்படுத்தி வருவது போல் நோய் ஏற்படும் போது ஓதும் சிறிய சூராக்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் வார்த்தையின் மூலம் ஓதிப் பார்ப்பதற்கு ஏராளமான சிறப்புக்கள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நோய் நிவாரணத்திற்கு ஓதிப் பார்ப்பதென்பது சிறந்ததா? என்றால் அது உயர்ந்த நிûயில் உள்ளதா என்றால் இது தான் ஈமானில் தாழ்ந்த பலகீனமான நிலையாகும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள். ஓதிப் பார்க்காமல் இருப்பவர்களுக்குரிய நிலைமையைப் பற்றிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நமக்கு கற்றுத் தருகின்றார்கள் என்பதைப் பாருங்கள்:
விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத் தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை நான் கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். அப்போது, இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம்,
பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை நான் பார்த்தேன். மீண்டும் என்னிடம், இங்கும் இங்கும் பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ""இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் ""நாமோ இறைவனுக்கு இணைகற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில் பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர் என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது.