Sunday, June 03, 2012

அல்லாஹ்வை எப்படி நம்புவது? தொடர் :5

திருக்குர்ஆனை தாயத்தில் எழுதி தொங்கவிடலாமா?

உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம்.

இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும். இப்படி நினைக்கும் போது அல்லாஹ்வின் வசனங்களுக்கு சக்தி இருப்பதாகக் கருதாமல் அதை ஓதும் மனிதனுக்கு விஷேச சக்தி உள்ளதாக கருதும் நிலை இதனால் ஏற்படும்.

சாதாரண நோய்களை நீக்கும் மாத்திரைகளை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். நோய் ஏற்படும் போது சிறிய நோய்களுக்கு சின்ன சின்ன நோய் நிவாரணிகளை இன்றைய உலகில் நாம் பயன்படுத்தி வருவது போல் நோய் ஏற்படும் போது ஓதும் சிறிய சூராக்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் வார்த்தையின் மூலம் ஓதிப் பார்ப்பதற்கு ஏராளமான சிறப்புக்கள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நோய் நிவாரணத்திற்கு ஓதிப் பார்ப்பதென்பது சிறந்ததா? என்றால் அது உயர்ந்த நிûயில் உள்ளதா என்றால் இது தான் ஈமானில் தாழ்ந்த பலகீனமான நிலையாகும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள். ஓதிப் பார்க்காமல் இருப்பவர்களுக்குரிய நிலைமையைப் பற்றிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நமக்கு கற்றுத் தருகின்றார்கள் என்பதைப் பாருங்கள்:

விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத் தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை நான் கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். அப்போது, இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், பாருங்கள் என்று சொல்லப்பட்டது.  அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை நான் பார்த்தேன். மீண்டும் என்னிடம், இங்கும் இங்கும் பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ""இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் ""நாமோ இறைவனுக்கு இணைகற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில் பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர் என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. 


அப்போது அந்த  எழுபதாயிரம் பேர்களை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

அவர்கள், (விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்க மாட்டார்கள்; தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள்.  வேறொருவர் எழுந்து நின்று, அவர்களில் நானும் ஒருவனா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டு விட்டார். என்று சொன்னார்கள்.

ஆதாரம் : புகாரி 5752

எடுத்த காரியத்தை பூனை குறுக்கே பாய்ந்ததற்காகவோ மற்ற சகுனங்களைப் பார்த்தோ அவைகளை சகுனமாகக் கருதக் கூடாது. நபிகள் நாயகம் காலம் முதல் மறுமை நாள் வரை உள்ள கோடானு கோடி மக்களில் நபிகளாரின் சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர்கள் தான் விசாரணையின்றி சுவனம் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமது வாழ்க்கையில் ஓதிப்பார்த்தவராகவோ அல்லது சகுனம் பார்த்தவர்களாகவோ நாம் இருந்திருப்போம். இப்படி ஓதி பார்ப்பது சிறப்பு என்று நினைத்து விடக் கூடாது இந்த செயல்களுடன் தொடர்பு அற்றவர்கள் தான் அந்த எழுபதாயிரத்தில் அடங்குவார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள  வேண்டும்.

மறுமையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் நபித் தோழர்களின் நிலை

உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். மறுமையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் நபித் தோழர்களின் அளவில்லா ஆசையை இவரின் இந்தச் செயலின் மூலம் நாம் பார்க்க முடிகிறது. உக்காஷா (ரலி) அவர்களைப் பொறுத்தவரை இந்தச் செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் நபிகளார் இவ்வாறு விளக்கிக் கூறிய பின்னர் நானும் அதில் ஒருவனா என்று கேட்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. மற்றொரு நபித்தோழர் எழுந்து அவரும் உக்காஷா (ரலி) அவர்களுக்குக் கிடைத்த அந்த அந்தஸ்து தனக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எழுந்து நின்று, அவர்களில் நானும் ஒருவனா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார். என்று சொன்னார்கள். இதில் இருந்து அல்லாஹ்வின் தூதருக்கு ஒருவர்தான் என்று வஹீ வந்தது அதனால் தான் அவர்கள் உக்காஷா முந்திவிட்டார்கள் என்று பிறகு கேட்ட மனிதருக்கு விடையளித்தார்கள்.

நோய் நிவாரணத்திற்காக வேண்டி ஓதிக் கழுத்தில் கட்டிக் கொள்ளலாமா?

நோயில் இருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி தாயத்துக்கட்டுதல், தட்டுகளில் எழுதிக் குடித்தல், பேப்பர்களில் எழுதிய அதை வெள்ளிக் கூடுகளில் வைத்துக் கழுத்தில் கட்டிக் கொள்ளுதல் போன்றவற்றிக்கு மார்க்கத்தில் எந்த ஒரு அனுமதியுமில்லை என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்ய ஒன்பது நபர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினர் வந்த போது அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் உறுதிப் பிரமாணம் செய்யவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதரே ஒன்பது பேரில் அனைவர்களுக்கும் உறுதிப் பிரமாணம் அளித்து விட்டு இவருக்கு மாத்திரம் ஏன் உறுதிப் பிரமாணம் செய்து கொடுக்கவில்லை என்று கேட்கப்பட்டது? அப்போது அவரின் மீது தாயத்து இருக்கிறது என்று கூறி தம்முடைய கையை நுழைத்து அந்தத் தாயத்தை அறுத்த பின்பு அவருக்கு உறுதி மொழி கொடுத்தார்கள் பின்பு  கூறினார்கள் யார் தாயத்துக் கட்டுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்.

 ஆதாரம் அஹ்மத் 16781

தாயத்துக் கட்டினால் அவருக்கு அதனால் நிவாரணம் ஏற்பட்டாலும் அந்த தாயத்தால் தான் நிவாரணம் ஏற்படுகிறது என்று அவருக்கு நம்பிக்கை ஏற்படுமே தவிர  அல்லாஹ்தான் அவருக்கு நிவாரணத்தை ஏற்படுத்தினான் என்று அவர் நம்பிக்கை கொள்ள மாட்டார். இதனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சக்திக்கு அப்பால் ஒரு சக்கி இருக்கும் என்று மனிதன் நினைக்கும் போது இணைவைப்பின் பால் மிக இலகுவாக அவன் சாய்ந்து விடுவதால் இது போன்று செயல்படுவதைத் தடைசெய்தார்கள்.

திருமறைக் குர்ஆனின் தோற்றுவாய் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப் பார்ப்பதற்குத்தான் மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அதை ஓதிக் கழுத்தில் கட்டிக் கொள்வதற்கு அனுமதியில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் எதையாவது ஒன்றைத் தொங்க விடுகிறாரோ அவர் அதன் பால் பொறுப்புச் சாட்டப்படுவார்.

ஆதாரம் : திர்மிதீ

எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளானாலும் கையில் கட்டிக் கொள்வதற்கோ, கழுத்தில் தாயத்துப் போடுவதற்கோ, தோள் பட்டையில் போடுவதற்கோ, இடுப்பில் கட்டிக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்த அனுமதியுமில்லை. அவ்வாறு செய்வார்களானால் அவர்கள் பாவியாகி விடுவார்கள். நோய் ஏற்பட்டால் நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டும் அல்லது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாத்திஹா, குல் எனத் துவங்கும் மூன்று சூறாக்களை ஓதிக் கொள்ளலாம்.

மற்றும் சில பிரார்த்தனைகளையும் ஓதிக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

தாயத்துப் போடுவதற்கு எள்ளளவிற்கும் அனுமதியில்லை. சில நேரங்களில் அல்லாஹ் சோதனைக்காக நமது ஈமான் எந்த அளவுக்கு அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் ஆற்றல் உள்ளவன் என்பதைச் சோதனை செய்து பார்ப்பதற்காக வேண்டி இந்த இந்த தீய செயலில் நன்மை இருப்பது போன்று காட்டி விடுவான். ஒருவர் தாயத்தைக் கட்டி இருப்பதால் அவருக்கு சுகம் அளித்து விடுவான். இதைப் பார்த்த நாம் தாயத்திற்கு இப்படி ஒரு சக்தி இருப்பதாக நம்புவோம். இப்படி நாம் நினைப்பதற்காக ஒன்றிரண்டை அல்லாஹ் விதி விலக்காகக் காட்டுவான்.

எனவே அவ்வாறு செயல்படுதை விட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள பிரார்த்தனைகளில் ஏதாவது ஒன்றை  மனனம் செய்து வைத்துக் கொண்டு நோய் ஏற்படும் போது ஓதி வரவேண்டும். அந்தப் பிரார்த்தனையை அரபு மொழியில்தான் கேட்க வேண்டும் என்று இல்லை முடியுமானால் மனனம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதன் அர்த்தத்தை விளங்கி வைத்து அதில் உள்ளவாறும் பிரார்த்திக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் வாயில் இருந்து வந்த அதே வார்த்தையைச் சொன்னால் அதற்கு என்று தனியான ஒரு வலிமை உள்ளது. மனனம் செய்ய முடியவில்லையென்றால் அதனுடைய அர்த்தத்தை தமிழில் சொன்னால் அல்லாஹ் மனிதர்களின் பலவீனத்தை அறிந்து கொண்டவன் அவன் ஏற்றுக் கொள்வான்.

நபி (ஸல்) அவர்கள் இன்னொரு பிரார்த்தனையை நமக்குக்  கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் ""அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்'' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், ""அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), ""சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)'' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், ""அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)

ஆதாரம் புகாரி 5742

நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் முஆத் என்ற நபித் தோழரை நோய் விசாரிக்கச் சென்று ஒரு வார்த்தையின் மூலம் அவர்களுக்கு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தார்கள் ""இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக. அவருடைய ஹிஜ்ரத்தை முழுமைப்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம் புகாரி 5659

பெரிய துஆக்களை ஓதத் தெரியவில்லையென்றாலும் ஸஅத் (ரலி) அவர்களுக்காக நபிகள் செய்த துஆவில் அல்லாஹும்ம்ஷ்பீ (இறைவா! இவருக்கு நோய் நிவாரணத்தைக் ஏற்படுத்து) என்று மனனம் செய்து வைத்துக் கொண்டு நாம் யாரையாவது நோய் விசாரிக்கச் சென்றால் ஓதிக் கொள்ள முடியும். யார் நோயாளியாக இருக்கிறாரோ அவரும் இந்தப் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளலாம்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உடல் வலியாக இருப்பதாக முறையிட்டார் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இன்று எதற்கு எடுத்தாலும் இந்த லிம்களிடம் செல்லும் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையாகக் காணப்படுகிறார்கள் இவர்களிடம் செல்வதைத் தவிர்த்து விட்டு நாம் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிராத்தனையை ஓதிக் கொண்டு உடல் நிவாரணத்தை தேடவேண்டும்.

 வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment