Wednesday, August 10, 2011

ரமலான் சட்டதிட்டங்கள்

தீன்குலப்பெண்மணி ஆகஸ்ட் 2011

ரமலான் சட்டதிட்டங்கள்

பி
அல்ஸர் மற்றும் சக்கரை நோயாளிகள் நோன்பு நோற்க வேண்டுமா?
நோயாளிகளில் இரண்டு வகையினர் உள்ளனர். அல்ஸர், கேன்சர், சர்க்கரை வியாதி, போன்ற தீராத நோயாளிகளும் இருப்பார்கள். நிவாரணம் பெறக்கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்பை நோற்று விட வேண்டும்.
"உங்களில் யாரேனும் பயணத்திலோ நோயாளிகளாகவோ இருந்தால் வேறு நாட்களில் அதை நோற்கட்டும்''
(
அல் குர்ஆன் 2:184)
நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல்  அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
நோன்பு வைப்பதால் மரணம் வரும் என்றால், இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்றால் நோன்பு நோற்பது இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகபிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.
இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ அவன் தூதரோ சொல்லி-யிருப்பார்கள். நோயுற்றவர்களுக்கு விருப்பமாக இருந்தால் ரமலானிலும் நோற்கலாம் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று  அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறவில்லை. பயணம் செய்வோருக்கு மட்டும் இரண்டையும் செய்யலாம் என்று கூறினார்களே தவிர நோயாளிகள் விஷயத்தில் இவ்வாறு கூறவில்லை. அல்லாஹ்வுக்கு நாம் பேணுதலைக் கற்றுக் கொடுப்பதை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாள் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்புக்காக என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.
ஆயினும் முதியவர்கள் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக ஏற்றுச் செயல்படலாம். தள்ளாத வயதினர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கத்தைக் காண்போம்.
தள்ளாத வயதினர் நோன்பு நோற்க நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்களாவர். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலைமையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அவர்கள் முதுமையில் இருப்பார்கள்.
இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரம் வருமாறு:
நோன்பு நோற்க சக்திபெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் (2:281) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (-லி) கூறும் போது, "இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்'' (புகாரி 4505) என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இப்னு அப்பாஸ் (-லி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலி-ல் நாம் அறிந்து கொண்டால் தான் முழு விளக்கம் பெற முடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.
பின்னர் "யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்.'' என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொறுத்த வரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொறுத்த வரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.
எத்தனை வேளை உணவளிக்க வேண்டும்?
ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் எதை உணவாக அளிப்பது? இது குறித்து அல்லாஹ்வும், அவன் தூதரும் வரையறை எதுவும் செய்யவில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் இருக்கும் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.
ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது உணவாக உட்கொள்கிறாரோ அதை வழங்க வேண்டும் என்பதால் தான் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் தினசரி மூன்று வேளை உணவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை உணவுப் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை உணவுப் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.
நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.
நோன்பாளி புகைபிடித்தால் நோன்பு முறியுமா?
புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருமறைக் குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது.
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.
(அல் குர்ஆன் 2:195)
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
(அல் குர்ஆன் 4:29)
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல் குர்ஆன் 6:141)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
 (அல் குர்ஆன் 7:31)
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர்.
ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல் குர்ஆன் 17:27)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் புகை பிடித்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இறைவன் ஒரு செயலைத் தடை செய்து விட்டால்
அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். மாறாக அதைப் பற்றி வீணான கேள்விகளைக் கேட்பது கூடாது.
திருடுவது கடுமையான குற்றம் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது. எனவே அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர பிஸ்மில்லாஹ் கூறி திருட்டை ஆரம்பிக்கலாமா? என்று கேட்பது கூடாது.
இஸ்லாம் விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். அது மானக் கேடான காரியம் என்று கூறுகிறது. எனவே நாம் இத்தகைய பாவத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர விபச்சாரம் செய்தால் குளிப்பு கடமையா? என்று கேள்வி கேட்பது கூடாது. இவ்வாறு கேட்பது அதனை அங்கீகரிப்பது போன்றாகி விடும். இது பல மோசமான பின்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.
நாம் நோன்பு நோற்பதன் நோக்கமே மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை விட்டொழித்து, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்காகத் தான். இப்படிப்பட்ட நோன்பில் நாம் பாவமான காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர இதைச் செய்தால் நோன்பு முறியுமா? என்று கேட்பது நோன்பிலும் அந்தப் பாவமான காரியத்தை அங்கீகரிப்பது போன்றாகி விடும்
எனவே புகை பிடித்தல் என்பது ஒரு மோசமான, ஹராமான காரியமாகும். இதனை எல்லாக் காலங்களிலும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதிலும் ரமலான் மாதத்தில் இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் நாம் முற்றிலும் விலகிக் கொள்ள வேண்டும்.

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பி-லிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி சிலர் கூறுகிறார்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன் வைக்கவில்லை. ஆனால்
நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் அவர்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் சிலர் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது என்று சிலர் கூறுகின்றனர் இது சரியா? என்பதை பார்ப்போம்.
மார்க்கத்தின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.
பொதுவாக ஒரு வணக்கத்தை இறைவன் கடமையாக்கினால் அது அனைவருக்கும் கடமை என்பது தான் பொருள். யாருக்காவது கடமை இல்லை என்று கூறுவதாக இருந்தால் அவ்வாறு கூறுவோர் தான் தெளிவான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
அல்குர்ஆன் 2:186
மேற்கண்ட வசனத்தில் ரமலானை அடைவோர் மீது நோன்பு கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்.
மாதவிடாயுள்ளவர்களும், பாலூட்டுபவர்களும் நோன்பை விட்டு விட்டு மீண்டும் நோற்கத் தேவை இல்லை என்று கூறினால் அவர்களுக்கு நோன்பு கடமை இல்லை என்று ஆகிவிடும்.
இந்தப் பொதுவான சட்டத்தி-லிருந்து விதிவிலக்கு இருக்கின்றது என்று ஒருவர் கூறினால் குர்ஆன், ஹதீஸி-லிருந்து அதற்குத் தெளிவான ஆதாரம் காட்ட வேண்டும். அதாவது ஒருவருக்கு நோன்பு கடமையில்லை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.
நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு இந்த வசனத்தில் அல்லாஹ் சலுகையளித்துள்ளான். அந்தச் சலுகை என்பது, இப்போதே நிறைவேற்றாமல்
வேறு நாட்களில் நிறைவேற்றலாம் என்பது தான். இந்த வசனமே இதை விளக்கி விடுகின்றது
எனவே அல்லாஹ் சலுகை அளித்துள்ளான் என்பதற்கு அவர்கள் அறவே நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று பொருள் கொள்வது ஏற்கத்தக்கது அல்ல.
இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலருக்கு நோன்பில் சலுகை அளித்தார்கள் என்றால் அந்தச் சலுகையும் வேறு நாட்களில் அதை நிறைவேற்றலாம் என்ற சலுகை என்றே விளங்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பு கடமையில்லை என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நோன்பு கடமையா? இல்லையா? என்பது தான். பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோன்பு கடமையே இல்லை என்றால் கண்டிப்பாக அது மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கும்.
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
'பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
.ஜைனுல் ஆபிதீன்

No comments:

Post a Comment