Sunday, January 08, 2012

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 7

சூனியமா? தந்திரமா?
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ   முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

இந்த வசனத்தின் விளக்கத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஸிஹ்ர்-சூனியம் சம்பந்தமாக அக்குவேறாக ஆணிவேராக பார்ப்பது மிகவும் நல்லது. இனிவரும் காலங்களில் இந்த வசனத்தைத் தவறாக விளங்கிவிடாத அளவுக்கு நாம் சூனியத்தை விரிவாக அலசவேண்டும். இந்த வசனத்தை யார் யார் எப்படி எப்படியெல்லாம் தவறாக விளங்கியும் விளக்கியும் உள்ளனர் என்பதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதின் மூலம் நமது ஈமானுக்கு பாதுகாப்பாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்.

எனவே தற்போது இந்த வசனத்தை நிறுத்திவைத்துவிட்டு சூனியத்திற்குள் நுழைந்துவிட்டு அதில் தெளிவு பெற்றபிறகு இந்தவசனத்தை விளக்கினால் மிகஎளிதாக விளங்கிட முடியும். ஷைத்தானின் தூண்டுதலில் இருந்தும் இலகுவாக தப்பித்துக் கொள்வதற்கு சரியான வழியாக இருக்கும் என்பதை கூறிக் கொண்டு சூனியத்திற்குள் நுழைவோம்.


முதலில் ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அலச வேண்டும். தற்போது, ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு பில்லி, சூனியம், மாயமந்திரம் போன்ற அர்த்தங்களில் இன்று உலமாக்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தை நாமாக தீர்மானிக்கக்கூடாது. ஒரு வார்த்தையின் நேரடியான பொருளை,

அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு அந்த மொழியின் அகராதியைப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் ஸிஹ்ர் என்பதற்கு நேரடிப் பொருள் (கவனத்தை) ஈர்த்தல், (கவர்தல்) என்று பொருள்.

உதாரணமாக ஒருவர் தனது பேச்சினால் மக்களைக் கவர்ந்து ஈர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குப் பெயர் ஈர்க்குதல் (ஸிஹ்ர்) என்று பெயர். தெருவில் செல்லுகிற ஒரு அழகான பெண்ணை ஒருவன் ஒரு மாதிரியாக பார்க்கிறான் என்றால் அவள் அவனை ஈர்க்கிறாள் (ஸிஹ்ர்) என்று பெயர். அதே போன்று, ஒருவன் ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக எடுக்கிறான். ஆனால் அதன் கடைசிப் பக்கம் வரைக்கும் கீழே வைக்காமல் படித்து முடிக்கிறான் என்றால் அந்தப் புத்தகம் அவனை ஈர்க்கிறது என்று பொருள். அதாவது பேச்சினாலோ அல்லது எழுத்தாலோ அல்லது நடவடிக்கையாலோ அல்லது காட்சியாலோ இப்படி எந்த ஒன்றாலும் மற்றொன்றைக் ஈர்த்தால் அவை அத்தனைக்கும் ஸிஹ்ர்-வயப்படுத்துதல், கவர்தல் என்று தான் அரபிமொழி  அகராதியில் அர்த்தம் உள்ளது. இதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் நபிமொழியிலிருந்தும் ஏராளமான ஆதாரங்களைக் காட்டலாம்.

நபிமார்கள் தங்களது சமுதாயங்களில் பிரச்சாரம் செய்யும் போது அந்த மக்களால் சொல்லப்பட்ட வார்த்தைகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

وَقَالُوا مَهْمَا تَأْتِنَا بِهِ مِنْ آيَةٍ لِتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ(132) 7

"எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர்.                   (அல்குர்ஆன் 7:132)

இந்த வசனத்தில் (لِتَسْحَرَنَا) -தஸ்ஹரனா என்ற வார்த்தைக்கு பொருள், ஈர்க்குதல், மயக்குதல், வயப்படுத்துதல், வெற்றிபெறுதல், கவர்தல், கையில் எடுத்துக் கொள்வது போன்ற அர்த்தங்கள் உண்டு.

அதேபோன்று அல்லாஹ் இன்னொரு இடத்தில் சொல்லும்போது, நபிமார்கள் அவர்களது சமுதாயங்களுக்கு தங்களது செய்தி இறைவனிடமிருந்து தான் வந்தது என்பதை நிரூபிக்க அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்கள் சிலதை நடத்திக் காட்டுவார்கள். அப்படி அற்புதங்களைக் கண்கூடாகக் கண்டபிறகும்கூட அந்த அற்புதமும் தங்களை மயக்குவதாகச் சொல்வார்கள்.

لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ(15) سورة الحجر

அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்'' என்றே கூறுவார்கள்.    

(அல்குர்ஆன் 15:15)

எங்களது பார்வைகள் கட்டப்பட்டுவிட்டது என்றும், இல்லை.. இல்லை.. எங்களது சிந்தனை மதிமயக்கப்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். அதில் இறைவன் பயன்படுத்தும் வார்த்தை ????

ஸிஹ்ரிலிருந்து வந்த மஸ்ஹூர் என்ற வார்த்தையாகும். இதற்கு மதிமயக்கப்பட்டு விட்டோம் என்று பொருள்.

قُلْ لِمَنْ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(84)سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ(85)قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(86)سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ(87)قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(88)سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّا تُسْحَرُونَ(89) سورة المؤمنون

"பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! "ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா;?'' என்று கேட்பீராக! "பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!

 (அல்குர்ஆன் 23:84...89)

மேற்கூறிய 23:89 வசனத்தில் تُسْحَرُونَ துஸ்ஹரூன் என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ஸிஹ்ர் என்பதிலிருந்து வந்தவார்த்தையாகும். இதற்கு மதிமயக்கப்படுதல் என்று பொருள் ஆகும்.

மேலும் ஹதீஸ்களில் ஆராய்ந்து பார்த்தால், பேசுவதில் கூட ஸிஹ்ர் இருக்கிறது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், சிலபேர் இலேகியம் விற்பார்கள். இலேகியம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அவன் பேசுவது நன்றாயிருக்கும். ஆளுக்குத்தகுந்த மாதிரி ஒவ்வொருவரின் மனநிலைக்குத் தக்கவாறு (சைக்காலஜிக்) பேசி நம்மை நம்ப வைத்து விடுவான். ஒருவனுக்கு மனைவி மூலம் பிரச்சனை இருக்கலாம். இன்னொ ருவனுக்கு மனக்கவலை இருக்கலாம். அனைத்திற்கும் இந்த இலேகியத்தில் மருந்து இருக்கிறது என்பான். அந்த இலேகியத்தை வாங்கிச் செல்பவர்கள் மூன்று நபர்கள் இருந்தால். இலேகிய வியாபாரியைச் சுற்றி முந்நூறு பேர் நிற்பார்கள். இதற்குக் காரணம் அவனது பேச்சில் இருக்கிற ஈர்ப்புத்தான்.

இதுபோன்று நபிகள் காலத்தில் வெளியூரிலிருந்து வியாபாரத்திற்கு வந்த இரண்டு பேர்கள் தங்களது சரக்குகளை (பொருட்களை) விற்பதற்காக அழகாக சொற்பொழிவாற்றுகிறார்கள். அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டமிடுவதைப் பார்த்த நபியவர்கள் பேச்சில் சொற்பொழிவில் ஈர்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பயன்படுத்திய வார்த்தை ஸிஹ்ர் என்பதாகும்.

5146 قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا رواه البخاري

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து (எங்கüடையே சொற்பொழிவும், கருத்துச் செறிவும் மிக்கதோர்)  சொற்பொழிவு நிகழ்த்தி னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாகப் பேச்சில் சிஹ்ரில் கவர்ச்சி உள்ளது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 5146

5767  عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ قَدِمَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا أَوْ إِنَّ بَعْضَ الْبَيَانِ لَسِحْرٌ رواه البخاري

இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றி னார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சில சொற்பொழிவில் ஸிஹ்ர் கவர்ச்சி உள்ளது' அல்லது "சொற்பொழிவுகüல் சில ஸிஹ்ர் கவர்ச்சியாகும்' '' என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல்: புகாரி 5767

மேற்கூறிய ஹதீஸில் மாயமோ மந்திரமோ அவர்கள் செய்யவில்லை. பயான் பண்ணுகிறார்கள். அவ்வளவுதான். ஆனால் மக்கள் ஒன்றுகூடி நின்று கேட்கிறார்கள். அதைப் பார்த்துத்தான் ஸிஹ்ர் என்றார்கள் நபியவர்கள்.

எனவே மேற்சொன்ன குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் ஆராய்ந்து பார்த்தாலேயே, ஒன்றை ஒருவன் கவருகிற மாதிரி அல்லது ஈர்க்கிற மாதிரி செய்தால் அதற்குத்தான் அரபி அகராதியில் ஸிஹ்ர் என்று பொருள் என்பதை யாரும் விளங்கிக் கொள்ளமுடியும். பேச்சில் ஸிஹ்ர் என்றால் பிறரைக் கவரும் விதத்தில் பேசியிருக்கிறார் என்று அர்த்தம். அதேபோன்று ஒரு நாடகத்தை வைத்த கண் வைக்காமல் அதாவது கண்சிமிட்டாமல் மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அந்த நாடகம் அவர்களை ஈர்த்திருக்கிறது என்று அர்த்தம்..

ஆனால் தற்போது மக்கள் ஸிஹ்ர் (சூனியம்) என்ற வார்த்தையை மாயமந்திரம், பில்லி, சூனியம் போன்ற தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். ஒருவன் இன்னொருவனது கைகால்களை முடக்குவது, முறிப்பது, நோயை உண்டாக்குவது, கிறுக்கனாக்குவது, கனவன் மனைவியைப் பிரிப்பது, இன்னும் கூடுதலாகச் சென்று பிள்ளைக் கொடுப்பதுவும், பிள்ளை இல்லாமல் அவதிப்பட வைப்பதுவும், கொடுத்த பிள்ளையை ஊமையாக்குவது, முடக்குவது என்று எல்லாத்தையுமே நேரடியாகவோ அல்லது ஆயுதத்தாலோ இல்லாமல் மந்திரத்தால் மந்திரவாதி செய்வார் என்று ஸிஹ்ரைப் பற்றி தவறாக நம்புகின்றனர்.

எனவே இதுபற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கொண்டு ஆராய்ந்தால், ஸிஹ்ர் என்பதற்கு தந்திரம் என்று பொருள். அதாவது தந்திரமான வித்தைகள் செய்வது என்ற பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி தந்திரத்தால் எதைச் செய்தாலும் அது வெறுமனே ஒன்றுமில்லாத கண்கட்டி வித்தைதான் காட்டும்போது இருக்கிற மாதிரி (நிஜம் மாதிரி) தெரியும். ஆனால் உண்மையில் இருக்காது என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

அல்லாஹ் மூஸா நபியை ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனிடத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச் சொல்ல அனுப்புகிறான். அவன் மூஸா நபியிடம் நீர் தூதர் என்பதை நிரூபிக்கிற அற்புதம் ஏதும் உம்மிடம் இருக்கிறதா? என்று கேட்கும்போது, மூஸா நபி அவர்கள் இறைவனின் அனுமதியுடன் தமது கையிலுள்ள கைத்தடியைப் போட்டு பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். உடனே ஃபிர்அவ்ன், மூஸா நபியிடம் நானும் எனது மந்திரவாதிகள் மூலமாக இதைப்போன்று செய்யமுடியும். எனவே நமக்குள் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு பந்தயம் வைத்துக் கொள்வோம் என்று பேசுகிறான்.

மூஸா நபியும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். குறித்த நாளில் பந்தயம் தயாரானது. மூஸா நபி ஒருபுறமும் அவர்களுக்கு எதிராக ஃபிர்அவ்ன் திரட்டிய மந்திரவாதிகள் எதிரணியாக எதிர்புறமும் நிற்கிறது. முதலில் ஃபிர்அவ்னால் அழைத்துவரப்பட்ட மந்திரவாதிகள் தங்களது பொருட்களைப் போட்டு மக்களின் கண்களை வயப்படுத்தி னார்கள். இதை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116) سورة الأعراف

"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

(அல்குர்ஆன்: 7:116)

ஃபிர்அவ்னால் அழைத்து வரப்பட்ட மந்திரவாதிகள் மக்களின் கண்களை மயக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் உண்மையில் அவர்கள் பாம்புகளாக மாற்றவில்லை. ஆனால் மூஸா நபியவர்கள் கண்கட்டிவித்தையாக அற்புதத்தை செய்யவில்லை. மாறாக உண்மையிலேயே கைத்தடியை பாம்பாக மாற்றினார்கள். ஒரு வாதத்திற்காக இன்றைக்கு மூஸா நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்டாலும், அவர்கள் கைத்தடியைப் பாம்பாக மாற்றினால் அதை இன்றுள்ள டி.என். சோதனை உட்பட எந்த மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினாலும் அது உண்மையிலேயே பாம்பாகத்தான் இருக்கும். உண்மையான பாம்புக்கு என்னவெல்லாம் இருக்குமோ அதுவெல்லாம் இருக்கும். இது தான் நபிமார்களின் அற்பு தங்களுக்கும் பிற மந்திரவாதிகளான மேஜிக் செய்பவர்களுக்குமுள்ள வித்தியாசம்.

கைத்தடிதான். நமது கண்களுக்கு மட்டும் பாம்பாகத் தெரிகிறது. உண்மையில் பாம்பு என்று நிரூபிக்க முடியாது. இப்படி இருந்தால் அது கண்கட்டி வித்தை. அதாவது மேஜிக். தந்திர வேலை.

அவர்கள் செய்து காட்டியது பெரிய ஸிஹ்ர் என்று அல்லாஹ் கூறுகிறான். பெரிய ஸிஹ்ர் செய்தும் கூட அவர்களால் பாம்பாக மாற்ற முடியவில்லை. மாறாக பாம்பைப் போன்ற போலித் தோற்றத்தைதான் ஏற்படுத்த முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இன்னும் தெளிவாக இறைவன் 20 அத்தியாயத்தில் 66 ஆவது வசனத்தில் சொல்லுகிறான்.

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى(66) 20

"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

(அல்குர்ஆன் 20:66)

இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகிற வார்த்தை يُخَيَّلُ  யுகைய்யலு என்பதாகும். அதாவது அவர்கள் கயிறுகளாலும் கைத்தடிகளாலும் காட்டிய வித்தை மூஸாவுக்கு சீறுவதைப்போன்று கற்பனையாகத் தோற்றமளித்தது. இந்த யுகைய்யலு என்ற வார்த்தை கியால் என்ற சொல்லிருந்து  பிறந்தது. இந்த வார்த்தை உருதுமொழியிலும் ஃபார்சி மொழியிலும்கூட இருக்கிறது. இதன் பொருள் பொய்யாக கற்பனையாக தோற்றமளித்தல் என்பதாகும். அப்படியெனில் மூஸா நபிக்குக் கற்பனையாகப் பொய்தோற்றமளித்தது. உண்மையிலேயே சீறவில்லை என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

ஆனாலும் மூஸா நபியவர்கள் பயந்துவிட்டார்கள் என்பதாகவும் அல்லாஹ் பதிவுசெய்கிறான்.

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். "அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்'' என்று கூறினோம்.      

(அல்குர்ஆன் 20:67,68)

இந்த வித்தையின் மூலம் கழுதையை குதிரையாகக் காட்டலாமே தவிர இதார்த்தத்தில், அதாவது உண்மையில் குதிரையாக ஆக்க முடியாது. இதுதான் மந்திரத்தின் வேலை. இதற்கு சரியான அர்த்தம் மேஜிக் என்பதாகும்.

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى(69) سورة طه

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான்'' (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன் 20:69)

இன்னும் தெளிவாக அடுத்த வசனத்தில் சொல்லுகிறான். இப்படி கயிறுகளும் கைத்தடிகளும் சீறுவதாக மாறியது சூனியக்காரர்களின் சூழ்ச்சி. இங்கு சூழ்ச்சி என்பதைக் குறிப்பிடுவதற்கு இறைவன் பயன்படுத்தும் வார்த்தை கைத் என்பதாகும். சூழ்ச்சி என்றாலேயே உண்மையிருக்காது என்று அர்த்தம். அதனால்தான் அதற்கு அடுத்தாகவே சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்பதையும் அல்லாஹ் சேர்த்துச் சொல்லுகிறான்.

அப்படியெனில் சூனியக்காரர்களால் இல்லாததை இருப்பதாகக் காட்டத்தான் முடியுமே தவிர உண்மையிலேயே இருக்காது என்பதையும் சொல்லுகிறான். சூனியத்தால் இரத்த வாந்தி எடுக்க வைத்து விடுவேன், வயிற்றுவலியை வரவழைத்து விடுவேன், அதைச் செய்துவிடுவேன் இதைச் செய்துவிடுவேன் என்று யாராவது சொல்வார்களானால் தாராளமாக வைக்கச் சொல்லுங்கள், அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். மாறாக தோல்வியைத்தான் தழுவுவார்கள் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

மூஸா நபியின் போட்டியை இன்னும் தெளிவாக இறைவன் சொல்லுகிறான்.

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ(117) 7

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன் 7:117)

فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ(45) سورة الشعراء

உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.

(அல்குர்ஆன் 26:45)

இந்த வசனத்தில் அல்லாஹ் அவர்கள் பொய்யாக கற்பனையாக வித்தை செய்ததை மூஸா நபியின் பாம்பு விழுங்கிவிட்டது என்று பயன்படுத்துவதற்கு யஃஃபிகூன் என்ற வார்த்தையைக் கையாளுகிறான். இந்த யஃஃபிகூன் என்ற வார்த்தை இஃப்க் என்பதிலிருந்து வந்தது. இஃப்க் என்றால் பொய், இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். இதை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் நபியின் மனைவியும் அபூபக்கரின் மகளுமான ஆயிஷா ரலியையும் இன்னொரு ஸஹாபியையும் சேர்த்து தவறாக முனாபிக்குகள் இட்டுக்கட்டினார்களே அதற்கு அல்லாஹ் குர்ஆனில் இஃப்க் என்று சொல்லிக்காட்டுகிறான். நபியவர்களின் ஹதீஸிலும் இஃப்க் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக இந்த வசனங்களின்படி மூஸா நபிக்கு எதிராக திரண்ட மந்திரவாதிகள் என்றழைக்கப்பட்ட சூனியக்காரர்கள் சிஹ்ர் செய்பவர்கள் பொய்யாக காட்டியதை மூஸா நபியின் உண்மை அற்புதமாக விளங்கிய பாம்பு விழுங்கிவிட்டது. எனவே ஸிஹ்ர் என்பது முழுவதும் பொய் என்பதை அல்லாஹ் பதிவுசெய்கிறான்.

மூஸா நபி காலத்தில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தை விளங்கிக் கொள்வதற்கு இன்று நம்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் மேஜிக் ஷோக்களை (மந்திரதந்திர நிகழ்ச்சிகளை) உதாரணமாகக் கொள்ளலாம். சின்னசின்ன அளவுக்கு நடப்பதைக் காட்டிலும் பெரிய அளவுக்கு, நாமே உண்மையென்று நம்பிக் கொள்கிற அளவுக்கு நடத்தப்படுகிற பி.சி. சர்க்கார் போன்றவர்களின் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

இந்த மேஜிக் ஷோவில் விமானம் நின்றால் எப்படியிருக்குமோ அதைப்போன்று அந்தரத்தில் ஒருநபரை நிறுத்திவிடுவார்கள். அவர் அந்தரத்தில் நிற்கிறார் என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக அவரது உடலுக்குக் கீழாக கையை வைத்துத் அங்கும்இங்குமாகத் தடவிக்காட்டுவார்கள். உண்மையில் இப்படி அந்தரத்தில் நிற்க இயலுமா? என்றால், ஒருக்காலும் எவனா லும் நிற்க இயலாது. ஆனால் அந்தரத்தில் நிற்பதைப் போன்று காட்ட இயலும். இப்படி மேஜிக் செய்பவர்களை பரிசோதனை செய்தால் உண்மை வெளியே வந்துவிடும். இது உண்மையில் உள்ளது இல்லை. தந்திர வேலைதான் என்பதை மேஜிக் செய்பவர்களே சொல்லிவிட்டுத்தான் செய்கின்றனர்.

உண்மையிலேயே ஒருமனிதரை அந்தரத்தில் நிறுத்த முடியும் என்றால், எந்த லைட்டும் இல்லாமல் மேடையும் இல்லாமல் எந்த செட்டிங்கும் (முன்நடவடிக்கை) இல்லாமல் எந்த இடத்திலும் சாதாரணமாக நம்மை நிறுத்த முடியுமா? முடியவே முடியாது. அப்படியெனில் உண்மையிலேயே அந்தரத்தில் யாரையும் நிற்க வைக்கமுடியாது. ஆனால் அப்படி நிற்பதைப் போன்று பொய்யாகக் காட்டமுடியும்.

இதே போன்று, ஒரு மனிதனை இரண்டாக அறுப்பார்கள். நான்காக அறுப்பார்கள். கை தனியாக கால் தனியாக அறுத்தெடுத்து விடுவார்கள். அதற்குப்பிறகு 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து ஒட்டவைத்த பிறகு முழுமனிதாக எழுந்து வருவான். இது உண்மையிலேயே நடக்குமா? ஒருவனது கைகால்களை அறுத்தால் இரத்தம் வரவேண்டும். ஆனால் மேஜிக் ஷோவில் இரத்தம் வராது. அப்படி இரத்தம் வந்தால் 20 நிமிடங்களில் அவனது உடலிலுள்ள இரத்தம் அனைத்தும் வெளியேறி அந்த மனிதன் இறந்து போய்விடுவான். அப்படியெனில் மேஜிக் ஷோவில் மனிதனை இரண்டாக அறுப்பதைப் போன்றோ நான்கு பக்கமும் தலையில் கத்தியால் ஒருபக்கம் குத்தி மறுபக்கம் வழியாக கத்தியை வெளியே எடுப்பது போன்றோ காட்டுவது பொய்யானது.

அறுப்பதைப் போன்றோ குத்துவதைப் போன்றோ காட்டத்தான் முடியுமே தவிர உண்மையில் அறுக்கவும் குத்தவும் முடியாது.

அறுத்த உறுப்புக்கள் தானா சேர்ந்த கொள்ளுமெனில் மெடிக்கல் காலேஜ் எதற்கு? மருந்து மாத்திரைகள் எதற்கு? ஆபரேசன் செய்வது ஏன்? கை துண்டானால் மேஜிக் செய்பவனிடம் கொண்டுவந்து சரிசெய்து விடலாமே? இன்னும் சொல்லப்போனால் இதெல்லாம் முடியும் என்றால் அவன் ஏன் நம்மிடம் 50 என்றும் 100 என்றும் டிக்கட் வாங்கி பிழைப்பு நடத்தவேண்டும்? எனவே கண்ணுக்குத்தான் அறுப்பது தெரியுமே தவிர உண்மையில் இல்லை என்பதை நம்பவேண்டும்.

இதேபோன்று மண்ணை அள்ளிப்போட்டு தங்கத்தை உருவாக்கிக் காட்டுவார்கள். இதெல்லாம்கூட பொய்தான். உண்மையிலேயே மண்ணை அள்ளிப்போட்டு தங்கத்தை உருவாக்குவதற்கு ஆற்றல் பெற்றவனாக இருந்தால், நம்மிடம் டிக்கட்டுகாக காசுபணம் வாங்கி ஏன் பிழைப்பு நடத்தவேண்டும்? அவன் மண்ணை அள்ளிப்போட்டு தங்கமாக ஆக்கிக் கொள்ளவேண்டியதுதானே. ஆக இதுவெல்லாம் பொய். உண்மையில்லை என்று நம்பவேண்டும்.

உண்மையில் மண்ணைக்கூட தங்கமாக ஆக்கலாம். இப்படி ஒருடப்பாவில் மண்ணை அள்ளிப்போட்டு மூடி திறந்தவுடன் தங்கமாக ஆகாது.

அணுவைப் பிளக்கும் அறிவு மனிதனுக்கு வந்த பின்னர் எந்த உலோகத்தையும் இன்னொரு உலோகமாக மாற்றமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். உதாரணத்திற்கு இரும்பை தங்கமாக மாற்றலாம். எப்படியெனில், அதற்கான அணுக்களை சரியான விகிதத்தில் கலந்தோமானால் இரும்பு தங்கமாக மாறும். ஆனால் இப்படி இரும்பைத் தங்கமாக மாற்றுவதற்கு ஆகுகின்ற செலவு, நேரடியாக தங்கம் வாங்கும் செலவைவிட அதிகமானதாகும்.

எனவே இந்த முறையில் இல்லாமல் வெறுமனே டப்பாவிற்குள் மண்ணைப்போட்டு குளுக்கிவிட்டு டப்பாவைத் திறந்தால் தங்கமாக மாறிவிடும் என்று நம்புவது மடமையும் அறிவீனமுமாகும். அப்படியெனில் மேஜிக்மேன் மண்ணைத் தங்கமாகக் காட்டுகிறானே தவிர உண்மையில் மண் தங்கமாக மாறியது என்ற கருத்தில் இல்லை. இப்படி மேஜிக்மேன் எதைச் செய்து காட்டினாலும் அது உண்மையாக இருக்கவே முடியாது என்று ஆழமாக நம்பவேண்டும். அவையெல்லாம் ஸிஹ்ர் (சூனியம்) என்று நம்பவேண்டும். இதைத்தான் அல்லாஹ் மூஸா நபியின் காலத்தில் ஃபிர்அவ்னால் அழைத்து வரப்பட்ட மேஜிக்காரர்கள் செய்தார்கள் இதைத்தான் இறைவன் ஸிஹ்ர் அதாவது சூனியம் என்று குறிப்பிடுகிறான்.

இந்த விசயத்தில் இன்னொரு கோணத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ், நமது நபிக்கு முன் பல்வேறு தூதர்களை அனுப்பினான். அவர்களும் தங்களது சமூகத்திற்குத் தம்மைத் தூதர் என்று சொல்லுவார். ஆனால் அந்த சமூக மக்கள் நபிமார்களை ஏற்காமாட்டார்கள். உடனே அல்லாஹ் அவரை நபி என்று நிரூபிக்க அவர்களுக்கு ஏதேனும் அற்புதங்களைக் கொடுத்து மக்களிடத்தில் காட்டச் சொல்லுவான். இப்படி மூஸா ஈஸா, லூத், நூஹ் போன்ற தூதர்கள் இறைவனது அற்புதங்களைச் செய்தவுடன் நபிமார்களை எதிர்த்த அந்தந்தச் சமூக மக்கள், என்ன சொல்லி கேலிகிண்டல் செய்தார்கள் என்பதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லுகிறான். ஏனெனில் ஸிஹ்ரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அதில் விளக்கம் இருக்கிறது.

மூஸா நபியின் சமூகம் அளித்த பதில்

قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ(109) سورة الأعراف

"இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார்'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 7:109)

மூஸா நபி இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதத்தைச் செய்து காட்டியதும் அந்த சமூக மக்கள் அவரை திறமையான சூனியக்காரர் என்று சொன்னர்கள். அப்படியெனில் மூஸாவை நபியாக ஏற்பதற்கு இந்த வார்த்தையைச் சொல்லவில்லை. மாறாக அவரை மறுப்பதற்காகத்தான் திறமைமிக்க சூனியக்காரன் என்றார்கள். அப்படியெனில் ஸாஹிர் என்றால் இல்லாததை இருப்பதாகக் காட்டுபவர் என்று சொல்லி அந்தசமூகம் மூஸா நபியை மறுக்கிறது. ஆனால் மூஸா நபி செய்தது உண்மை.

அவர்கள் இல்லாததை இருப்பதாகக் காட்டவில்லை. மூஸா நபி செய்தது உண்மையென நம்பியவர்கள் மூஸாவை நபி என்று ஏற்றுக் கொள்வார்கள். மூஸா நபி செய்தது பொய். இல்லாததை இருப்பதாகக் காட்டும் சூனியக்காரர் என்று நம்பியவர்கள் அவரை ஏற்க மறுத்தார்கள்.

இன்னும் பல்வேறு வசனங்களில் ஸிஹ்ர் என்ற வார்த்தையை நபி மூஸா அவர்களை மறுப்பதற்காக அந்த சமூகம் சொன்னது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் சொல்லுகிறான்.

فَلَمَّا جَاءَهُمْ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَذَا لَسِحْرٌ مُبِينٌ(76)قَالَ مُوسَى أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ أَسِحْرٌ هَذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ(77) سورة يونس

நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது "இது தெளிவான சூனியம்'' என்றனர். "உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்                    

 (அல்குர்ஆன் 10:76,77)

"இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 26:34)

فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ(36)  سورة القصص

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.                              

 (அல்குர்ஆன் 28:36)

وَفِي مُوسَى إِذْ أَرْسَلْنَاهُ إِلَى فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُبِينٍ(38) فَتَوَلَّى بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ(39) سورة الذاريات

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். "இவர் சூனியக்காரரோ பைத்தியக்காரரோ'' எனக் கூறினர்.                      

(அல்குர்ஆன் 51:38,39)

فَلَمَّا جَاءَتْهُمْ آيَاتُنَا مُبْصِرَةً قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ(13) سورة النمل

நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது "இது தெளிவான சூனியம்'' என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 27:13)

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ(23)إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ(24) سورة غافر

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர் அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று அவர்கள் கூறினர்.

 (அல்குர்ஆன் 40:23,24)

மூஸா நபி உண்மையிலேயே அற்புதம் தான் செய்தார்கள் என்று நம்பியிருந்தால் அவரை ஈமான் கொண்டிருப்பார்கள் இதற்கு ஆதாரமாக மூஸா நபிக்கும் சூனியக்காரர்களுக்கும் போட்டி நடக்கிறது. போட்டியில் மூஸா நபியின் பாம்பு, சூனியக்காரர்களால் பாம்புகளாகக் காட்டப்பட்ட கயிறுகளையும் தடிகளையும் சாப்பிட்டுவிட்டது. உடனே இது உண்மைதான் என்பதை உணர்ந்த சூனியக்காரர்கள், அதுவும் ஃபிர்அவ்னால் கூலிக்கு அமர்த்தப்பட்ட சூனியக்காரர்கள் மூஸா நபியையும் அவர் சொன்ன கடவுள் கொள்கையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:117...122)

எனவே மூஸா நபியவர்கள் உண்மையாகவே அற்புதத்தைச் செய்துகாட்டி னாலும் அதனை மறுப்பவர்கள், இது கற்பனை, கடைந்தெடுத்த சூனியம், இல்லாததை இருப்பாதகக் காட்டுதல் அல்லது இருப்பதை இல்லாததாகக் காட்டுதல் என்ற அர்தத்தில் ஸிஹ்ர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள் என்று அறியமுடிகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment