Sunday, January 08, 2012

கேள்வி பதில்

திருக்குர்ஆனின் 32 அத்தியாயமான ஹாமீம் ஸஜ்தா அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை காலை சுப்ஹுத் தொழுகையில் ஓதகக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் புகாரியில் நபிகளார் ஓதியதாக ஒரு நபிமொழி உள்ளதாமே உண்மையா?
 சாஜித், புதுக்கோட்டை

வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் 32 அத்தியாயத்தை ஓதக்கூடாது என்றும் நாம் கூறவில்லை. அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற சட்டம் இல்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை என்றே கூறுகிறோம். நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் ஓதியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாüல் ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்  அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் "ஹல் அத்தா அலல் இன்ஸான் (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.   

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : புகாரி (891, 1068).முஸ்லிம் (1594, 1595, 1596)

வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் 32 வது அத்தியாயத்தை ஓதுவது தவறில்லை. நபிகளார் ஓதி தொழுவித்துள்ளார்கள். ஆனால் அந்த அத்தியாயத்தின் 15 வசனத்தில் ஸஜ்தா செய்தவதற்கு ஆதாரம் இல்லை. இது தொடர்பாக வரும் அனைத்து செய்திகளும் ஆதாரமற்றவையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும் என்றும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான்  15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.

"நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங்களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்'' என்று அபூ தர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்'' என்று அபூதர்தா (ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.

இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.

ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் நான்கு இடங்களில் ஸஜ்தா செய்வதற்குதான் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்துத் தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, "இவ்வாறு செய்வது எனக்குப் போதும்'' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரீ 1067, 1070

இதே கருத்து புகாரீயில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டு தான் இருப்பேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு

நூல்: புகாரீ 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்: முஸ்லிம் 905, 906

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்), ஸாத் (38வது அத்தியாயம்), இன்ஷிகாக் (84வது அத்தியாயம்), அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தாச் செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரீ 1072, 1073

எனவே 32 அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையில் ஓதலாம். ஆனால் அதில் 15 வது வசனத்தில் ஸஜ்தா செய்வதற்கு ஆதாரம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்த வேண்டுமா?              
ஆமினா, காயல்

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.

739 عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنْ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

நாபிஃஉ  அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' எனக் கூறும்போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும்போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி (739)

பெண்கள் மஞ்சளை முகம், கை, கால்களில் பூசிக் கொள்ளலாமா?

எம்.மைதீன் பல்கீஸ்,சத்திரப்பட்டி
பெண்களுக்கு முகத்தில் முடி வளரும் போதும் அதை தடுப்பதற்கு மஞ்சளை பெண்கள் பயன்படுத்தகிறார்கள். இதைப்போன்று உடலில் ஏற்படும் கட்டிகளை உடைக்கவும் சில தோல் நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற மருத்துவக் காரணத்திற்காக மஞ்சளை பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. மஞ்சள் பூசுவது புனிதம் என்ற நோக்கில் இருந்தால் அது கூடாது.

No comments:

Post a Comment