Thursday, May 03, 2012

வானவர்கள் தொடர்:05

மலக்குகள் நுழையாத இடங்கள்
எம்.முஹம்மத் சலீம் எம்.ஐ.எஸ்.ஸி,மங்களம்

எங்கே செல்லலாம்? எங்கே செல்லக் கூடாது? அங்கே யாருடன் செல்லலாம்? அங்கே யாருடன் செல்லக் கூடாது? என்றெல்லாம் மார்க்கத்தில் நமக்கு செல்வதற்கு தகுந்த, தகுதியில்லாத இடங்களை சொல்லப்பட்டுள்ளதைப் போன்று மலக்குகளுக்கும் சொல்லப்பட்டுள்ளன.

அந்த இடங்களுக்கு அவர்கள் ஒரு போதும் செல்லவே மாட்டார்கள். ஆகவே, அவ்விடங்கள் எவை? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக இப்போது தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப்படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி,

ஆதாரம் : புகாரி (3225)

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள். உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்து விட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

ஆதாரம் : முஸ்லிம் (4272)

நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்கüன் உருவப்படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப்படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

ஆதாரம் : புகாரி (3351)


உருவப்படங்கள், சிலைகள் மற்றும் நாய் இருக்கும் இடங்களுக்கு அருளைத் தரும் மலக்குமார்கள் மட்டுமே வர மாட்டார்கள் என்பதை மேற்காணும் செய்திகள் விளக்குகின்றன. ஆகையால் இந்த விஷயங்கள் நமது இல்லங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், இது போன்ற இடங்களுக்கு நன்மைகள் மற்றும் தீமைகளைப் பதிவு செய்யும் மலக்குமார்கள், உயிரைக் கைப்பற்றும் மலக்குகள், சிறப்பான காரியங்களைக் கவனிக்கும் மலக்குகள், தண்டனையைக் கொண்டுவரும் மலக்குகள் போன்றவர்கள் அதாவது அருளைக் கொண்டு வரும் பணியில் இல்லாத மலக்குகள் வருவார்கள் என்பதை என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலக்குகளின் எண்ணிக்கை


வானவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற ஞானம் அல்லாஹ் வைத் தவிர யாருக்கும் இல்லை. ஆதலால், அவர்களுக்கு நாமாகவே சுயமாக ஏதாவதொரு எண்ணிக்கையைச் சொல்லிவிடக் கூடாது. காரணம், மறைவான விஷயங்கள் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது என்று நாம் நம்பியிருக்கிறோம். இந்நிலையில், வானவர்களின் எண்ணிக்கையை நாமாக கற்பனை செய்து கூறினால், அல்லாஹ்வின் ஆற்றலான மறைவான ஞானம் நமக்கு இருப்பதாக வாதிடுவது போன்றதாகிவிடும்.

நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர் உறுதி கொள்வதற்காகவும், நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும், நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும், யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன்மாதிரியை நாடுகிறான்?'' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழி தவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை (வானவர்களை) அவனைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.

(திருக்குர்ஆன் 74 : 31)

வானவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? என்பதைத் துல்லியமாக அறிந்தவன், அல்லாஹ் மட்டுமே. அதேசமயம் அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்களா? அதிக எண்ணிக்கையில் உள்ளார்களா? குறிப்பிட்ட சில இடங்களில் எத்தனை மலக்குகள் உள்ளனர் என்பதற்கு சரியான பதிலை நம்மால் சொல்ல முடியும். அவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பின்வரும் தகவலின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

(மிஃராஜ் பயணத்தின்போது) "அல்பைத்துல் மஃமூர்' எனும் "வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், "இதுதான் "அல்பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்'' என்று சொன்னார்.

ஆதாரம் : புகாரி (3207)

பெயர் கூறப்பட்டுள்ள மலக்குகள்


நாமெல்லாம் மனிதர்கள் எனும் ஒரே இனமாக இருப்பினும், நம்மில் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக பெயர்கள் இருப்பது போல, வானவர்கள் என்ற இனத்திலும் அவர்களுக்கென தனித்தனியான பெயர்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரது பெயர்களை மட்டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், அப்பெயர்களில் வானவர்கள் இருக்கிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அதே சமயம், அவற்றைத் தவிர்த்து மற்ற பெயர்களை நாமாக யோசித்து அப்பெயர்களிலும் மலக்குமார்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறாகும். ஆகவே பெயர் சொல்லப்பட்ட வானவர்களைப் பற்றிய ஆதாரங்களை காண்போம்.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 2 : 98)

"(நரகத்தின் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்கள் கதையை முடிக்கட்டும்'' எனக் கேட்பார்கள். "நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்'' என்று அவர் கூறுவார்.          

(அல்குர்ஆன் 43 : 77)

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்  அவர்கள் கூறியதாவது: நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் "அல்லாஹும்ம ரப்ப ஜிப்ரீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆரிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தரிஃபூன். இஹ்தினீ ரிமக்துரிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலாஸிராதிம் முஸ்தகீம்' என்று கூறுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.)

ஆதாரம்  : முஸ்லிம் (1418)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை "ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சருமஅமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாபொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகüல் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

ஆதாரம்  : புகாரி (3239)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்கüல் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) "அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி),

ஆதாரம் : புகாரி (
3236)

ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல், மாலிக் என்று நான்கு மலக்குமார்களின் பெயர்கள் மட்டுதான் நமக்கு சொல்லப்பட்டுள்ளன.

ஆனால், இஸ்ராயீல் என்ற பெயரில் மலக்கு ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் அனைத்து உயிர்களையும் கைப்பற்றுகிறார் என்றும் பல முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உயிரைக் கைப்பற்றும் பணிக்கென்று பிரத்யேகமாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மாற்று மதத்தினர் சொல்வதைக் கேட்டு அப்படியே முஸ்லிம்களும் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வது எந்தளவிற்கு பாரதூரமான பிழை என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஏனெனில், இஸ்ராயீல் என்ற பெயரில் மலக்கு ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவொரு சரியான ஆதாரமும் இல்லை.

இன்னும் சொல்வதெனில், நமது உயிரைக் கைப்பற்றுவதற்காக என்று நம்மில் ஒவ்வொருவருக்கும் வானவர் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நியமித்திருப்பதாக அல்லாஹ் தமது திருமறையில் குறிப்பிட்டுள்ளான். அந்த வசனங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 32 : 11)

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். 

(திருக்குர்ஆன் 6 : 61)

தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள்.                 

(திருக்குர்ஆன் 18 : 28)

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள்.         

(திருக்குர்ஆன் 4 : 97)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள்.

(திருக்குர்ஆன் 7 : 37)

இப்லீஸ் மலக்குகளில் ஒருவனா?


ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தை வடிவமைத்த பிறகு நடந்த சம்பவத்தை திருமறையில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். ஆதம் (அலை) அவர்களுக்கு பணியுமாறு அவன் அங்கிருந்த வானவர்களுக்கு கட்டளையிடும் போது அவர்கள் அனைவரும் அக்கட்டளையை நிறைவேற்றினார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிவதற்கு மறுத்ததோடு அதை நியாயம் கற்பித்து தர்க்கம் செய்தான்  என்பதை திருமறையின் வசனங்களின் மூலம் தெரிந்து வைத்துள்ளோம். அந்த வசனங்களில் ஒரு வசனத்தை இப்போது பார்ப்போம்.

உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இல்லை.

(திருக்குர்ஆன் 7 : 12)

வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர் என்பதை படிக்கும் சிலர் அந்த வாசகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்த இப்லீஸ் வானவர்களில் ஒருவனாகத்தான் இருந்தான் என்று வாதிடுகிறார்கள். இந்த வாதம் தவறானது என்பதை இந்த நிகழ்வு தொடர்பாக வந்திருக்கும்  பிற வசனங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். அவன் மலக்குகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்று  மற்றொரு வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான். அந்த வசனத்தை இப்போது பார்ப்போம்.

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.

(திருக்குர்ஆன் 18 : 50)

வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment