Thursday, May 03, 2012

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா?

 (أول ما خلق الله نور نبيك يا جابر - الحديث) رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد الله بلفظ قال قلت : يا رسول الله ، بأبي أنت وأمي ، أخبرني عن أول شئ خلقه الله قبل الأشياء . قال : يا جابر ، إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره ، فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ، ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي ، فلما أراد الله أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء ، فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ، ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهى المعرفة بالله ومن الثالث نور إنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله - الحديث- كشف الخفاء - (1 / 265)

அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு
அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான்.  அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள், வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான். முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியிலிருந்து  வானங்களைப் படைத்தான்.  இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்)
நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265
இந்தச் செய்தி பரவலாக நபிகளாரின் சிறப்பு என்ற பெயரில் இமாம்களின் சொற்பொழிவில் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். குறிப்பாக மீலாது மேடைகளில் பேசுபவர்கள் இறைவனின் ஒளியைக் கொண்டே நபிகளார் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களே முதல் படைப்பு என்றும் மேற்கூறிய செய்தியை அடிப்படையாக வைத்து நீட்டி முழங்கிவருகின்றனர்.
இந்தச் செய்தி சில திருக்குர்ஆன் விரிவுரை நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. தப்ஸீரு ரூஹில் மஆனீ, தப்ஸீரு ரூஹில் பயான் போன்ற நூல்கள் முக்கியமானவையாகும்.
ஆனால் இந்தச் செய்தி எந்த அடிப்படையும் இல்லாத திருக்குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும்.
இந்தச் செய்தி முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த நூலில் இந்தச் செய்தி இடம்  பெறவில்லை. மேலும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதிய எந்த நூலிலும் இது இடம் பெறவில்லை.
முஸன்னஃப்  அல்ஜாமிவுல் கபீர் அஸ்ஸுனன் தஃப்ஸீருல் குர்ஆன் ஆகிய நூல்கள் தான் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. இதில் எதிலும் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்று இச்செய்தியை ஆய்வு செய்த அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் பார்த்த வரையிலும் இந்த செய்தி அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதிய நூல்களில் இடம்பெறவில்லை.
இந்தச் செய்தி ஜன்னத் குல்த் என்ற அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இப்படி ஒரு நூலை அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதியதாக பார்க்க முடியவில்லை.
மேலும் இந்தச் செய்தி திருக்குர்ஆன் கருத்துக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கும் முரணாக உள்ளது.
மனிதனை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்ததாக கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மனிதரே என்று பல இடங்களில் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
(அல்குர்ஆன் 30:20)
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 18:110)
"என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:93)
 (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:20)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் :முஸ்லிம் (5722)
நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்ற செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லாததாலும் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் மாற்றமாக இருப்பதாலும் இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment