Wednesday, July 13, 2011

திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கவுரை
பி. ஜைனுல் ஆபிதீன்.

(சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் 1993ஆம் ஆண்டு அல்முபீன் இதழில் திருக்குர்ஆன் விரிவுரை எழுதப்பட்டது. பல்வேறு காரணங்களால் தொடர முடியாமல் போன அந்தத் தொடரை நமது வாசகர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஏகத்துவம் இதழில் வெளியிடத் தீர்மானித்துள்ளோம். - ஆசிரியர்)
மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காக இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். மிகவும் உயர்வான இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தாலும், இதுபோன்று எவராலும் கொண்டு வர முடியாது என்று சவால் விடும் அளவுக்கு உச்சத்தில் இருந்தாலும் சராசரி மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அதன் வசனங்கள் எளிமையாக அமைந்துள்ளன.
மனிதர்களால் எழுதப்பட்ட நூல்கள் இலக்கியத் தரத்தில் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் அமைந்துள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மனிதர்களை விட்டு அன்னியமாகிப் போவதை நாம் உலகில் காண்கிறோம்.
அல்குர்ஆன் மட்டும் எவரும் எட்ட முடியாத இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தும் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஒன்றே இது இறைவேதம் என்று நிரூபணம் செய்திடப் போதுமானதாகும்.
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
அல்குர்ஆன் 54:17, 22, 32, 40
இவ்வாறு பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.
(முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும், பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காகவுமே உமது மொழியில் இதை எளிதாக்கியுள்ளோம்.
அல்குர்ஆன் 19:97
(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
அல்குர்ஆன் 44:58
இந்த வசனங்களும் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்பதை அறிவிக்கின்றன.
அனைவரும் எளிதில் விளங்கிட ஏற்ற வகையில் அல்குர்ஆன் அமைந்துள்ளதால் விரிவுரைகளோ, விளக்கவுரைகளோ இல்லாவிட்டாலும் அல்குர்ஆனை அனைவரும் விளங்கலாம். மனிதனுக்கு அந்தத் திருக்குர்ஆன் கூறக்கூடிய செய்தியை அனைவரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் கூட மேலதிகமான விளக்கத்திற்காக இரண்டு வழிமுறைகளில் முயற்சி செய்வதை திருக்குர்ஆன் அனுமதிக்கின்றது. அந்த வழிகளில் முயற்சிப்பதை வலியுறுத்தவும் செய்கின்றது.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:44)
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 16:64)
குர்ஆன் விளங்குவதற்கு எளிதானதாக இருந்தாலும், அதைப் பூரணமாக விளங்கிக் கொள்ள நபி (ஸல்) அவர்களின் விளக்கவுரைகளும் அவசியம் என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன. குர்ஆனை முழுமையாக விளங்கிட நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் அவர்களின் வாழ்க்கையையும் துணைக்கழைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)
இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 38:29)
இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தைய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா? (அல்குர்ஆன் 23:68)
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
திருக்குர்ஆனைப் பூரணமாக விளங்க மற்றொரு வழி அதன் வசனங்களைச் சிந்திப்பதாகும். முன்பின் வசனங்களைப் பார்த்து அது சொல்ல வருவது என்ன என்று ஆராயாமல், அவசர முடிவுக்கு வராமல் சிந்தனையைச் செலுத்த வேண்டும் என்பதை இந்த வசனங்கள் கூறுகின்றன.
திருத்தூதரின் விளக்கவுரையையும் அறிவுப்பூர்வமான சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விளக்கவுரையை நாம் எழுதியுள்ளோம். மக்களால் தொழுகையில் அதிக அளவில் ஓதப்படும் சிறு சிறு அத்தியாயங்களுக்கு விளக்கவுரையை எழுத வேண்டும் என்பதற்காக, சூரத்துந் நபா எனப்படும் அத்தியாயத்திலிருந்து இந்த விளக்கவுரையை ஆரம்பித்துள்ளோம். இந்த அத்தியாயங்களை ஓதும் போதே அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் மக்கள் விளங்கி ஓத வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதில் தவறுகளைக் கண்ணுறும் அன்பர்கள் கடமை உணர்வுடன் சுட்டிக் காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அந்நபா - அந்தச் செய்தி
"அம்ம யதஸா அலூன்'' என்று துவங்கும் இந்த அத்தியாயம் "அந் நபா' என்றழைக்கப்படுகின்றது. இதன் பொருள் "அந்தச் செய்தி'' என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.
நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும் என்பதை இதன் உள்ளடக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!
அல்குர்ஆன் 78:1, 2, 3
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم عَمَّ يَتَسَاءَلُونَ عَنْ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَஇவ்வாறு இந்த அத்தியாயம் துவங்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அதனை ஏற்காத மக்கள், ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்க்கையையே கடுமையாக எதிர்த்தனர்.
மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அந்த மக்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான். (அல்குர்ஆன் 36:78)
"நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.                  (அல்குர்ஆன் 17:49)
"எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?'' என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார். (அல்குர்ஆன் 37:51-53)
"நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.  (அல்குர்ஆன் 56:46, 47)
"குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?'' என்று கேட்கின்றனர். மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா? அப்படியானால் அது இழப்பை ஏற்படுத்தும் மீளுதல் தான்'' என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 79:10-12)
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? (அல்குர்ஆன் 75:3)
இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:38)
தாம் உயிர்ப்பிக்கப்படவே மாட்டோம் என்று (ஏக இறைவனை) மறுப்போர் நினைக்கின்றனர். "அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 64:7)
"உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?' என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. "மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 11:7
"நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 6:29
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறு உலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் இறைத் தூதர்களை நம்புவதற்கு இந்த விஷயமே முதல் தடையாக இருந்தது என்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
"நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது உயிர்ப்பிக்கப்படுவீர்கள்' என்று இவர் உங்களுக்கு எச்சரிக்கிறாரா?''
"நடக்காது! உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடக்காது''
"நமது இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ் கிறோம்; நாம் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்''
"இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை'' (என்று அந்தப் பிரமுகர்கள் கூறினர்.)
அல்குர்ஆன் 23:35-38
மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனது தான் இறைத் தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்கள் நம்பாமல் போனதற்குக் காரணம் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது.
ஆனால் அதே சமயம் இன்னொரு கூட்டமோ அதை விட உறுதியாக மறுமை வாழ்வின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது.
இதற்காக அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
தரக் குறைவான வார்த்தைகளால் ஏசப்பட்டார்கள். எனினும் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.
சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.
நாடு கடத்தப்பட்டார்கள். அனைத்தையும் துறந்து விட்டுச் செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்களும் அவர்களைச் சிறிதளவும் அசைக்க முடியவில்லை.
குறைந்த எண்ணிக்கையினராகவும் பலவீனர்களாகவும் இருந்த நிலையிலும், பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்?
இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை தான் காரணம்.
இப்போது மீண்டும் அந்த மூன்று வசனங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!
அல்குர்ஆன் 78:1-3
மறு உலக வாழ்க்கையை நம்பும் விஷயத்தில் அவர்கள் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டு இருந்ததையும், அதுபற்றி அவர்கள் அடிக்கடி வினா எழுப்பிக் கொண்டிருந்ததையும் இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் எழுப்பிய வினாக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இதற்கு முன் நாம் எடுத்துக் காட்டிய வசனங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.
அவர்கள் வினா எழுப்பும் விஷயம் சாதாரணமானதல்ல. அது மகத்தான விஷயம் என்பதும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. அது எப்படி மகத்தான விஷயமாக அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
மறு உலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது.
கல்லுக்கும் மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சாதவர்களாக ஆனது இந்த நம்பிக்கையால் தான்.
அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 59:9)
தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது இந்த நம்பிக்கையால் தான்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 3:103)
ஒற்றுமையின்றி தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது இந்த நம்பிக்கையால் தான்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!  (அல்குர்ஆன் 5:90)
மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம், அதிலிருந்து தங்களை முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையால் தான்.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:12)
தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாகப் பெண்களும் கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது இந்த நம்பிக்கையினால் தான்.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 2:273)
எந்த மனிதரிடமும் எந்த உதவியையும் தேடாமல் சுய மரியாதையைப் பாதுகாக்கக் கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் இந்த நம்பிக்கையால் தான்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 3:104
தங்களுக்கு நல்லது இது, கெட்டது இது என்று தெரியாமல் இருந்த ஒரு கூட்டம், அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் இந்த நம்பிக்கையால் தான்.
இப்படி ஒரு சமுதாயத்தின் வாழ்வையே அடியோடு மாற்றியமைப்பதற்கு இந்த நம்பிக்கை காரணமாக அமைந்துள்ளதால் அதை மகத்தான செய்தி என்று இறைவன் கூறுகின்றான்.
இந்த மகத்தான செய்தி பற்றி அவர்கள் வினா எழுப்பிக் கொண்டிருந்தார்கள் என்றால் அந்த வினாவுக்கு விடை என்ன? அவர்களின் மறுமை பற்றிய ஐயங்களை இறைவன் எவ்வாறு அகற்றுகின்றான்?
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் ஜூலை 2011

النبإ

No comments:

Post a Comment