Thursday, July 28, 2011

ஆறு நோன்பு

ஆறு நோன்பு

பி. ஜைனுல் ஆபிதீன்

 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்,
பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி
இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது.
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.
அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார்.
ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர்.
இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன.
அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ
அபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்.
அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். ஸஅத் என்பாரின் நினைவாற்றல் குறைவு என்றாலும், அவருடன் இணைந்து ஸஃப்வான் அறிவிப்பதால் இந்தக் குறை நீங்கி விடுகின்றது.
ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, முஹம்மத் பின் ஸஅத், அஜலீ, அபூஹாத்தம் ராஸீ, நஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.
உமர் பின் ஸாபிதும், அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமா? என்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.
ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார்.
இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, சில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு)
அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.
இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது.
மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)
நூல்: தாரிமி 1690
ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்.
அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது.
அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது.
இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும்.
மேலும் பெரு நாளைக்கு மறு நாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Thnaks: onlinepj.com

No comments:

Post a Comment