Tuesday, May 24, 2011

கடனும் அதன் சட்ட திட்டங்களும்.

இஸ்லாத்தின் பார்வையில் கடனும்
அதன் சட்ட திட்டங்களும்
ஸலாஹுத்தீன், கெக்கிராவ, இலங்கை.

அல்லாஹ் இவ்வுலகத்தில் மனிதர்களை, சிலரைப் பணக்காரர்களாகவும் சிலரை ஏழைகளாகவும் படைத்துள்ளான். ஏழைகளாக இருப்பவர்கள் தம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் வேறு சில வேலைகளுக்காகவும் சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகிறார்கள்.இவ்வாறு கடன் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் பெரும்பாலும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. திருக்குர்ஆனும் நபிமொழிகளும் இது தொடர்பாகக் காட்டும் வழிமுறைகளைத் தெரிந்து அதன்படி செயல்படுவோம்.
ஆடம்பரத்திற்குக் கடன்
தம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பணம் இல்லாத போது கடன் வாங்குவது குற்றமாகாது. அதே நேரத்தில் ஆடம்பரமாக வாழ்வதற்கு, ஆடம்பரப் பொருள்களை வாங்குதற்காகக் கடன் வாங்குபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
இன்று ஆடம்பரப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்களாக நினைக்கத் துவங்கி விட்டனர்.
டி.வி., செல்போன், வாசிங் மிஷின், ஃபிரிட்ஜ் இது போன்ற பொருள்களை வாங்குவதற்குத் தான் பெரும்பாலும் கடன் வாங்குகிறார்கள். இவைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று நாம் கூறவில்லை. பணம் இல்லாமல் இருக்கும் போது கடன் வாங்கி இவற்றை வாங்க வேண்டுமா? என்றே கேட்கிறோம்.
இது போன்ற ஆடம்பரப் பொருள்களை கடனுக்கு வாங்கி, கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால் மறுமை நாளில் நமது நிலை என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். மேலும் சிலர் இந்த ஆடம்பரப் பொருள்களை வட்டிக்கு வாங்கிப் பயன்படுத்துவோரும் உண்டு. இவைகள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழ முடியாதா? என்பதைச் சிந்திக்கட்டும்.
மன்னிப்பு கிடையாது
கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மறுமையில் மாபெரும் நன்மையைப் பெறும் உயிர் தியாகி (ஷஹீத்) உடைய கடன் பாவங்கள் கூட மன்னிக்கப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்) என்று பதிலளித்தார்கள்.
பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்? என்று கேட்டார்.
மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும் போது (கொல்லப்பட்டு விட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போது தான்) இவ்வாறு கூறினார் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் (3830)
நபிகளாரின் புறக்கணிப்பு
கடன்பட்டு, அதை நிறைவேற்றும் அளவிற்குச் செல்வத்தை விட்டுச் செல்லாமல் இறந்தவர்களின் ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற மாட்டேன் என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்! என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்த போது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), மூமின்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்து விட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2298),
பாதுகாப்புத் தேடுதல்
கடன் வாங்குவது நல்ல பழக்கமில்லை என்பதால் தான் கடன் தொல்லையிலிருந்து நபிகளார் அதிகமதிகம் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்துள்ளார்கள். இறைவா! உன்னிடம் நான் சோம்பலிருந்தும் தள்ளாமையிருந்தும் கடனிருந்தும் பாவத்திருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறை யின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, மஸீஹுத் தஜ்ஜான் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுபவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (6375)
பொய் மற்றும் வாக்குமீறலை உருவாக்கும் கடன்
அடிக்கடி கடன் வாங்குபவர்களிடம் பொய்யும் வாக்குமீறலும் ஏற்படும். இன்று தருகிறேன் என்று கூறியிருப்பார். அன்று கடன் கொடுத்தவர்கள் கேட்டால் நாளை என்று கூறுவார். பின்னர் இரண்டு நாள் கழித்து என்று இழுத்தடிப்பவர்களைக் காண்கிறோம். நல்லவராக இருந்தவர் கடன் வாங்கும் போது இவ்வாறு பொய் சொல்வதும் வாக்குமீறுவதும் ஏற்படுகிறது. எனவே கடன் வாங்குவதைத் தவிர்த்தால் பொய் பேசுதல், வாக்குமீறுதலிருந்து தவிர்ந்திருக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது, இறைவா! பாவத்திருந்தும், கடனிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்கடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன்படுவதிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலத்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி (2397), முஸ்லிம் (1031)
எழுதிக் கொள்ளுதல்
கடன் கொடுக்கும் போது எவ்வளவு கொடுத்துள்ளோம் என்பதையும், எப்போது தர வேண்டும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக, சாட்சிகளை வைத்து எழுதிக் கொள்ளுமாறு திருக்குர்ஆன் பணிக்கிறது. பல இடங்களில் கொடுக்கல் வாங்கலில் எழுதிக் கொள்ளாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். எழுதி வைத்துக் கொண்டால் எவ்வளவு தர வேண்டும், எப்போது தர வேண்டும் என்பது தெளிவாக இருக்கும் போது சண்டைகள் வருது பெரும்பாலும் குறைந்து விடும்.
நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 2:282)
திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருத்தல்
கடன் வாங்குபவர்களுக்கு, அதை திருப்பிச் செலுத்துவோம் என்ற எண்ணம் முதலில் இருக்கவேண்டும். வாங்கி விட்டு இழுத்தடிக்கலாம். அல்லது ஏமாற்றலாம் என்ற எண்ணம் இருக்குமானால் அவரை அல்லாஹ் அழித்துவிடுவான்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்த போது, இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி (2388), முஸ்லிம் (1810)
எவன் மக்கன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூற்கள்: புகாரி (2387), இப்னுமாஜா (2402), அஹ்மத் (8378) குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும்
கடன் வாங்கியவர் எந்த நேரத்தில் கொடுப்பதாகக் கூறினாரோ அதே காலத்தில் கொடுக்க வேண்டும். அல்லது தமது தாமதத்திற்குரிய காரணத்தை எடுத்துக் கூறி இன்னொரு தவணை வாங்கி, அந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்.
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.
(அல்குர்ஆன் 17:34)
வாக்கு மீறி நடப்பது நயவஞ்சகர்களின் குணமாகும்.
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (33), முஸ்லிம் (107)
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (34), முஸ்லிம் (106)
வசதி படைத்தவர்கள் இழுத்தடிக் கூடாது
கடன் வாங்கியவர் அதை திருப்பித் தரும் அளவிற்கு வசதி வரும் போது கடனை திருப்பித் தராமல் இழுத்தடிப்பது குற்றமாகும்.
செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2287)
செல்வந்தரிடம் மாற்றப்பட்டால் ஏற்றுக் கொள்ள வேண்டும்
கடன்பட்டவர் அவரால் அந்தக் கடனை திருப்பித் செலுத்த முடியாத போது ஒரு செல்வந்தர் பெறுப்பேற்றுக் கொண்டால் அல்லது அவர் எனக்குக் கடன் தர வேண்டும். என் கடனுக்குப் பதிலாக அவரிடம் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கடன் வாங்கியவர் கூறினால் கடன் கொடுத்தவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (கடன் கொடுத்தவர்) ஒப்புக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2287)
வாக்கு மீறினால் கண்டித்துப் பேச உரிமை உள்ளது
நாம் வாங்கிய கடனை, கொடுத்த வாக்குப்படி திருப்பிக் கொடுக்கவில்லையானால் கடன் கொடுத்தவர் ஏசுவதற்கும் உரிமை உண்டு. அதை நாம் தட்டிக் கேட்க முடியாது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினர். நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளதுஎன்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2306)
வசதியற்றவர்களுக்கு அவகாசம் அளியுங்கள்
வாங்கிய கடனை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களிடம் தவிர்க்க முடியாத காரணத்தால் திருப்பித் தர முடியாத நிலை ஏற்படும் அளவுக்கு அவர்களது வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது அவர்களுக்குக் கால அவகாசம் கொடுங்கள், அல்லது அவர்களது கடனைத் தள்ளுபடி செய்து மறுமையில் இறையருளைப் பெறுங்கள்.
(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2078), முஸ்லிம் (3178)
நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே சச்சரவிட்டுக் கொள்ளும் (இருவரின்) சப்தத்தைக் கேட்டார்கள். அவ்விருவரின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யுமாறும் மென்மையாக நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (அவ்வாறு) செய்யமாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, நல்லறத்தைச் செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொன்னவர் எங்கே? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான் தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும் என்று கூறினார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3171)
நபி (ஸல்) அவர்களது காலத்தில் எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். அப்போது (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. எங்கள் குரலைத் தமது வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டுவந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி என்னை கஅபே! என்று அழைத்தார்கள்.
நான், இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு என்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கூற, (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்களைப் பார்த்து) நீங்கள் எழுந்து சென்று அவரது (மீதி) கடனை அடையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் (3172)
(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரைக் கண்ட போது அவர், நான் (வசதியின்றி) சிரமப்படுபவன் என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா? என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாகத் தான் என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ், நூல்: முஸ்லிம் (3184)
பரிந்துரை செய்யுங்கள்
கடன்பட்டவர் அதை திருப்பித் தர முடியாத நிலை ஏற்பட்டால் கடன் கொடுத்தவர் அதை முழுமையாகத் தள்ளுபடி செய்ய அல்லது ஓரளவு தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யுங்கள். அல்லது கடனை அடைக்க அந்த ஏழைக்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.
மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்) வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத்திருந்தார். ரூமா கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன் ஓர் ஆண்டு தள்ப் போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. ஆகவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்கடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்கடம் புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம் என்று சென்னார்கள். நான் எனது பேரீச்சந் தோப்பில் இருந்த போது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அக்க மாட்டேன் என்று கூறலானார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அந்த யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்து விட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு (நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்? என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு அங்கே படுக்கை தயார் செய் என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்கடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்து விட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உனது கடனை) அடைப்பாயாக! என்று சொன்னார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (எனது கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்கடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நானே சாட்சியம் அக்கின்றேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி (5443)
ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித் தோழர்கள் இல்லைஎன்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம்! என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ (ரலி), நூல்: புகாரி (2295)
கடன் கொடுத்தவர்களில் முன்னுரிமை பெற்றவர்கள்
பலரிடம் கடன் பெற்றவர் திவலாகி விட்டால் அவரிடம் கடனை வசூல் செய்வதற்காகப் பலரும் செல்லும் போது, பொருளாகக் கடன் கொடுத்தவர் அதே பொருளை அவரிடம் கண்டால் அவருக்கே அதைக் கொடுக்க வேண்டும். ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்த போது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2402), முஸ்லிம் (3174)
அவசியத் தேவை இருந்தாலே தவிர வேறு காரணங்களுக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்போம். அவசியத் தேவைக்குக் கடன் வாங்கினால் அதைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுத்து வாக்குறுதியையும் கண்ணியத்தையும் காப்போம்.
(Tnaks: தீன்குலப் பெண்மணி,ONLINEPJ)


No comments:

Post a Comment