Thursday, April 05, 2012

இப்படியும் சில தப்ஸீர்கள் --தொடர்: 14


குர்ஆனை மறந்த நபிகள் நாயகம்?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.

அல்குர்ஆன் 22:52

இறைத் தூதர்களின் ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்று மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. ஓதுதலில் என்றால் ஓதப்பட்டதில் என்று பொருள். அதாவது இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து பெற்ற தூதுச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது, அவை பற்றி தவறான குழப்பத்தையும், வீண் சந்தேகங்களையும் மக்களுக்கு மத்தியில் ஷைத்தான் ஏற்படுத்துவான் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்வதே குர்ஆனுக்கும், நபிவழிக்கும் பொருத்தமானதாகும்.

தவறான கொள்கையுடைய பல இஸ்லாமிய இயக்கங்கள், குழுக்கள் தங்களது கொள்கைகளை திருக்குர்ஆன் ஆதரிப்பதாகப் பிரச்சாரம் செய்வதை இன்றைக்கும் காண முடிவது இந்த வசனத்தின் அடிப்படையில் தான். ஷைத்தான் ஏற்படுத்துகின்ற குழப்பத்தின் காரணத்தாலே இந்தத் தவறான கொள்கைகள் அவர்களுக்கு சரியானதாகத் தோன்றுகின்றன. எனவே ஓதுதலில் என்பது ஓதப்பட்டதில் என்பதையே குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்திற்குச் சில அறிஞர்களால் தவறான பொருள் செய்யப்படுவதோடு அதன் அடிப்படையில் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும், கொள்கையை ஆட்டம் காணச் செய்யும் அளவில் சில கட்டுக்கதைகளும் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

"இறைத்தூதர்கள் இறைச் செய்திகளை ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தி, இறைத்தூதர்களின் ஓதுதலில் பல தவறுகளை நிகழ்த்தி விடுவான். எனவே இறைத்தூதர்கள் வசனங்களை மாற்றி, தவறாக ஓதிவிடுவார்கள். ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்பதன் அர்த்தம் இதுதான். நபிகள் நாயகம் அவர்களின் ஓதுதலிலும் ஷைத்தான் புகுந்து விளையாடியுள்ளான்'' என்று இந்த வசனத்திற்கு சில இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

நபியவர்கள் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய ஓதுதலில் ஷைத்தான் புகுந்து, நபியவர்களை தப்பும் தவறுமாக ஓத வைத்து விட்டான் என ஒரு கதையை விரிவுரை நூல்களில் உலாவ விட்டிருக்கின்றார்கள். அந்தக் கதையையும், அது எவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதையும் தொடர்ந்து காண்போம்.

நபியவர்கள் ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தியதாக இமாம்களால் விரிவுரை நூல்களில் கூறப்படும் கதை இது தான்.

நபியவர்களுக்கு மக்காவில் இருக்கும் போது அரபுகளின் கடவுள்கள் பற்றி இறைவசனம் அருளப்பட்டது. எனவே அவர்கள் லாத், உஸ்ஸா பற்றி திரும்ப, திரும்ப ஓதலானார்கள். தங்களுடைய கடவுகள்களைப் பற்றி நபியவர்கள் ஓதியதை அம்மக்கள் செவியுற்ற போது சந்தோஷம் கொண்டு, அதைக் கேட்பதற்காக மேலும் நபியவர்களை நெருங்கி வந்தார்கள். அப்போது அவர்களின் ஓதுதலில் "அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள், பரிந்துரை அவைகளிடம் வேண்டப்படும்'' என்று (தவறாக ஓதுமாறு) ஷைத்தான் போட்டான். நபியவர்களும் இதை ஓதினார்கள். அப்போது தான் இறைவன் இவ்வசனத்தை (22:52) அருளினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம் 10, பக்கம் 514

நபியவர்கள் மகாமு இப்ராஹீமில் தொழுது, (நஜ்ம் அத்தியாயத்தை) ஓதிக் கொண்டிருக்கும் போது சற்று தூங்கலானார்கள். அப்போது "லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள். அவைகளிடம் பரிந்துரை வேண்டப்படும்'' என்று (தவறாக) ஓதினார்கள். தங்களது கடவுள்களுக்கு பரிந்துரை செய்யும் ஆற்றல் உண்டு என நபியவர்கள் கூறியதை அவர்கள் செவியுற்ற போது சந்தோஷம் அடைந்தனர். பிறகு நபியவர்கள் "லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை.'' என்று (திருத்தி, சரியாக) ஓதினார்கள்.

நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான், பாகம் 2, பக்கம் 387

இணை வைப்பாளர்கள் பெரிதும் மதித்த, கடவுள்களாகப் போற்றிய லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளைப் பற்றி திருக்குர்ஆனில், "இவை மக்களால் சூட்டப்பட்ட வெறும் பெயர்கள் தாம், கற்பனைப் பாத்திரங்கள் தாம்' என்று இறைவன் நஜ்ம் அத்தியாயத்தில் (53:19-23) குறிப்பிடுகின்றான்.

நபியவர்கள் தொழுகையில் இந்த வசனங்களை ஓத முற்படும் போது ஷைத்தான் ஜிப்ரீல் வடிவில் வந்து லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகள் உண்மைப் பாத்திரங்கள் என்றும், அவைகளுக்குப் பரிந்துரை செய்யும் ஆற்றல் உள்ளது எனவும் வசனங்களை மாற்றி ஓதுமாறு நபியவர்களைக் குழப்பி விட்டானாம். ஷைத்தானால் குழப்பத்திற்குள்ளான நபியவர்களும் அவ்வாறு வசனங்களை மாற்றி ஓதிவிட்டார்கள் என்று மேற்கண்ட விளக்கவுரை (?) யில் கூறப்படுகின்றது. தங்கள் கடவுள்களுக்குச் சக்தி உள்ளது என்பதை நபியவர்கள் தங்கள் வாயாலே ஒப்புக் கொண்டதைக் கண்டு இணை வைப்பாளர்களும் சந்தோஷம் அடைந்தார்கள் என்றும் அவ்விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல விரிவுரை நூல்களில் கூறப்பட்ட இச்சம்பவம் எந்த ஹதீஸ் நூலிலும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சில இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் இச்சம்பவத்தை எந்தக் கண்டனமும் இன்றி பதிவு செய்வதற்கு முன், இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா என்றும், இதை உண்மை என ஒப்புக் கொண்டால் ஏற்படும் விளைவு என்ன என்றும் சிந்தித்திருக்க வேண்டும்.

ஆம்! இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் ஒரு கட்டுக்கதை இது! குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் போர் தொடுக்கும் ஒரு பொய்க்கதை இது!

பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகம்

சாதாரண மனிதர்களுக்கு மறதி உள்ளதைப் போன்று நபியவர்களுக்கும் மறதி ஏற்படும். பல நிலைகளில் நபியவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. அரிதாகத் தொழுகையில் சில ரக்அத்களை கூட்டியும், குறைத்தும் நபியவர்கள் தொழுதது மறதியினால் தான்.

அந்தச் சந்தர்ப்பத்திலேயே, "நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களுக்கு மறதி ஏற்படுவதைப் போன்று எனக்கும் மறதி ஏற்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 401)

எனினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபியவர்கள் ஒரு போதும், கிஞ்சிற்றும் மறந்துவிட மாட்டார்கள். நபிகளார் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச் செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய் விடும். எனவே தான் வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகத்திற்கு மறதி ஏற்படாது என்ற ஒரு பாதுகாப்பை இறைவன் வழங்கியுள்ளான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் எந்த ஒன்றையும் மறந்து விட மாட்டார்கள்.

நபியவர்களின் உள்ளத்தில் புகுந்து, சரியான வசனங்களை மறக்கடிக்கச் செய்து, தவறான வசனங்களை ஓதச் செய்யும் ஆற்றல் ஷைத்தானுக்குத் துளியும் இல்லை. நபிகளாரின் உள்ளத்தை இது போன்ற கேடு ஏற்படாதவாறு இறைவன் பலப்படுத்தியுள்ளான்.  

திருக்குர்ஆனில் உள்ள பல வசனங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

(முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம் நீர் மறக்க மாட்டீர்.

அல்குர்ஆன் 87:6

(முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

அல்குர்ஆன் 25:32

அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!

அல்குர்ஆன் 11:75

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

நபியவர்கள் குர்ஆனில் எதையும் மறக்க மாட்டார்கள் என்று இத்தனை வசனங்கள் கூறும் போது லாத், உஸ்ஸாவை ஆதரித்து நபியவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டிக்காது. அவைகளுக்கு ஆற்றல் உண்டு என நபிகளார் மறந்தும் கூறியிருக்க மாட்டார்கள் என்பதில் அறிவுடைய மக்களுக்குத் துளியும் சந்தேகமிருக்காது. விரிவுரையில் கூறப்பட்ட அந்த விஷமத்தனமான விளக்கம் இத்தனை இறை வார்த்தைகளோடும் நேரிடையாக மோதுவதை அறியலாம்.

விடைதரும் விளக்க வார்த்தைகள்

மேலும் பின்வரும் குர்ஆன் வசனங்களையும் சிந்தித்துப் பார்த்தாலே மேற்கண்ட கதையை நம்புவது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணரலாம்.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 69 :44

"நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 10 :15

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:4

(முஹம்மதே!) நாம் உமக்கு தூதுச் செய்தியாக அறிவிக்காததை நம் மீது நீர் இட்டுக் கட்ட வேண்டும் என்று உம்மைத் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள். (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

அல்குர்ஆன் 17: 73

நபியவர்கள் குர்ஆனில் உள்ளதை மறந்து விட மாட்டார்கள்.

குர்ஆனில் இல்லாத எதையும் ஓத மாட்டார்கள்.

குர்ஆனில் இருப்பதை மாற்றி ஓத மாட்டார்கள்.

இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுபவை தவிர வேறெதையும் ஓத மாட்டார்கள்.

இறைவன் கூறாததைக் கூறியதாக இட்டுக்கட்ட மாட்டார்கள்.

தவறு ஏற்படாதவாறு இறைவன் நபியவர்களை நிலைப்படுத்தியுள்ளான்.

என்பன போன்ற பல கருத்துக்கள் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளை ஆதரித்து, சரியான வசனங்களை மறந்து நபியவர்கள் தொழுகையில் ஓதினார்கள் என்றால் இறைவனின் முத்து முத்தான மேற்கண்ட வசனங்களுக்கு என்ன அர்த்தம்? அச்சம்பவத்தை நம்புவது இவ்வளவு இறைவசனங்களை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமில்லையா? இந்த விளக்கங்கள் குர்ஆனை விளங்க உதவுமா?

இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க நினைக்கும் கயவர்கள் விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கும் இது போன்ற விளக்கங்களைக் கையிலெடுத்து தான் பிரச்சாரம் செய்கின்றனர். எச்சிலைச் சோற்றுக்கு நாக்கைத் தொங்கவிட்டு அலையும் நாய்கள் போல இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைக்க சல்மான் ருஷ்டி போன்ற மனித ஷைத்தான்கள் அலைகின்றார்கள்.

இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களுக்குத் தீனி போடும் விதமாகவே விரிவுரை நூல்களில் காணப்படும் இது போன்ற விளக்கங்கள் அமைந்துள்ளன என்பதை இமாம்களின் விளக்கங்களைக் கண்மூடித்தனமாக நம்பும் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குர்ஆனின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் இமாம்கள் கூறிய இக்கதை அமைந்துள்ளது. இது முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது. இதையும் எவ்விதக் கண்டனமும் இன்றி இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்றால் இதிலிருந்தே விரிவுரை நூல்களின் நிலையை, இமாம்களின் விளக்கங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபியின் கப்பல்

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். "நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:38

திருக்குர்ஆன், நூஹ் நபியின் வரலாற்றை மனிதர்களுக்கு அழகாக எடுத்துரைக்கின்றது. 950 வருடம் தம் சமுதாய மக்களிடையே வாழ்ந்து, ஏகத்துவப் பிரச்சாரம் செய்தும் சொற்ப நபர்களே நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். எனவே ஒரு கப்பல் செய்யுமாறு நூஹ் நபிக்கு இறைவன் கட்டளையிட்டு அதில் நம்பிக்கை கொண்ட மக்களை அழைத்து செல்லுமாறும், ஏனைய மனிதர்களுக்குத் தனது தண்டனையை இறக்கப் போவதாகவும் இறைவன் தெரிவித்தான். நூஹ் நபியும் இறைவனது கட்டளைக்கு இணங்கி, தனிக்கப்பலில், தன்னை நம்பிக்கை கொண்ட மக்களுடன் இறைவழியில் பயணமானார்கள். ஏனையோர் இறை தண்டனைக்கு ஆளானார்கள்.

பல்வேறு படிப்பினைகள் நிறைந்த இந்த வரலாற்றுச் சம்பவம் துளியும் மாற்றமின்றி திருக்குர்ஆனில் பல வசனங்களில் கூறப்படுகின்றது. அவற்றில் இந்த வசனமும் ஒன்று.

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? இதுவரையிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனினும் இமாம்கள் இதில் தலையிட்டு விளக்கமளிக்க புகுந்த பிறகு தான் புற்றீசல்களைப் போன்று பிரச்சனைகளும் கிளம்ப ஆரம்பித்து விட்டன. நல்ல கருத்துக்களை விளக்கியிருந்தால் அதை இவ்வாறு நாம் விமர்சித்திருக்க மாட்டோம். இந்த வசனத்தில் அவர்கள் விளக்கியிருப்பது நூஹ் நபியின் கப்பலைப் பற்றி....

இதோ அந்த விளக்கங்கள்:

ஈஸா அலை அவர்களிடம், "(நூஹ் நபியுடன்) அக்கப்பலில் கலந்து கொண்ட ஒரு மனிதரை நீங்கள் உயிருடன் எழுப்பலாமே. அவர் நமக்கு அதைப் பற்றி தெரிவிப்பாரே'' என்று ஹவாரிய்யீன்கள் கேட்டனர். அவர்களை மண் நிறைந்த பகுதியை நோக்கி ஈஸா அலை அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து இது என்னவென உங்களுக்குத் தெரியுமா? என மக்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என அவர்கள் பதிலளித்தனர். அதற்கு ஈஸா (அலை), "இது நூஹுடைய மகன் கஃப்'' என்று கூறி தனது அஸாவினால் அதை அடித்து, "அல்லாஹ்வின் அனுமதியுடன் நீ நிலைபெறு'' என கூறினார்கள். அப்போது தனது தலையிலிருந்த மண்ணை தட்டிவிட்டவாறே அவர் (நூஹுடைய மகன்) எழுந்து நின்றார்.  அவர் முதியவராக இருந்தார்.

அப்போது ஈஸா (அலை), "நீ இவ்வாறு தான் அழிக்கப்பட்டாயா?'' என வினவினார். அதற்கு அவர், "இல்லை நான் இளைஞனாக இருந்தபோதே மரணித்து விட்டேன். எனினும் அது ஒரு நேரம். இப்போது நான் நரைத்து விட்டேன்'' என பதிலளித்தார். "சரி நூஹுடைய கப்பலை பற்றி நமக்கு நீ கூறு'' என ஈஸா (அலை) கூறினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:

அதன் நீளம் ஆயிரத்து இருநூறு முளங்கள், அதன் அகலம் அறுநூறு முளங்கள், அதில் மூன்று தட்டுக்கள் இருந்தன. ஒரு தட்டில் கால்நடைகள், மற்றொரு தட்டில் மனிதர்கள், மற்றொரு தட்டில் பறவைகள் இருந்தன.

கால்நடைகளின் சாணங்கள் அதிகரித்த போது, "யானையின் தும்பிக்கையை வெட்டி விடு'' என இறைவன் வஹீ அறிவித்தான். நூஹ் (அலை) அவர்களும் அதை வெட்டினார்கள். அதில் அந்த இடத்தில் ஒரு ஆண் பன்றியும் ஒரு பெண் பன்றியும் தங்கின. அவைகள் சாணத்தை நோக்கி வந்தன.

எலி ஒன்று கப்பலின் நங்கூரத்தில் வந்த போது அந்த நங்கூரத்தை எலி சாப்பிட ஆரம்பித்தது. உடனே இறைவன், சிங்கத்தின் இரு கண்களுக்கிடையில் அடி என நூஹ் (அலை) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். அதன் மூக்குத் துவாரத்திலிருந்து ஆண் பூனை, பெண் பூனைகள் வெளிப்பட்டன. அவ்விரண்டும் எலியை நோக்கி வந்தன.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8, பக்கம் 44

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 15, பக்கம் 312

நூஹ் (அலை) அவர்களின் கப்பல் 1200 முழம் நீளம், 600 முழம் அகலம் கொண்டதாக இருந்தது எனவும், அக்கப்பலில் மனிதர்களுக்கு ஒரு தட்டு, பறவைகளுக்கு ஒரு தட்டு, ஏனைய விலங்கினங்களுக்கு ஒரு தட்டு என மொத்தம் 3 தட்டுக்கள் இருந்ததாகவும் இவ்விளக்கத்தில் கூறப்படுகின்றது. இவ்விளக்கத்திற்கு அச்சாரமாக அமைந்த திருக்குர்ஆன் வசனம் எது என்பதை இமாம்கள் விளக்குவார்களா? அல்லது இந்தச் சம்பவத்தை நபிகள் நாயகம் கூறியதற்கான ஆதாரத்தைத் தான் முன்வைப்பார்களா?

விலங்கினங்களின் சாணம் நிறைந்த போது பன்றியை உருவாக்கி அதைக் காலி செய்தது, எலியின் சேட்டை அதிகரித்த போது அதை அழிக்க சிங்கத்தின் மூக்குத் துவாரத்திலிருந்து (என்ன மர்மமோ?) பூனையை உருவாக்கியது என வழக்கம் போல மாயாஜாலக் கதைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. மொத்தத்தில் இதுவும் அடிப்படை ஆதாரமற்ற ஒரு கதை தானே ஒழிய இதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

திருக்குர்ஆன் விளக்கவுரை-- தொடர்: 7


கியாம நாளின் அடையாளங்கள்
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்

உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம் என்பதைக் கடந்த இதழில் கண்டோம்.

ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.

எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.

ஈஸா நபி இறைவனால் உயர்த்தப்பட்டார்கள்; இன்னும் மரணிக்கவில்லை; இறுதிக் காலத்தில் இறங்கி வருவார்கள் என்பதற்கான சான்றுகள்:

வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு சாட்சியாக இருப்பார்.

(திருக்குர்ஆன் 4:159)

ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இவ்வசனத்தில் வேதமுடையோர் என்று குறிப்பிடப்படுவதில் யூதர்களும், கிறித்தவர்களும் அடங்குவார்கள். இவ்விரு சாராரும் ஈஸா நபியை ஏற்பார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. "தவறான வழியில் பிறந்தவர்' என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.

கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள்.

எனவே, இவர்களும் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.

இந்த முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டுவோம்.

"அவரை நம்பிக்கை கொள்ளாமல்'' (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் "அவரை' என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.

இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள "அவரது மரணத்திற்கு முன்னர்'' (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த "அவரது' என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்று விட்டனர்.

"வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்'' என்று அவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

"அவரது மரணத்திற்கு முன்னர்'' என்றால் "ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்'' என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளில் முதல் மொழி பெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. முதல் மொழி  பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.

முதல் மொழி பெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!

"வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.''

இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.

அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் தாம் மரணிப்பதற்கு முன் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது என்றெல்லாம் இந்த மொழி பெயர்ப்பின்படி கருத்து அமைகின்றது.

மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.

ஒவ்வொரு யூதரும், கிறிஸ்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.

இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, "அவரது மரணத்திற்கு முன் - அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸாவை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்ற இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.

இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. ஏனெனில் அவர் மரணித்திருந்தால் "ஈஸா மரணிப்பதற்கு முன்னால்'' என்று கூற முடியாது. மேலும்,

"நம்பிக்கை கொண்டார்கள்'' என்று இறந்த கால வினையாகக் கூறாமல் "நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்று எதிர்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா மரணிப்பதற்கு முன்னால் அவரை எதிர்காலத்தில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புவார்கள் என்பது தான் இவ்வசனத்தின் கருத்து.

இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.

ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி "அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்'' என்று கூறவே முடியாது.

ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நபிமொழியை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் "இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இவ்வசனத்தைப் பாருங்கள்'' என்று கூறியுள்ளதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

(பார்க்க: புகாரி 3448)

ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது மேலும் உறுதியாகின்றது.

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், "அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

திருக்குர்ஆன் 4:156-159

ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.

"அவரை உயர்த்திக் கொண்டான்' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் "தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.

"ரபஅ' என்ற சொல்லுக்கு "அந்தஸ்து உயர்வு' என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி, புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.

"உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்'' என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான்

(திருக்குர்ஆன் 19:57)

ஆனால் ஈஸா நபியைப் பற்றி இங்கே கூறும் போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான். இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.

தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் "ரபஅ' என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளில்லை. கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் கூச்சலிட்டனர். "எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?'' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!  நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம். நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம். "அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி (எனக் கூறுவீராக.)

(திருக்குர்ஆன் 43:57-61)

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம் என்று எப்படிக் கூற முடியும்?

ஈஸா நபியைப் பொறுத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள்; ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர்.

அவர் இறைவனால் உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டவர், இறுதிக் காலத்தில் யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார்; மரணிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார்; என்று நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன்மொழிகள் தெரிவிக்கின்றன.

கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.

'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். 'யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்பதற்கு எந்தச் சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.

முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் 'போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.

அவர் இறங்கக் கூடிய காலத்தில் 'இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'' என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.

தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.

தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி),

நூல்: திர்மிதீ

இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.

ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுக முடிவு நாள் வந்து விடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

யுக முடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

பொருளியல் -தொடர்: 21



கடன் வாங்கியவர் கவனிக்க வேண்டியவை

இன்று சிலர் கடன் வாங்குகின்றார்கள். ஆனால்  கொடுக்கின்ற தவணை வரும் போது கொடுக்க முடியாமல் பல பொய்கள் சொல்லியும் ஏமாற்றியும் விடுகின்றார்கள்.

இதற்கு நபி (ஸல்) அவர்கள் பல எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறார்கள். நாம் கடனை வாங்கும் போது, "நான் இந்தக் கடனை நிறைவேற்றுவேன்' என்ற எண்ணம் முதலில் வேண்டும். பின்னால் அல்லாஹ் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணத்தை வைத்துக்  கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான்.

மாறாக அதனை மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அல்லாஹ் அதனை அப்படியே ஆக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பின் வரக்கூடிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்கüன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.  எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 2387

நபி (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்கு பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் (நபியவர்களின் தோழர் ஒருவரை அழைத்து எனக்கு யாரிடத்திலாவது) கடன் வாங்கி வர வேண்டும் என்று  கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர், அவர்களிடம் "உம்முல்  முஃமினே, நீங்கள் கடன் வாங்கி வருமாறு கேட்கிறீர்கள். உங்களிடம் நிறைவேற்றுவதற்கு ஒன்றும் இல்லையே'' என்று கூறினார். அதற்கு மைமூனா (ரலி) சொன்னார்கள்: "யார் நிறைவேற்ற நாடியவராக கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

நூல்: திர்மிதி 4608   

மரணிப்பவருடைய வஸிய்யத்

ஒரு மனிதன் அவனுடைய மரணத் தருவாயில் கண்டிப்பாக வஸிய்யத் செய்ய வேண்டும். தன்னுடைய பிள்ளைகளை அழைத்து வஸிய்யத் செய்ய வேண்டும். "நான் இன்னாரிடம் இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறேன். அதனை நீங்கள் நிறைவேற்றிட வேண்டும்'' என்று கூற வேண்டும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, "நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்!'' என்றார். மறுநாள்(போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்றில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது. 

(நூல்: புகாரி 1351)

பெற்றோரின் கடனைத் தீர்ப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இன்றைக்குப் பெற்றோரின் கடனை நிறைவேற்றாமல் அவர்களுக்காக மார்க்கம் காட்டாத கத்தம் பாத்திஹா, மவ்லூது போன்றவற்றை ஓதி வருவதைக் காண்கிறோம், இதனை அல்லாஹ்  ஏற்றுக் கொள்ளமாட்டான். நான் கட்டளையிடாத ஒன்றை ஏன் செய்தாய்? என்று தான் கேட்பான்,

ஆனால் தந்தை, தாய் பட்ட கடன் பிள்ளையிடம் தான் சேரும். அதனை இன்றைய சமூகத்தில்  அப்படியே விட்டு விடுவதைகக் காண்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சபைக்கு ஒரு மனிதர் வந்து, "என்னுடைய தாயோ அல்லது தந்தையோ (இரண்டு விதமாகவும் ஹதீஸ்களில் வருகிறது) ஹஜ் கடமையான நிலையில் மரணித்து விட்டார். அவருக்காக வேண்டி நான் நிறைவேற்றவேண்டுமா? ஹஜ் கடமையா?'' என்று கேட்டார். அதற்கு  அம்மனிதரிடம், "உம்முடைய தாய் கடன் வாங்கினால் அதனை நீர் தானே நிறை வேற்றவேண்டும் அப்படி என்றால் அல்லாஹ்வுடைய கடனை நிறைவேற்று! கடன் எப்படி கடமையோ அதேபோன்று தான் ஹஜ்ஜும் கடமை  என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பெற்றோர் பட்ட கடனுக்கு அவருடைய பிள்ளைகள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது, நமது பெற்றோருடைய நண்பர்களிடமும் விசாரிக்க வேண்டும். அப்படி கடன் பட்டு இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற முடியாது என்றால், "எனது தந்தை மரணித்து விட்டார். என்னிடமும் அதை நிறைவேற்றுவதற்கு வசதி இல்லை. ஆகையால் அதனை இந்த உலகத்திலேயே மன்னித்து விடுங்கள்'' என்று கூறவேன்டும். இதனை யாரும் செய்வது கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ் வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான்.

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன் 4.11.12)

ஆண்களுக்கு இவ்வளவு, பெண்களுக்கு இவ்வளவு என்று கூறிக்காட்டும் போது இது எல்லாம் அவர் செய்து விட்டுச் சென்ற வஸிய்யத்துக்குப் பின்னாலும் அவருடைய கடனை அடைத்ததற்குப் பின்னாலும் தான்.  அதற்கு முன்னால் அதை வாரிசு எடுக்க முடியாது. ஆனால் இதை இன்றைக்கு யாரும் செய்வதில்லை.

பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலுள்ள சொத்தை விட்டுச் சென்றால் அதனை அப்படியே கடன் வாங்கியவனிடம் கொடுத்து விடவேண்டும். அது போக அதிகமாக இருந்தாலும் நம்முடைய கையிலிருந்து அதனைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் இதனை நாம் எத்தனை  நபர்கள்  செய்கிறோம்?

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்ட ஒருவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அப்படியென்றால்  நம்முடைய தாய், தந்தையரின் கடனை அடைக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் சென்று விடுவார்களே!  எனவே நாம் எப்பாடு பட்டாவது கடனை அடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது பிள்ளைகள் மீது கடமையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள். 

(நூல்: புகாரி 1852)

நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த  பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள்  நோய்வாய்ப்பட்டு  இருந்த போது கவலை காரணமாக வசூல் வாங்குவதெல்லாம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் இருந்ததெல்லாம் காலியாய் போய் ஒன்றுமில்லாமல் இருந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே எல்லாவற்றையும் முடுக்கி விடுகிறார்கள். அப்போது  பஹ்ரைனில் இருந்து  பணம் வரும் என்று தகவல் வந்தவுடன் அபூபக்கர் (ரலி) ஓரிரு நாட்கள் தாமதிக்கிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம் அல்லது பேரித்தம் பழம் அல்லது கோதுமை ஏதோ ஒன்று அங்கிருந்து வந்த உடன் அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களை எல்லாம் அழைத்துக் கூறினார்கள்.

"மக்களே! ஒரு பொருள் வந்திருக்கிறது. அதில் யாரிடத்திலாவது  நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டு இருந்தால் அல்லது வாக்குறுதி அழித்திருத்தால் அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.  அதனை ஏன் அபூபக்கர் நிறைவேற்ற வேண்டும்? தந்தையுடைய கடனை எப்படி மகன் நிறைவேற்ற வேண்டுமோ அதே போன்று ஆட்சியாளர் பெற்ற கடனுக்கு அவருக்குப் பிறகு யார் வருகிறாரோ அவர் தான் அதற்கு பொறுப்பாளி.

எப்படி நல்லது கெட்டதுக்கு பொறுப்பாளியோ அப்படித் தான் கடனுக்கும் அவர் பொறுப்பாளியாவார். எனவே அதனை அவர் நிறைவேற்ற வேன்டும் இதன் அடிப்படையில் அதனை அபூபக்கர் (ரலி) நிறைவேற்றினார்கள். அந்த அடிப்டையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யாரிடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் கடன் வாங்கியிருந்தார்களோ அவர் வந்து எடுத்து கொள்ளட்டும் என்று கூறினார்கள். அப்போது ஆளுக்கு ஆள் அதனை வாங்கிப் போக ஆரம்பித்தார்கள்.

அந்த அடிப்படையில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு ஒன்று தருவேன் என்று வாக்களித்திருந்தார்கள். அதனைப் போய் கேட்டவுடன் அப்படியே அள்ளி, அள்ளி ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். திரும்பவும் இன்னும் கொஞ்சத்தை கொடுங்கள் என்று கேட்கிறார். மீண்டும் ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். மீண்டும் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்க, மீண்டும் ஐநூறு திர்ஹம், ஆக மொத்தம் ஆயிரத்தி ஐநூறு திர்ஹங்கள் ஜாபிருக்கு அபூபக்ர் (ரலி) கொடுக்கிறார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, "நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று "நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. "இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக!'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2296 2298 2683 3137 3165 4383

நாம் மேலே விவரித்தது எல்லாம்  கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேன்டிய விஷயங்கள் ஆகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்