கிரகணத்
தொழுகையில் குத்பா
மாநபி வழி
சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது இறைவனை நினைவு
கூறும் வகையில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என நபிகளார் கற்றுத்
தந்துள்ளார்கள். மற்ற தொழுகை முறையிலிருந்து சற்று வேறுபடும் அந்தத் தொழுகைகளை
எவ்வாறு தொழ வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகுற காட்டித்
தந்துள்ளார்கள்.
மற்ற தொழுகைகளில்
ஒரு ரக்அத்தில் ஒரு ருகூவு செய்ய வேண்டும். ஆனால் இந்தத் தொழுகையில் இரண்டு
ருகூவுகள் செய்ய வேண்டும். தொழுகை முடிந்த பிறகு குத்பா எனும் பிரசங்கம் செய்ய
வேண்டும் என்பது நபிகளார் காட்டிய நல்வழி.
நபி
(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச்
சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள்
தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம்
ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி
நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் முதலில் ஓதியதை விடக் குறைந்த
நேரம் ஓதினார்கள்.
பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.
பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச்
செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்)
நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம்
விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர்
இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின்
அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ வாழ்விற்கோ கிரகணம்
பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள் என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ 1046
இது போன்ற
இன்னும் ஏராளமான நபிமொழிகளில் கிரகணத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு நபிகளார் குத்பா
உரையாற்றியதாக இடம் பெற்றுள்ளது. இதுவே நபிவழி. ஆனால் குத்பாவைப் பற்றி ஹனபி
மத்ஹபு கூறுவதென்ன?
மத்ஹபு வழி
கிரகணத்
தொழுகையில் குத்பா கிடையாது. ஏனென்றால் அவ்வாறு ஹதீஸ் பதிவுசெய்யப்படவில்லை.
(ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 88)
கிரகணத்
தொழுகைகளில் நபிகளார் குத்பா உரையாற்றியதாக புகாரியில், இன்னும் பிற நூல்களில் வந்துள்ள செய்திகள்
ஹதீஸ்கள் இல்லையா? நபிவழியைக்
கவனத்தில் கொண்டு மத்ஹபு சட்டங்கள் அமைக்கப்படவில்லை என்பதற்கு இது போதுமான
சான்றாகும்.
மஃரிப்
தொழுகையின் முன் சுன்னத்
மத்ஹபு வழி
தமிழகத்தில் உள்ள
அதிகமான பள்ளிவாசல்களில் ஐந்து நேரத் தொழுகைகளின் பாங்கு, இகாமத் சொல்லப்படும் நேர அட்டவணையை சிறு
கரும்பலகையில் எழுதியிருப்பார்கள். அதில் ஒவ்வொரு நேரத் தொழுகையின் பாங்கிற்கும்
இகாமத் சொல்லப்படுவதற்கும் இடையில் 15, 20 நிமிட இடைவேளை விடப்பட்டிருக்கும். ஆனால் மக்ரிபு தொழுகைக்கு மாத்திரம்
"பாங்கு: 6.30, இகாமத்: உடன்'
என்று எழுதியிருப்பர்.
குறித்த நேரத்தில் பாங்கு சொல்லி முடித்த உடன் சற்றும் தாமதிக்காமல் இகாமத்
சொல்லத் துவங்கி விடுவார்கள். இது தான் பெரும்பாலான மத்ஹப் பள்ளிவாசல்களில்
நடைபெறும். இதற்குக் காரணம் மக்ரிபிற்கு முன், சுன்னத்தான தொழுகைகள் ஏதும் இல்லை என மத்ஹப்
கூறுகின்றது.
சூரியன்
மறைந்த பிறகு ஃபர்ளு தொழுவதற்கு முன்னால் எந்த உபரியான தொழுகைகளும்
நிறைவேற்றப்படாது. அதன் காரணமாக மஃரிப் தாமதமாகிவிடும் என்பதினால்.
(ஹிதாயா, பாகம் : 1 பக்கம் : 41)
மாநபி வழி
ஆனால் மாநபி
வழிமுறையைப் பாருங்கள்:
அப்துல்லாஹ்
அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "மஃக்ரிப் தொழுகைக்கு
முன் தொழுங்கள்'' (மூன்று முறை) கூறினார்கள்.
மூன்றாம் முறை கூறும்போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு
சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி,
"இது
விரும்பியவர்களுக்கு மட்டும்தான்'' என்றார்கள்.
(புகாரி 1183)
மக்ரிபின் முன்
சுன்னத்தைத் தொழ விரும்புவர்களுக்கு அதற்கான இடைவெளியை, கால அவகாசத்தை அளிப்பது தான் நபிவழி என்பதை
இந்தச் செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதற்கான நேரத்தை அளிக்காமல் உடனடியாக
ஜமாஅத் தொழுகையை ஆரம்பிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?
முன் சுன்னத்
தொழுவதால் மக்ரிப் தாமதமாகி விடும் என்ற காரணம் இங்கு கூறப்படுகின்றது. படித்த
உடனே இது பொய்யான காரணம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 10 நிமிட இடைவெளி விடுவதால் எப்படி மக்ரிப்
தொழுகை தாமதாகும் என்பதை இந்தச் சட்ட வல்லுனர்கள் (?) சிந்திக்கவில்லை போலும். என்ன காரணம்
கூறப்பட்டாலும் அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்த ஒரு காரியத்தை, வணக்கத்தைத் தடை செய்யும் அதிகாரம் உலகில் வேறு
யாருக்கும் இல்லை என்பதைப் புரிந்து மத்ஹபினர் தங்கள் தவறை திருத்திக் கொள்ள
முன்வர வேண்டும்.
நபிவழியைப்
பின்பற்றிய நபித்தோழர்கள்
குர்ஆன், ஹதீஸை மட்டுமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்;
அவையல்லாத வேறு எதையும்,
யாரையும் பின்பற்றக்
கூடாது. நபித்தோழர்களாக இருந்தாலும் அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டியாக
மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இதையே தவ்ஹீத் ஜமாஅத் தனது
நிலைப்பாடாகக் கொண்டு, மக்கள் மத்தியில்
பிரச்சாரம் செய்து இன்றளவும் நிலைமாறாமல் இறையருளால் நிலைத்து நிற்கின்றது.
ஆனால் சில போலி
தவ்ஹீத்வாதிகளும், மத்ஹபைச்
சார்ந்தவர்களும் ஸஹாபக்களைப் பின்பற்றலாம், அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டி என்பதால்
அவர்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு
இருக்கின்றார்கள். முதலாமவர்களின் முகமூடியையும், இரண்டாமவர்களின் அறியாமையையும் விளக்கக்கூடிய
வகையில் நாம் பதிலளித்து இருக்கிறோம், இன்றும் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தனி விஷயம்.
ஸஹாபாக்களைப்
பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபினர் மக்ரிபின் முன் சுன்னத் விஷயத்தில்
ஸஹாபாக்கள் நிலையைப் பார்க்கத் தவறிவிட்டார்களே? என்பதையே இப்போது கேள்வியாக முன்வைக்கின்றோம்.
நபித்தோழர்கள்
நபிவழி அடிப்படையில் மக்ரிபின் முன் சுன்னத் தொழுபவர்களாகவும், தொழ விரும்புபவர்களுக்கு அவகாசம்
அளிப்பவர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள். இதைப் பின்வரும் செய்திகள்
தெளிவுபடுத்துகின்றன.
அனஸ்
பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை
அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித்
தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு
ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால்
மிகுதியான பேர் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை
முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.
(முஸ்லிம் 1521)
மர்ஸத்
பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (எகிப்தின்
ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று, "அபூதமீம்
(அப்துல்லாஹ் பின் மாலிக்ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள்
தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக
இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம்'' என்று
விடையளித்தார்கள். "இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லை?'' என்று
நான் கேட்டேன். அதற்கவர்கள் "அலுவல்களே காரணம்'' என்றார்கள்.
(புகாரி 1184)
இவர்கள்
நபித்தோழர்களை மதிப்பதாக, பின்பற்றுவதாகக்
கூறுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள், வெற்று ஜாலங்கள் என்பதும், மேலும் இவர்கள்
யாரை இமாம்களாகக் கருதுகின்றார்களோ அவர்களை நபித்தோழர்களை விட
சிறப்புக்குரியவர்களாக மதிக்கின்றார்கள், நபித்தோழர்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெளிவாகப்
புலப்படுகின்றது.
தொழுகையை
முடிக்கும் ஸலாம்
நபிவழி
அடிப்படையில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபுகளின் பெயரால்
தொழுகையை முறை தவறித் தொழுது, தங்கள்
நன்மைகளைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். தொழுகையின் பல செயல்களில் நபிவழிக்கு
மாற்றமான முறையை மத்ஹபுகள் போதிப்பதே இதற்குக் காரணம். தொழுகையின் ஆரம்ப
தக்பீரிலிருந்து ஸலாம் வரை நபிவழிக்கு முரணாண பல காரியங்களை மத்ஹபுகள்
போதிக்கின்றன.
வேற்று மொழிகளில்
தொழுகையைத் துவக்கலாம், அர்ரஹ்மானு அக்பர்
என்று சொல்லலாம், ருகூவின் போது
லேசாக தலையைத் தாழ்த்தினாலே போதும் என்பன போன்ற மார்க்கம் அனுமதிக்காத பல
விஷயங்களை மத்ஹபு அனுமதித்து இருந்ததை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இப்போது
ஸலாம் கூறும் முறையில் நபிவழியுடன் மத்ஹபு எவ்வாறு முரண்படுகின்றது என்பதை காண்போம்.
நபிவழி
நாம் தொழுகையின்
முடிவில் ஸலாம் கொடுக்கும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹ் எனக் கூறுகிறோம். இதுவே நபிவழி. இந்த நபிவழி அடிப்படையில் தான்
அனைத்து முஸ்லிம்களும் தொழுது வருகிறோம். சிறு குழந்தைகள் கூட ஸலாம் கூறும் முறையை
சரியாகக் கடைபிடிப்பதை இன்றளவும் பள்ளிவாசல்களில் காணலாம்.
வலது
புறமும், இடது புறமும் திரும்பி
"அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்''
என்று நபி
(ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்: திர்மிதீ (272),
அபூதாவூத் (845)
ஸலாம் கொடுக்கும்
முறை இது தான் என்பதில் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மத்ஹபு வழி
இரண்டு தடவை
அஸ்ஸலாம் என்ற வார்த்தையைக் கூறுவது தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும். இரண்டாவது
தடவை வாஜிபாகும். அலைக்கும் என்பது கடமையன்று.
(துர்ருல்
முக்தார், பாகம் : 1 பக்கம் : 504)
மேற்கண்ட
வார்த்தைகளின் விளக்கமென்ன?
ஸலாம் கூறும்
போது இரண்டு தடவை அஸ்ஸலாம் என்று சொல்வது தான் கடமை; அலைக்கும் என்று சொல்வது அவசியமில்லை என
மேற்கண்ட மத்ஹபு சட்டத்தில் கூறப்படுகின்றது. அஸ்ஸலாம் என்று மட்டும் கூறி நபி
(ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துள்ளார்களா? அல்லது அவ்வாறு முடிக்கலாம் என்று அனுமதித்துள்ளார்களா? இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள்
முன்வைக்கவில்லை.
ஹனபி மத்ஹபைச்
சார்ந்தவர்கள் தங்கள் பள்ளிகளில் இவ்வாறு ஸலாம் கூறி தங்கள் இமாம்கள் இயற்றிய
மத்ஹபு சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்களா?
"அஸ்ஸலாமு
அலைக்கும்'' என்று நபிகளார்
கூறியதில் அஸ்ஸலாமையும் அலைக்கும் என்பதையும் வித்தியாசப்படுத்த என்ன அடிப்படை?
இக்கேள்விகளுக்கு
மத்ஹபைப் பின்பற்றுவோர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இச்சட்டத்திற்குத் தங்கள்
மனோஇச்சைகளைத் தவிர மார்க்க ஆதாரம் ஏதும் இல்லை.
அது சரி!
வேண்டுமென காற்று பிரித்தும், ஹா ஹா என
வாய்விட்டுச் சிரித்தும் தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்களுக்கு இது
ஒன்றும் பெரிய விஷயமில்லையே! மத்ஹபைப் பின்பற்றுவோர் சிந்திக்கட்டும்.
பாங்கிற்காக
எழுந்து நிற்பது
நபிவழி
யாருக்காகவும்,
எதற்காகவும் எழுந்து
நிற்பது என்ற கலாச்சாரத்தை நபியவர்கள் கற்றுத் தரவில்லை. நம்மை ஒரு ஜனாஸா கடந்து
சென்றால் நம்மைக் கடக்கும் வரை அதற்காக மட்டும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின்
தூதர் கட்டளையிட்டுள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் எழுந்து நிற்குமாறு
அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தரவுமில்லை, கட்டளையிடவுமில்லை.
மத்ஹபு வழி
ஆனால் ஹனபி
மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தாரில் பாங்கு சொல்லப்படும் போது எழுந்து
நிற்பது சிறப்புக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாங்கு
சப்தத்தைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும்
(துர்ருல்
முஹ்தார், பாகம் : 1,
பக்கம் : 397)
இதற்கான ஆதாரம்
நபிவழியில் எங்கே இருக்கிறது? நபியவர்கள் கூறாத
ஒன்றை மார்க்கம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை உணர்வார்களா?
பள்ளியைக்
கட்டியவருக்கே பாங்கு இகாமத் உரிமை
மத்ஹபு வழி
பள்ளிவாயிலைக்
கட்டியவருக்குத் தான் பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் அதிகாரம் உண்டு. இது
பொதுவானதாகும். (அவர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை)
இமாமத் செய்யும் அதிகாரமும் அவருக்கே உரியது. (இது பொதுவானதன்று) அவர்
நேர்மையாளராக இருக்க வேண்டும்.
(துர்ருல்
முக்தார், பாகம் : 1,
பக்கம் 431)
மாநபி வழி
ஒருவர்
பள்ளிவாயிலைக் கட்டினால் அதற்குரிய கூலி அல்லாஹ்விடம் அவருக்கு உண்டு. ஆனால்
பள்ளிவாசலில் அவருக்கென்று பிரத்தியேகமான எந்த உரிமையும் கிடையாது.
ஏனெனில்
"நிச்சயமாக பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன'' என்று
அல்லாஹ் கூறுகிறான்.
(72:18)
அல்லாஹ்வுக்குச்
சொந்தமான பள்ளிவாசல் என்று ஆகும்போது அவனது அடியார்கள் அனைவருக்கும் அதில் சமமான
உரிமைகள் உள்ளன. இஸ்லாம் காட்டக்கூடிய வழிமுறைப் பிரகாரம் முஸ்லிம்கள் தமக்கென ஒரு
தலைவரைத் தேர்வு செய்வார்கள். அந்தத் தலைவர் இஸ்லாம் கூறக்கூடிய தகுதிகளின்
அடிப்படையில் பாங்கு சொல்பவரை, தொழுகை
நடத்துபவரை ஏற்பாடு செய்வார். இதுதான் இஸ்லாம் காட்டக்கூடிய வழிகாட்டுதல் ஆகும்.
பள்ளிவாசலைக் கட்டியவருக்கு அதிகப்படியாக உரிமைகள் இருப்பதாக அல்லாஹ்வோ அவனது
தூதரோ நமக்குக் கூறவில்லை.
பள்ளிவாசலைக்
கட்டியவருக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறப்பு உரிமை அவரோடு முடிந்து
விடப்போவதில்லை. மாறாக பரம்பரை பரம்பரையாக இந்த உரிமை தொடருமாம்.
பள்ளிவாசலைக்
கட்டியவரின் மகனும் அவனது குடும்பத்தினரும் மற்றவர்களை விட அதிக உரிமை
படைத்தவர்கள்.
ரத்துல் முக்தார்,
பாகம் 3, பக்கம் 241
இஸ்லாத்தைப்
பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கின்ற எந்த முஸ்லிமாவது இது மாநபி வழியில் அமைந்த
சட்டம் என்று கருதமுடியுமா? மத்ஹபு
அபிமானிகள் சிந்திக்கட்டும்
கல்லில் தயம்மம்
செய்தல்
நபிவழி
உளூ
செய்வதற்காகத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை நேரும் போது தயம்மும் என்ற
முறையை இறைவன் மாற்றுப் பரிகாரமாக ஆக்கியுள்ளான். தூய்மையான மண்ணில் ஒரு முறை
அடித்து முகத்தையும், கையையும் தடவுவதே
தயம்மும் எனப்படும். மண்ணில் தயம்மும் செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதர் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நம்பிக்கை
கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை
தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை
(தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து
செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது
உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்)
தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள்
முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்!
அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:43)
நம்பிக்கை
கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள்
வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக்
கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக
நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ
இருந்தால், அல்லது உங்களில் ஒருவர்
கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்)
பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில்
உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள்
நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது
அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6
மத்ஹபு வழி
குர்ஆனின்
இவ்வசனங்களுக்கு எதிராகக் கல், மரகதம்
போன்றவற்றிலும் தயம்மும் செய்யலாம் என மத்ஹபு போதிக்கின்றது.
மண், கல், சாந்து, ஜல்லிக்
கல், சுர்மா, மரகதம் போன்ற பூமியின் வகையைச்
சார்ந்த அனைத்தின் மூலம் தயம்மம் செய்வது இமாம் அபூஹனிபா மற்றும் (அவரது மாணவர்)
முஹம்மத் ஆகியோரிடம் அனுமதியாகும்.
நூல் : ஷரஹ்
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 194
மண் என்பது
உதிரியாகக் கிடந்தாலும், அல்லது ஒன்று
சேர்ந்து திரளாக, கட்டியாக இருந்தாலும்
அதில் தயம்மும் செய்வது குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாக ஆகாது. ஆனால் எந்த
அடிப்படையில் கல்லில் தயம்மும் செய்யலாம் என்று இமாம் அபூஹனிபா சட்டம் எடுத்தார்?
மரகதம், ஜல்லிக்கல் ஆகியவற்றிலும் தயம்மும் செய்யலாம்
என்றால் அதற்கு ஆதாரம் என்ன? அவை மண்ணின்
வகையைச் சார்ந்ததா?
தயம்மும் செய்ய
ஏற்ற பொருள் தூய்மையான மண் என்று இறைவன் தெளிவாகக் கூறியிருக்கும் போது கல்,
மரகதம் ஆகியவற்றையும்
அதில் சேர்த்திருப்பது நபிவழிக்குப் பொருத்தமானதா? இது போலவே மத்ஹபுச் சட்டங்களில் அதிகமானவை
குர்ஆன், நபிவழிக்கு
முரணாகவே உள்ளன என்பதை மத்ஹபின் விசுவாசிகள் உணர வேண்டும்.
முரண்பாடுகள்
தொடரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment