ஆதரவற்றவர்களை அரவணைப்போம்
என். ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி, குழுமூர்.
இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்குச் செய்ய வேண்டிய
கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமோ அதே போல் மனிதருக்குச் செய்ய வேண்டிய
கடமைகளையும், அவர்களின் உரிமைகளையும் பேண வேண்டியது மார்க்கத்தில்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகச் சிறந்தது அநாதைகளை
அரவணைப்பதாகும்.
அனாதைகள் மனித சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். இயல்பு வாழ்க்கை
வாழ்வதற்கே திக்கற்றவர்கள். எந்த வகையிலும் தங்கள் வாழ்வாதாரங்களைப் பெற்றிட
எந்தவொரு பக்கபலமும் இல்லாதவர்களாக உலகில் அனாதைகள் இருந்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கை நாமெல்லாம் எண்ணிப் பார்த்திராத வகையில் கடினமிக்கதாக இருந்து
வருகிறது.
பெற்றோரின் இயற்கை மரணங்களால் அனாதைகளாகும் பிள்ளைகள்.
இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுத்தும் பேரழிவுகளால்
நிர்க்கதியாகி போகும் பிள்ளைகள்.
போர் ஏற்படுத்திய சீரழிவுகளால் உருவாகும் அனாதைகள்.
வலிமையுள்ள ஒரு நாடு, ஏழை நாட்டின் மீது
சுமத்தும் பொருளாதார நெருக்கடிகளால் அனாதைகளாக ஆக்கப்பட்டவர்கள்.
என உலகின் பல பாகங்களிலும் நம்மைப் போன்ற மனிதர்கள் ரணங்களை
மனதில் பூட்டி வைத்துக் கொண்டு நடைப் பிணமாய் இந்த அனாதைகள் நடமாடி வருகின்றனர்.
இஸ்லாம் கூறும் மனித நேயப்பணிகளில் அனாதைகளைப்
பராமரிப்பதும் ஒன்று.
அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில்
ரவுடிகளாக, கொள்ளையர்களாக, திருடர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு
உண்டு. இதனால் நாடே பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.
சரியான வழிகாட்டுதல், தெளிவான
அறிவுரைகள் இல்லாமல் கண்டிக்கப்படாமல் வளர்க்கும் போது இது போன்ற நிலைகள்
ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே இது போன்ற குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று
விடாமல் அவர்களை நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு
உள்ளது.
இறைவன் அநாதைகளை நடத்தும் விதம் பற்றியும், அவர்களின்
சொத்துக்களைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் திருக்குர்ஆனில் பல இடங்களில்
கூறியுள்ளான்.
அனாதைகளுக்கு உதவுதல்
இவ்வுலகில் வாழும் போது அனாதைகளை அரவணைத்தும், அவர்களுக்கு
நல்ல நிலையையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.
"அவர்களுக்காக நல்ல ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து
வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ்
நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:220
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும்
இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்!
பெருமையடித்து, கர்வம்
கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 4:36
"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோ ருக்கும்,
உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்
நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம்
அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை
நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும்
கொடுக்க வேண்டும்'' என்று
இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர
(மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.
அல்குர்ஆன் 2:83
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம்
கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும்
பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும்
அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக்
கூறுவீராக!
அல்குர்ஆன் 2:215
செலவிடும் முறை 2:215
வசனத்தின் விளக்கம். எதைச் செலவிட வேண்டும் என்பது தான் இங்கே கேள்வி. ஆனால்
எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்வியுடன் எப்படிச் செலவிட வேண்டும் என்பதற்கும்
பதிலளிக்கப்படுகிறது.
கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக "செலவிடப்படும் பொருள்
நல் வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்'' என்று பதில்
கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (திருக்குர்ஆன் 2:215)
தெளிவுபடுத்துகிறது.
மற்ற பணிகளுக்குச் செலவிடுவதை விட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,
அனாதைகளுக்கும்,
ஏழைகள்
மற்றும் நாடோடிகளுக்கும் செலவிடுவது சிறந்ததாகும் என்பதையும் இவ்வசனம் வலியுறுத்துகிறது.
எத்தனையோ அறப்பணிகளுக்குச் செலவு செய்வோர் பெற்றோரைச்
சந்தியில் விட்டு விடுகின்றனர். உறவினர்களையும், அனாதைகளையும்
கண்டு கொள்வதில்லை. இவர்கள் தான் முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும்
இங்கே போதிக்கப்படுகின்றது.
இறைவனை அஞ்சுபவர்கள்
அனாதைகளுக்கு நன்மை செய்பவர்களும் இறை அஞ்சுபவர்கள் என்று
அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக
அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும்
நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும்
அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில்
சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே
(இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்குர்ஆன் 2:177
கணவாய் என்றால் என்ன?
நன்மைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது கணவாய் என்ற
வார்த்தையை பயன்படுத்துகிறான். கணவாய் என்பது பிறருக்கு உதவுவது என்று
குறிப்பிட்டுள்ளான்.
(நன்மை
தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?
அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்ன வென்பது
உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை
விடுதலை செய்தல், நெருங்கிய
உறவுடைய அனாதைக்கும், அல்லது
வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து
இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).
அல்குர்ஆன் 90 : 10-17
செல்வம் சிறந்த தோழனாக திகழும்...
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள்.
நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் "என் வாழ்விற்குப் பின்,
உங்களுக்கிடையே
உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப்
பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள். ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம்
என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக்கேட்டதும் நபி (ஸல்)
அவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே அந்த நபரிடம், "என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களே உம்மிடம்
பேசாமரிருக்கிறார்களே!'' எனக்
கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது
எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர் நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்
நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; - பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத்
தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன.
மேலும் சாணம் போட்டு, சிறுநீர்
கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும்
இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும்
கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி
அதை எடுத்துக் கொள்கின்றானோ - அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான்.
மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல் குத்ரீ (ரலி),
நூல் : புகாரி 2842, 1465, முஸ்லிம் 1901
இறைவனுக்காக தர்மம் செய்தல்
நாம் தர்மம் செய்வதாக இருந்தால் இறைவனுக்காக தான் செய்ய
வேண்டுமே தவிர பிறர் பார்க்க வேண்டும் என்றோ அல்லது பிறர் பாரட்ட வேண்டும் என்றோ
அல்லது பெருமைக்காகவோ செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை
கீழ்கண்ட வசனம் உணர்த்துகிறது.
குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட)
இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்.
அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும்
ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான். (நம்மை)
மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும்
தயாரித்துள்ளோம். நல்லோர், குவளையிலிருந்து
அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின்
அடியார்கள் பருகுவார்கள்.
அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப்
பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்
பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும்,
அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு
உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அல்குர்ஆன் 76:1-9
அனாôதைகளுக்கு ஐந்தில் ஒரு பாகம்
நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக
இருந்தால், இரு
அணிகள் சந்தித்துக் கொண்ட நாளில், வேறுபடுத்திக் காட்டிய நாளில் நமது அடியார் மீது நாம் அருளியதையும் (நம்பிக்கை
கொண்டவர்களாக இருந்தால்), போர்க்களத்தில்
எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்,
(அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து
கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 8:41
8:41
என்ற வசனத்தின் விளக்கம் போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும்
பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில்
பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும்,
நாடோடிகளுக்கும்
பிரித்துக் கொடுக்க வேண்டும்.
அதாவது போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவிகிதமும்,
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினருக்கும், ஏழைகளுக்கும்,
அனாதைகளுக்கும்,
நாடோடிகளுக்கும்
சேர்த்து இருபது சதவிகிதமும் என்று பிரிக்கப்பட வேண்டும்.
இதில் அல்லாஹ்வையும் குறிப்பிட்டிருப்பதால் அவனுக்கு ஒரு
பங்கு என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு உரியது என்று
கூறப்படும் பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும்
வழங்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின்
குடும்பத்தினரும் ஸகாத் நிதியிலிருந்து எதையும் தொடக் கூடாது என்று தடை
செய்யப்பட்டுள்ளதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து அவர்களுக்கும் அல்லாஹ்
பங்கு ஒதுக்கினான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனாதைகளை விரட்டுபவன் மறுமையை நம்பாதவன்
சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் அனாதைகளையும், ஏழைகளையும்
நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக
நடத்துதலோ கூடாது.
அப்படி நடந்து கொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை)
பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான்.
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப்
பார்த்தீரா? அவன்
அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
அல்குர்ஆன் 107 :1-3
தீர்ப்பு நாளை மெய்யாக்குபவர்கள் செய்ய வேண்டியது
சமுதாயத்தில் பலவீனர்களாயிருப்போர் மீது இரக்கம் கொண்டு உதவுவதாகும்.
அனாதைகளின் சொத்துகளைப் பற்றி நபியின் வஸீயத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்!
உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும்
விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர்
பொறுப்பேற்காதீர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் 3730
அனாதைகளை அரவணைத்த ஸஹாபாக்கள்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள்,
குறிப்பாக
பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பதை கீழ்கண்ட செய்திகளின் மூலம்
அறியலாம்.
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டு விட்டுப்
பின்னர், "எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன்''
என்று
கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை)
நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப்
போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெüத்தேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும்
ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி
எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம்
நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 380
எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால்
(அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு
சுலைம் (ரலி) (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று
தொழுதுகொண்டு) இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 727
நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள்,
"பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக்
கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என்
அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம்,
நான்
உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச்
செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக்
கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில்
ஓர் அன்சாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது
எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது
பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி
(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம்.
உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள்,
"அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி),
"அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு
நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று
தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் மனைவி
ஸைனப் (ரலி),
நூல் : புகாரி 1466
அனாதைகளை அரவணைத்த குறைஷிப் பெண்கள்
நபி (ஸல்) அவர்கள் குறைஷிப் பெண்களின் குணத்தைப் பற்றி
கூறும் போது அனாதைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று
குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள் "குறைஷிப்
பெண்கள் ஆவர்' அல்லது
"நல்ல குறைஷிப் பெண்கள் ஆவர்'.அவர்கள் அநாதைக் குழந்தைகள் மீது அதிகமான பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள்
ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 4946
வளரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment