சொர்க்கத்தில் நபிகளாருடன்
என்.ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி, குழுமூர்
திருமணத்தில் நேர்மை
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
அல்குர்ஆன் 4:3
ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. ஆகவே அவர் விஷயத்தில் தான் ""அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம்'' எனும் (4:3ஆவது) வசனம் இறங்கியது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 4573, 5098
4:3 வசனத்தில் பல திருமணங்கள் செய்வது, அனாதைகளுக்கு நீதி செலுத்துவதுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.
வசதி படைத்த ஒருவர் தமது சிறு வயது மகளை விட்டு விட்டு மரணித்தால் அவரது உறவினர் அந்த அனாதைப் பெண்ணையும், அவரது சொத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது வழக்கம்.
இவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டவர் தமது பொறுப்பில் உள்ள அனா தைப் பெண்ணை தாமே மணந்து கொள்வார். உரிய மஹரும் கொடுக்க மாட்டார். அப்பெண்ணின் சொத்தையும் தனதாக்கிக் கொள்வார்.
இப்படித் தமது பொறுப்பில் உள்ள அனாதைகளை ஏமாற்றுவோருக்கு எச்சரிக்கையாகத் தான் இவ்வசனம் அருளப்பட்டது.
இரண்டு, மூன்று,நான்கு பெண்களை மணந்து கொள்ள அனுமதியிருக்கும் போது உங்கள் பொறுப்பில் நம்பி ஒப்படைக்கப்பட்ட அனாதைப் பெண்களை ஏன் ஏமாற்றி மணந்து கொள்கிறீர்கள்! என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக மனிதன் தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தன்னையும்
அறியாமல் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான். நாம் தானே இவளைப் பராமரிக்கிறோம் என்ற எண்ணத்தின் காரணமாக இப்படி நடந்து கொள்கிறான்.
இந்த பலவீனத்தைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான். உங்கள் பொறுப்பில் உள்ள அனாதைகளை அவர்களுக்குத் தகுதியான இடங்களில் மணமுடித்து வையுங்கள்! நீங்கள் வேறு பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. இதை 4:127 வசனத்திலிருந்து அறியலாம்.
மேலும் அனாதைப் பெண்களின் சொத்துக்களில் மட்டுமின்றி அவர்களின் திருமண உரிமைகளிலும் கூட அநீதி இழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. தனக்குக் கீழே உள்ள அனாதைப் பெண் விரும்பாத போதும் தனது பொறுப்பில் இருப்பதைப் பயன்படுத்தி அவளை வலுக்கட்டாயமாக மணந்து கொள்ளும் அநியாயமும் நடக்க வாய்ப்புள்ளது.
அந்த அநியாயத்தையும் இவ்வசனம் எடுத்துக் கொள்ளும். ""அனாதைகளிடம் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்'' என்பது எல்லா வகையான அநியாயத்தையும் உள்ளடக்கிய சொல்லாகும்.
அனாதைப் பெண்களுக்கு கட்டாயமாக மஹர் கொடுக்க வேண்டும்
பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். ""அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:127
உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். பேரீச்ச மரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக் கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்றவ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்து வந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்து வந்தார். அப்போது தான் ""ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்லி மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும்'' எனும் (4:128ஆவது) வசனம் இறங்கியது.
நூல் : புகாரி 4600
அனாதைகளை அடக்கு முறை செய்ய கூடாது
உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா? உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான். உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான். எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்!
அல்குர்ஆன் : 93:6-11
அனாதைகளின் சொத்தை ஏமாற்றிப் பறிக்கக் கூடாது
உறவுகளில் யாரேனும் தங்கள் குழந்தையில் ஒருவரையோ அல்லது சிலரையோ விட்டு விட்டு இறந்து விட்டால் அந்த குழந்தைகளை சக உறவினரோ, அல்லாதவரோ அக்குழந்தையைப் பராமரிக்க வேண்டும். அவர்கள் சொத்துகளை விட்டு சென்றிருந்தாலோ, அல்லாஹ்வுக்காக அதையும் சேர்த்து அக்குழந்தைகள் விபரமறியும் வரை பராமரிக்க வேண்டும்.
அவர்களின் சொத்துகளை விபரம் அறியாதோரிடம் கொடுத்து விடக் கூடாது என்பதோடு நாமும் அவர்களின் சொத்துகளை முறை கேடாக பயன்படுத்தக் கூடாது என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அல்குர்ஆன் 6:152
அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்!
(அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாக உள்ளது.
அல்குர்ஆன் 4:2
ஆகவே அனாதைகள் விஷயத்தில் குறிப்பாக அவர்களின் சொத்துக்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடக்கக் கூடிய மக்களாக நாம் ஆக வேண்டும்.
சாட்சிகளை ஏற்படுத்துதல்
அனாதைகளின் பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது நீதமான சாட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், அனாதைகளின் சொத்துகள் விஷயத்தில் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமென்பதையும் படைத்த இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் 4:6
நல்ல சொல்லைக் கூறுதல்
செல்வந்தர்கள் தங்களின் சொத்துகளைப் பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் சிறிதளவு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியவில்லையென்றால் நல்ல சொல்லையே கூற வேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளான்
(சொத்துகளை) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள். அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்.
அல்குர்ஆன் 4:8
மக்கள் சிலர், ""இந்த (4:8) இறை வசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டு விட்டது'' என்று கருதுகிறார்கள். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இது மாற்றப்படவில்லை. ஆனால், மக்கள் இதை இலேசாகக் கருதி (செயல்படுத்தாமல் விட்டு) விட்டார்கள். காப்பாளர்கள் இரு வகைப்படுவர். ஒரு வகையினர் (இறப்பவரின்) காப்பாளர் ஆவார். இவர் வாரிசாவார். இந்த (இரத்த பந்தமுள்ள) காப்பாளர் தான் (தூரத்து உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்) கொடுப்பார். மற்றொரு காப்பாளர், இவர் வாரிசாக மாட்டார். (உதாரணமாக, அனாதைகளின் காப்பாளர்.) இவர் தான், (சொத்தைப் பங்கிடும் போது தமக்கும் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் ஏழை எளியவர்களுக்கும், அனாதைகளுக்கும்) நல்ல முறையில் (இன்சொல் பேசி அன்புடன்), ""நான் உனக்கு எதுவும் தர இயலவில்லை'' என்று கூறி விடுவார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 2759, 4576
செல்வந்தர்கள் அனாதைகளைச் சேவையாகப் பராமரித்தல்
அனாதைகளுக்கு பொறுப்பேற்பவர் செல்வந்தராக இருந்தால் அச் சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளவதே சிறந்தது என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
அனாதைகளைச் சோதித்துப்பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் 4;6
""வசதியுள்ளவர் (அதிலிருந்து எடுத்து உண்ணாமல் தம்மைத்) தற்காத்துக் கொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமான அளவு உண்ணட்டும்'' என்னும் (4:6) இறைவசனம் அனாதையின் பராமரிப்பாளரின் விஷயத்தில், அவர் தேவையுள்ளவராக இருந்தால் அனாதையின் செல்வத்திலிருந்து, அந்த (அனாதையுடைய) செல்வத்தின் அளவிற்கேற்ப பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) எடுத்துக் கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 2765
அனாதைகளின் சொத்துகளைப் பராமரிக்க ஏழைகள் கூலி பெறுதல்
அனாதைகளுக்கு பொறுப்பேற்பவர் ஏழையாக இருந்தால் அச் சொத்திலிருந்து நியாயமான முறையில் ஊதியம் பெறலாம் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
அனாதைகளைச் சோதித்துப்பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் 4;6
""அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதைகளின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக்கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!'' எனும் (4:6ஆவது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதனைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 4575
(அந்நாதைகளின் சொத்துகளுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக்கொள்ளட்டும்! என்ற (4:6ஆவது) இறைவசனம், அநாதைகளை (நிர்வகித்து,அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அநாதைகளின் பொருளை உண்ணலாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 2212
அனாதைகளுக்கு உணவளிப்பவர் சொர்க்கத்தில்
நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது அநாதைகளுக்கு உதவி செய்தவர்கள் என்று குறிப்பிடுகின்றான்.
நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அல்குர்ஆன் 76:1-9
கெட்ட மனிதர்கள் அனாதைகளை மதிக்கமாட்டார்கள்
தீயவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது, அவர்கள் அனாதைகளை மதிக்க மாட்டார்கள் என்றும், அவர்களை விரட்டியடிப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றான்.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது ""என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது ""என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான். அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
அல்குர்ஆன் 89 : 15-20
அனாதை சொத்துகளை அபகரிப்பது பெரும் பாவமாகும்
அநாதைகள் அரவணைப்பு மையங்கள் நிறைய உருவாக்கப்பட்டுள்ள காலம் இது. பலரிடமும் நிதி வசூல் செய்து இந்த அநாதை மையங்களைச் சிறப்பாக நடத்துவோரும் உள்ளனர். அநாதைகளின் பெயரால் திரட்டப்பட்ட நிதிகளை அவர்களுக்குக் கொண்டு செல்லாமல் விழுங்குவோரும் உள்ளனர்!
இது போன்று அநாதைக் குழந்தைகளையும், அவர்களின் சொத்துக்களையும் பராமரிக்கும் பொறுப்பேற்று அவர்களை கவனிக்காமல், அவர்களின் சொத்துக்களை அப்படியே தனக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இத்தகையச் செயல் பெரும்பாவச் செயல் என்று இஸ்லாம் அவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறது.
அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்!
(அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாக உள்ளது.
அல்குர்ஆன் 4:2
அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவர்கள் பெரும் பாவத்தைச் செய்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ""பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ""அல் லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 2766, 6857, முஸ்லிம்145
நெருப்பை உண்பவன்
சில வேளைகளில் அநாதைகளாக இருப்பவர்களுக்குச் சொத்துக்களும் நிறைந்திருக்கும். இந்தச் சொத்துக்களை கவனத்தில் கொண்டு அதை அடைய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், அவர்களைக் கவனிப்பது போன்று நடித்து, அவர்களின் செல்வத்தைச் சுருட்ட எண்ணுபவர்களையும் திருமறைக் குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது
அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள்.
அல்குர்ஆன் 4:10
No comments:
Post a Comment