Sunday, June 03, 2012

தவறான வாதங்களும் தக்க பதில்களும்

("தவறான வாதங்களும் தக்க பதில்களும்'' என்ற தலைப்பில் மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த ரமளானில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். மார்க்கப் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் அறிந்திருக்க வேண்டிய செய்திகள், ஆதாரங்கள், வாதப் பிரதிவாதங்கள் அந்த உரையில் அடங்கியிருப்பதால் அதை எழுத்துவடிவில் ஏகத்துவம் இதழில் தொடராக வழங்கத் தீர்மானித்துள்ளோம். இஸ்லாமியக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த உரையாக்கத்தை, எழுத்தாக்கமாக மாற்றித் தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஏகத்துவம் ஆசிரியர்)
பிரிவினை ஏன்?
முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே இறைத்தூதரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே ஒரு புத்தகத்தை நம்முடைய இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம் கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், வணக்க வழிபாடுகளிலும் பலவாறாகப் பிரிந்து கிடக்கிறோம்.
நமது இறைவன் ஒருவனாக இருந்தாலும் நமக்குள் ஒரே மாதிரியாக அவனைப் புரிந்து வைத்திருப்பவர்களாக இல்லை. நம் எல்லாருடைய வேதம் திருக்குர்ஆனாக இருந்தாலும், எல்லாரும் அதை ஒரே மாதிரியாகப் புரிந்து நடக்கக்கூடியவர்களாக இல்லை என்பதை நாம் பார்க்க முடிகிறது. நமது சமுதாயத்தில் இஸ்லாத்தின் பெயரால் நமக்குள் பலவிதமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
இந்தத் தவறான கருத்தில் இருக்கக் கூடியவர்களெல்லாம் ஒவ்வொரு சாராருமே தாங்கள் சொல்வது தான் சரி என்று கூறுகின்றனர். ஒரு கருத்தை வைத்திருப்பார்கள்; அவர்கள் தங்கள் கருத்து தான் சரி என்று சொல்வதற்குச் சில ஆதாரங்களையும், சில வாதங்களையும் கைவசம் வைத்திருப்பார்கள்.
கூடும் என்று சொல்பவன் ஒரு ஆதாரத்தைக் காட்டினால், கூடாது என்று சொல்லக்கூடியவன் வேறொரு ஆதாரத்தைக் காட்டுவான். இது ஹலால் என்று சொல்லக்கூடியவன் ஒரு ஆதாரத்தைக் காட்டினால், இது ஹலால் இல்லை, ஹராம் என்று சொல்லக்கூடியவன் வேறொரு ஆதாரத்தைக் காட்டுவான். இப்படி ஒவ்வொரு விதமான முரண்பாடான கொள்கைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு சாராரும் ஒரு குர்ஆன் வசனத்தையோ, அல்லது ஒரு நபிமொழியையோ ஆதாரமாக எடுத்துக் காட்டி தாங்கள் செய்வது சரி தான், தாங்கள் சரியாகத் தான் நடக்கிறோம் என்று நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் இது எல்லாம் சரியாக இருக்குமா? ஹலால் என்று சொல்வது சரியாக இருந்தால் ஹராம் என்று சொல்லக்கூடியது தவறாகத்தான் இருக்கும். இரண்டும் சரியாக இருக்காது. கூடும் என்று சொல்வது அல்லாஹ்விடத்தில் சரியாக இருந்தால், கூடாது என்று சொல்வது நிச்சயமாக தவறானதாகத் தான் இருக்க முடியும்.
எனவே மாறுபட்ட முரண்பட்ட இரண்டு, மூன்று, நான்கு செய்திகளில் நான்குமே சரியானது என்று சொன்னால் அல்லாஹ் நம்மைக் குழப்பி விட்டான். அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தெளிவில்லாமல் கூறிச் சென்று விட்டார்கள் என்ற கருத்து வந்துவிடும். ஆனால் எந்தக் கொள்கையில் உள்ளவனாக இருந்தாலும் அதற்கு ஒரு ஆதாரத்தைக் காட்டுகிறான்.
மார்க்கத்திற்கு முரணாக இருக்கக்கூடிய பித்அத், மூடநம்பிக்கை, இணைவைத்தல் போன்றவை அனாச்சாரங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதெல்லாம் சரிதான், அவற்றைச் செய்தால் என்ன? அதிலிருந்து இந்த அர்த்தம் வருகிறது என்று சொல்லி அவரவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
நிச்சயமாக இப்படி மாறுபட்ட, முரண்பட்ட விஷயங்கள் கண்டிப்பாக உண்மையாக இருக்க முடியாது. ஏதாவது ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். ஒரு விஷயத்தில் 5 அல்லது 10 மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அதில் ஏதாவது ஒன்று தான் உண்மையாக, சரியானதாக இருக்க முடியும் என்பதை நாம் முதலில் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு மாத்திரம் மட்டுமல்ல! மனிதர்களுடைய பேச்சுக்களை எடுத்துக் கொண்டாலும் சரி! ஒருவர் இறந்து விட்டார் என்று சொல்கிறார். இன்னொருவர் இறக்கவில்லை என்று சொல்கிறார். இதில் இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இறந்து விட்டார் என்று சொன்னால், இறக்கவில்லை என்று சொன்னது பொய்யாகி விடும். இறக்கவில்லை என்று சொன்னால் இறந்துவிட்டார் என்று சொல்லக்கூடிய செய்தி பொய்யாகி விடும். இந்த மாதிரி நாம் பலவிதமான முரண்பாடான செய்திகளை வைத்திருக்கிறோம்.
மனிதன் சொல்கின்ற பேச்சுக்களிலேயே ஒன்றுக்கொன்று முரணாக இருக்குமேயானால் இரண்டில் ஏதோ ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும் என்று நம்முடைய அறிவு சொல்லும் போது, நம்மை விட இந்த அறிவைத் தந்திருக்கின்ற படைத்த இறைவனுடைய மார்க்கத்தில் இதுவும் சரி, அதுவும் சரி என்று இருக்க முடியுமா?
நமக்குத் தான் பேசத் தெரியாது; விளக்கத் தெரியாது; பிறர் தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் ஏதாவது சொல்லி விடுவோம். படைத்த இறைவனுக்குமா பேசத் தெரியாது? அவனை மாதிரி யாருக்குப் பேசத் தெரியும்? அவனை மாதிரி யாருக்குத் தெளிவுப்படுத்த தெரியும்?
இந்த மார்க்கத்தில் மாறுபட்ட கருத்துக்கள், முரண்பட்ட கருத்துகளுக்கு இடமே கிடையாது. ஆனாலும் அவர்கள் குர்ஆன், ஹதீஸை எடுத்துக் காட்டுவார்களேயானால், அதை நீங்கள் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் அவர்கள் வைக்கும் ஆதாரத்திற்கும், அவர்களுடைய கருத்திற்கும் சம்பந்தமே இருக்காது. சம்பந்தமே இல்லாத வகையில் அந்த வசனத்தை, ஹதீஸை திசை திருப்பி, வளைத்து தங்களுடைய செயலை நியாயப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தவறான கொள்கையில் இருககக்கூடியவர்கள் என்னென்ன தவறான கருத்துக்களை வைத்துக் கொண்டு அதைச் சரி என்று வாதிடுகிறார்கள்? அது எப்படியெல்லாம் தவறாக இருக்கிறது? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்படித் தெளிவுபடுத்தினால் தான் முரண்பாடற்ற ஒரு சமுதாயமாக நாம் மாற முடியும்.
நம்முடைய சமுதாயத்தில் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடு வருகின்றது. இந்தக் கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஒன்றுபடுத்துவதற்காகப் பலவிதமான முயற்சிகளைப் பலரும் மேற்கொள்கின்றார்கள். ஒற்றுமை காண ஆலோசனை கூட்டம், ஒற்றுமை காண வழிகாட்டி கூட்டம், ஒற்றுமை காண செயல் திட்டம் என மக்கள் ஒன்றாகக் கூடியிருக்கக்கூடிய காட்சியைக் காண்கிறோம்.
இந்த ஒற்றுமைக் கூட்டம் எது சம்பந்தமாகக் கூடியிருக்கிறது என்று பார்த்தால் நம்முடைய தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது? யாரை எம்.எல்.ஏ.வாக நிறுத்துவது? என்பதில் எல்லா இயக்கத்தினருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வந்தால் அதில் ஒற்றுமை ஏற்படுவதற்காக ஒன்று கூடுவார்கள்.
அல்லது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 வந்துவிட்டால் நமது போராட்டத்தை எங்கு எப்படி நடத்தலாம் என்பதைப் பற்றி அனைவரும் ஒன்று கூடிப் பேசி ஒருமித்த கருத்தில் வர வேண்டும் என்பதற்காக ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள். நம்முடைய பள்ளியில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது பற்றி ஆலோசனை கேட்பதற்காக ஒன்று கூடுகிறார்கள்.
ஆனால் யாராவது, நாம் நம்முடைய மார்க்கத்தில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறோமே! அந்த முரண்பாட்டை நீக்குவதற்காக நாம் அனைத்து இயக்கத்தினரும் சேர்ந்து ஆலோசனைக் கூட்டம், ஒற்றுமை கூட்டம் நடத்தி, நம்முடைய முரண்பாட்டை நீக்கி ஒரே கருத்திற்கு வருவோம் என்று யாராவது முன்வந்ததுண்டா?
நான் தொழுவது சரியா? நீ தொழுவது சரியா? நான் அல்லாஹ்வைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது சரியா? நீ அல்லாஹ்வைப் பற்றி புரிந்து வைத்திருப்பது சரியா? என்று மார்க்க விஷயத்தில் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளைத் தான் முதலில் சரி செய்ய வேண்டும்.
உலக விஷயத்தில் கருத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து அதனைச் சரி செய்யாவிட்டால் அதன் மூலம் பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. ஆட்சிக் கட்டிலில் இவனுக்குப் பதிலாக அவன் இருந்தால் என்ன? இவன் இருந்தால் நமக்கென்ன? எவனும் இருந்து விட்டு போகிறான். இதில் சண்டையிட்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதன் காரணத்தினால் பாரதூரமான, பயங்கரமான விளைவுகள் ஏற்படாது.
ஆனால் மார்க்க மற்றும் மறுமை விஷயத்தில் பிரிந்து கிடக்கக்கூடாது. கொள்கை விஷயத்திலும் நமக்கு மத்தியில் பிரிவினை ஏற்படக்கூடாது. அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் இந்த மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று தான் கூறுகிறான். ஒவ்வொருவரும் கருத்து வேறுபாடு உண்டாக்கி விட்டு, அவரவர் செய்வதை நியாயப்படுத்தி கொண்டு மார்க்கத்தைப் பிரித்து விடாதீர்கள் என்று கூறுகிறான்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.
அல்குர்ஆன்:3:105
இறைவன் இந்த வசனத்தில் தெள்ளத் தெளிவான சான்றுகளை, ஆதாரங்களைக் கொண்டு வந்த பிறகு மனோ இச்சையைப் பின்பற்றி தன்னுடைய மார்க்கத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து விட்டார்களே அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவ்வாறு முரண்பட்டு, பிரிந்து செல்வீர்களானால் உங்களுக்குக் கடுமையான வேதனை, தண்டனை இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறான்.
உலக விஷயங்களில் கருத்து வேறுபாடு கொள்வதால் எந்த விளைவும் ஏற்பட்டு விடாது. ஆனால் மார்க்க விஷயத்தில், அல்லாஹ் என்பவன் யார்? அவனுடைய தூதர் யார்? தொழுவது எப்படி? நோன்பு நோற்பது எப்படி? சொர்க்கம், நரகம் என்றால் என்ன? என்று இது போன்ற விஷயங்களில் ஒரே மாதிரியான முடிவு எடுக்க வேண்டும். நமக்குள் முரண்பாடு வரக்கூடாது என்று கூறுகிறான். மேலும் இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
தமது மார்க்கத்தை பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே) உமக்குச் சம்பந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து தொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
அல்குர்ஆன்: 6:159
இறைவன் இந்த வசனத்திலும் மார்க்கத்தைப் பல கூறாகப் பிரித்து விட்டவர் அவர் உம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை என்று கூறுகிறான்.
உலக விஷயங்களில் பிரிவினை வரலாம்; வராமல் இருக்கலாம். அதைப் பற்றி இறைவன் பேசவில்லை. மார்க்க விஷயங்களில் ஏற்படும் பிரிவினை, முரண்பாடைப்பற்றித் தான் பேசுகிறான். இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு கொள்கை, ஒரு கோட்பாடு தான் இருக்க முடியுமே தவிர, அதுவும் இஸ்லாம், இதுவும் இஸ்லாம் என்பதற்கு இங்கு இடம் கிடையாது.
நீங்கள் பின்பற்றுவது அல்லாஹ்வுடைய மார்க்கமா? நாங்கள் பின்பற்றுவது அல்லாஹ்வுடைய மார்க்கமா? என்பதில் நமக்குள் ஒற்றுமையான கருத்து வரவேண்டும் என்பதற்காகத் தான் நாம் 25 ஆண்டுகளாக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
ஆனால் மாற்றுக் கருத்துடையவர்களோ, "ஊர்த் தலைவரை அல்லது வேட்பாளரை நியமிப்பதில் பிரச்சினை ஏற்பட்டால் அதைப்பற்றிப் பேச வருகிறோம். ஆனால் மார்க்க விஷயத்தில் அனைவருமே நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் சொன்னதைத் தான் பின்பற்றுவோம் என்று கூறி வர மறுக்கிறார்கள்.
எனவே யார் எதை மார்க்கமாகச் சொன்னாலும் அதை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும். அவன் சொல்வதும் சரியாகத் தான் இருக்கும். இவன் சொல்வதும் சரியாகத் தான் இருக்கும் என்று கருதக்கூடாது. இருவரில் யாராவது ஒருவர் சொல்வது தான் சரியாக இருக்க முடியும் என்ற கருத்துக்கு வர வேண்டும். அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மக்களிடம் பின்வருமாறு கூறச் சொல்லி இறைவன் கட்டளையிடுகிறான்.
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை, அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அல்குர்ஆன்: 6:153
இவ்வசனத்தில் மறுமையில் வெற்றியடைய வேண்டுமென்றால் அல்லாஹ்வின் வழியைத் தான் பின்பற்ற வேண்டும். அவ்வாறன்றி அவர்கள் வேறு யாருடைய வழியைப் பின்பற்றினாலும் அது சொர்க்கத்திற்குச் செல்லக்கூடிய வழியை விட்டும் அவர்களை திசை திருப்பி மறுமையில் நஷ்டமடையச் செய்துவிடுவர் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
அதேபோல் யார் இந்த மார்க்கத்தைப் பல கூறாகப் பிரித்து விட்டார்களோ அவர்களை இந்த உலகத்தில் நாம் முஸ்லிம் என்ற பட்டியலில் தான் நாம் வைத்திருக்கிறோம். 72 கூட்டத்தையும் நாம் இட ஒதுக்கீட்டுக்காக அழைப்பு விடுக்கும் போது முஸ்லிம் என்ற ஓரணியில் திரளுங்கள் என்று நாம் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பல பிரிவாகப் பிரித்தவர்களை இறைவன் முஸ்லிம்களுடைய பட்டியலில் சேர்க்காமல் முஷ்ரிக்கீன்களுடைய பட்டியலில் சேர்க்கிறான. அல்லாஹ்விற்கு நிகராக வேறு ஒருவனை வணங்குபவனை மட்டும் முஷ்ரிக் என்று சொல்லாமல், மார்க்கத்தை பல கூறாக பிரித்து அதுவும் சரி. இதுவும் சரி என்று நினைப்பபவர்களையும் முஷ்ரிக் என்றே குறிப்பிடுகிறான்.
தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஓவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.
அல்குர்ஆன்: 30:31
இன்றைக்கு இம்மார்க்கத்தை பல கூறாகப் பிரித்திருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். பள்ளிவாசல்களில் 4 மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று தெளிவாக எழுதி வைத்திருக்கின்றனர். இந்த நான்கும் சரி என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த நான்கு மத்ஹபுகளும் வெவ்வேறு கொள்கைகளையும், வணக்க வழிபாடுகளையும் உடையதாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மார்க்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு பிரித்து கொண்டு, தான் இருக்கும் கொள்கை தான் சரியானது என்றும், நாம் தாம் சரியான கொள்கையில் இருக்கின்றோம் என்றும் நினைத்து மகிழ்கின்றனர். எனவே தான் இந்த வசனத்தில் மார்க்கத்தை பல கூறாகப் பிரித்தவனையும் இணை கற்பித்தோர் பட்டியலில் அல்லாஹ் சேர்க்கிறான். மேலும் இறைவன் கூறுகிறான்,
நூஹூக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே) உமக்கு நாம் அறிவித்ததும், இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்! என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ் தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்.
 அல்குர்ஆன்: 42:13
இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் எந்தப் பிரிவினையும் இல்லாத ஒரே மார்க்கத்தைத் தான் இறக்கினான். ஆனால் அவர்களுக்கு பின்னால் வாழ்ந்தவர்கள் அந்த மார்க்கத்தை 72 பிரிவுகளாக ஆக்கிக் கொண்டார்கள். இவ்வாறு பல குழுக்களாக, பிரிந்து கிடப்பதற்கு காரணம் மனோஇச்சை, முரட்டுப் பிடிவாதம் தான்.
எங்களுக்கு எங்களுடைய முன்னோர்கள், மூதாதையர்கள், இமாம்கள் எதை மார்க்கமாகச் சொன்னார்களோ அது எங்களுக்கு போதும். அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம். வேறு யார் சொன்னாலும், தெளிவான ஆதாரங்களை எடுத்து வைத்தாலும் அதை நாங்கள் செவியேற்கத் தயாராக இல்லை. நாங்கள் எங்களுடைய கொள்கையை விடமாட்டோம் என்று கூறுகின்றனர். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருறையில் கூறுகிறான்,
அவர்களிடம் அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. குறிப்பிட்ட காலக்கெடு வரை உமது இறைவனிடமிருந்து ஏற்பட்ட கட்டளை முந்தியிராவிட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்குப் பின் வேதத்திற்கு உரிமையாளர்களாக ஆக்கப்பட்டோர் அதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.
அல்குர்ஆன்: 42:14
குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று தெரிந்த பின்பும் இவர்கள் தங்களிடத்தில் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் இவர்கள் சொல்வதை நாம் கேட்பதா? அவ்வாறு கேட்டால் நாம் இத்தனை ஆண்டுகளாக மார்க்கமாகச் செய்து வந்ததற்கு அர்த்தமில்லாமல் போய் விடுமே! முன்னோர்கள் சொன்னது பொய்யாகி விடுமே! ஆலிம்கள் சொன்னது பொய்யாகி விடுமே என்று கருதி உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment