நாஸ் மற்றும் ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை
எழுத்து : முஹம்மது தாஹா கடையநல்லூர்
இந்த இரண்டு சூராக்களும் மக்காவில் அருளப்பட்டன என்று பெரும்பாலான குர்ஆன் மொழிபெயர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதா அல்லது மதீனாவில் அருளப்பட்டதா என்பதை சிந்தித்து கண்டுபிடிக்க முடியாது.
மக்காவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் மதீனாவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் தகுந்த சரியான நபிமொழியைக் கொண்டு தான் நிரூபிக்க வேண்டும். அல்லது நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அதைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். அதுவும் ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்று எல்லா மொழிபெயர்ப்புக்களிலுமே ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் மக்கீ என்றும் மதனீ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான அத்தியாயங்களுக்கு மக்கியாக இருப்பதற்கோ மதனியாக இருப்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் காணக் கிடைக்கவில்லை. குர்ஆனில் 95 சதவீத அத்தியாயங்களை மக்கீ என்றோ மதனீ என்றோ ஆதாரத்துடன் சொல்லவே முடியாது. மக்காவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான். மதினாவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று பொதுவாக நம்பினால் போதுமானது.
மேற்சொன்ன அடிப்படையில் பார்த்தால், சூரத்துந் நாஸும் சூரத்துல் ஃபலக்கும் மக்காவில் அருளப்பட்டது என்பதற்கோ மதீனாவில் அருளப்பட்டது என்பதற்கோ எந்தச் சான்றுமில்லை.
தமிழகத்தில் சில உலமாக்களால் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார். ஆனால் புரசைவாக்கத்தில் இமாமாகப் பணிபுரிகிற நிஜாமுத்தீன் மன்பயீ என்பவரது மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்ட மதனீ வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்.
நேர்முரணான இந்த இரண்டு தகவல் நமக்கு உணர்த்தும் செய்தி என்னவெனில், இந்த இரண்டு அத்தியாயங்களும் மக்காவிலும் அருளப்படவில்லை. மதினாவிலும் அருளப்படவில்லை. பிறகு எப்படி விளங்க வேண்டுமெனில், மக்கா, மதீனா எங்கு வேண்டுமானாலும் அருளப்பட்டிருக்கலாம். நபியவர்களின் 23 ஆண்டு நபித்துவ வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இறைவனால் அருளப்பட்டது என்று நம்பினால் போதுமானது.
இந்த இரண்டு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டதா அல்லது மதீனாவில் அருளப்பட்டதா என்பது குறித்து நபித்தோழர்களிடத்திலும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இப்னு அப்பாஸ் என்ற ஒரு ஸஹாபியே இரண்டு விதமான கருத்தைப் பதிவு செய்கிறார். ஒரு தடவை மக்கீ என்றும் இன்னொரு தடவை மதனீ என்றும் மாறி மாறி கருத்துத் தெரிவிக்கிறார். இதிலிருந்தும் இந்த இரண்டு அத்தியாயங்கள் மக்கீயா அல்லது மதனீயா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பது தெளிவாகிறது. இரண்டில் எதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை.
இந்த அத்தியாயங்களின் விளக்கத்திற்குப் போவதற்கு முன்னால் இவற்றின் சிறப்புக்களைப் பார்த்து விடுவோம்.
தூங்கும் முன் ஓத வேண்டிய சூராக்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால்
குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 5748, 6319,5018
குர்ஆனில் 114 அத்தியாயங்கள் இருக்கும் போது நபியவர்கள் குறிப்பிட்ட மூன்று சூராக்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஓதியிருப்பதே இதற்கு உரிய சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
நோய் ஏற்படும் போது ஓதி ஊதுதல்
ஒருவர் நோய் வாய்ப்படும் போது தனக்குத் தானே இந்த மூன்று அத்தியாயங்களை ஓதி தனது உடலில் ஊதிக் கொள்ளலாம். தடவிக் கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஓதிப் பார்க்காத 70 ஆயிரம் பேர் தான் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வார்கள் என்ற ஹதீஸுக்கு முரணாக இதைக் கருதக் கூடாது. ஏனெனில் நபியவர்களும், ஸஹாபாக்களும் இப்படி ஓதிப் பார்த்திருக்கிறார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அல்லது குறிப்பிட்ட் நோக்கத்துக்காக ஓதிப்பார்த்த துஆக்களை ஓதுவது மேற்கண்ட ஹதீஸுக்கு முரணாக ஆகாது. எனவே ஒருவர் தனக்குத்தானே ஓதிப் பார்த்துக் கொள்ளலாம், ஓத முடியாத நிலையில் இருப்பவருக்கு இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து மற்றவர்கள் ஓதிப் பார்த்துக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு விட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 4439, 5735, 5751, முஸ்லிம் 4413, 4414
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், "அல்முஅவ்விதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களது (இறப்பிற்கு முன்) நோய் கடுமையான போது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடலின் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 5016
ஒரு மனிதன் எதையேனும் கண்டு பயந்தாலோ, உள்ளம் படபடத்தாலோ, துன்பத்திற்கு அஞ்சினாலோ, மனம் பேதலித்தாலோ, இப்படி எதற்காகவும் பாதுகாப்புத் தேடுவதற்காக அழகிய சொற்கள் இந்த சூராவில் உள்ளது. இவைகளை ஓதிப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாம்.
நபியவர்கள் உக்பத்து பின் ஆமிர் என்ற நபித்தோழரிடம், நீ சொல் என்று சொன்னார்கள். அதற்கு அவர், நான் எதைச் சொல்ல என்று கேட்டார். குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவீராக என்று சொல்லி, நபியவர்கள் அவைகளை ஓதினார்கள். பிறகு, மக்கள் இவற்றை ஓதி பாதுகாப்புத் தேடுவதை விட வேறெதனையும் பாதுகாப்புத் தேடுவதற்குப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்: நஸாயீ 5336, 5334, 5335, 5337
தூங்கும் போதும், எழுந்ததற்குப் பின்னாலும் இந்த அத்தியாயங்களை ஓத வேண்டும். தூங்கி எழுந்தவுடன் 113, 114 ஆகிய இரண்டை மட்டும் ஓதினால், அது ஒரு நாள் முழுவதும் ஒரு மனிதனைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்கிறது.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் ஒரு கொட்டகையில் அமர்ந்திருந்தேன். அப்போது நபியவர்கள், உக்பாவே! நீ வாகனத்தில் (பிரயாணம்) செல்ல மாட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு நான், தங்களுக்குரிய வாகனத்தில் (பிரயாணம்) செல்வது கண்ணியக் குறைவாக ஆகிவிடாதா? என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் நீ வாகனத்தில் (பிரயாணம்) செல்வதை விரும்புகிறாயா? என்று கேட்டதற்கு, அது பாவமாக ஆகிவிடும் என்று அஞ்சுகிறேன் என்றேன். அப்போது நான் சிறிது தூரம் வாகனத்தில் ஏறி பிரயாணம் செல்ல நபியவர்கள் வாகனத்திலிருந்து கீழிறங்கி நடந்து வந்தார்கள். பிறகு நபியவர்கள் வாகனத்தில் அமர்ந்து வர நான் சிறிது தூரம் நடந்து வந்தேன். அப்போது நபியவர்கள், மக்கள் படிக்கிற சூராக்களில் சிறந்த இரண்டு சூராக்களைக் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டுவிட்டு, குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இரண்டு சூராக்களையும் எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லபட்டதும் முன்சென்று அந்த இரண்டு சூராக்களையும் (தொழுகையில்) ஓதினார்கள். பிறகு (தொழுகையை முடித்து) என்னைக் கடந்து செல்லும் போது, உக்பதுப்னு ஆமிரே! என்ன கருதுகிறாய்? அந்த இரண்டு சூராக்களையும் தூங்கும் போதும் எழுந்திருக்கும் போது ஓதுவீராக என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்: நஸாயீ 5342
இறங்கிய காரணம்
இந்த இரண்டு அத்தியாயங்களும் இறங்கியதற்கான காரணத்தைப் பார்த்தால், நபியவர்களின் மீது சூனியம் வைக்கப்பட்டதாகவும் அப்போது தான் ஜிப்ரயீல் இந்த இரண்டு சூராக்களையும் அருளியதாகவும். நபியவர்களுக்கு எதிராக யூதன் ஒருவன் ஒரு நூலில் பதினோரு முடிச்சு போட்டு சூனியம் வைத்ததாகவும், ஜிப்ரயீல் இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு வசனமாக ஓதும் போதும் ஒவ்வொரு முடிச்சு அவிழ்ந்ததாகவும் அது தான் இவ்வசனம் இறங்கக் காரணம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தச் செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் தமது தலாயிலுந் நுபுவ்வா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்தச் செய்தி சரியானதாக இல்லை. ஏனெனில் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இதைத் தவறு என்று சுட்டிகாட்டி பதிவு செய்கிறார். இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி)யிடமிருந்து இப்னு ஸஅத் என்பவர் அறிவிக்கிறார்.
ஆனால் இந்த இப்னு ஸஅத் என்பவருக்கும் இப்னு அப்பாஸ் (ரலி)க் கும் இடையில் துண்டிப்பு (முன்கதிஃ) இருக்கிறது. அதாவது இப்னு ஸஅதுக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) க்கும் தொடர்பே இல்லை. இப்னு அப்பாஸ் காலத்தில் இப்னு ஸஅத் வாழவே இல்லை. எனவே நபியவர்களின் மீது சூனியம் வைக்கப்பட்டதற்காகத் தான் இந்த இரண்டு சூராக்களும் இறங்கியது என்பது பலவீனமாகிறது.
நூல்கள்: இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 575, ஃபத்ஹுல் பாரி, பாகம்: 10, பக்கம்: 225, தல்ஹீஸுல் ஹபீர், பாகம்: 4, பக்கம்: 40
என்வே இந்த இரண்டு அத்தியாயங்களும் நபியவர்களின் சூனியம் சம்பந்தமாகத் தான் அருளப்பட்டது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை. நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது சம்பந்தமாக விரிவாகப் பின்னால் பார்க்கலாம்.
சூராவின் பொருள்
இந்த சூராவின் மொழிபெயர்ப்பைப் பார்த்துக் கொள்வோம். தனித்தனியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் தெரிந்து கொள்வோம்.
قُلْ - (குல்) நபியே நீர் சொல்வீராக!
أَعُوذُ - (அவூது) நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
بِرَبِّ النَّاسِ -(பிரப்பின் னாஸ்) மனிதர்களின் கடவுளிடத்தில் (மனிதர்களைப் படைத்துப் பரிபாலிப்பவன்).
مَلِكِ النَّاسِ - (மலிக்கின் னாஸ்) மக்களின் அரசன் (சொந்தக்காரன், உடமையாளன்).
إِلَهِ النَّاسِ - (இலாஹின் னாஸ்) மனிதர்கள் வணங்குவதற்குத் தகுதியான(கடவுள்)வன்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ - (மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்) மறைந்திருந்து தவறான எண்ணங்களை (வஸ்வாஸ்) ஏற்படுத்துகிற தீங்கிலிருந்து.
الْخَنَّاسِ - மறைந்திருப்பவன் (ஒளிந்திருப்பவன்)
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ - (அல்லதீ யுவஸ்விஸு ஃபீ சுதூரின்னாஸ்) மனிதர்களின் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துகிறவன்.
مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ - (மினல் ஜின்னத்தி வன்னாஸ்) (இத்தைகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.
மொத்தமாக இதன் பொருள்
முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
(அல்குர்ஆன்: 114:1..6)
சூராவின் விரிவுரை
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ - (குல் அவூது பிரப்பின் னாஸி) மனிதர்களின் கடவுளிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் நபியே நீர் சொல்வீராக!
இந்த வசனத்தின் மூலம் இறைவன் நமக்குச் சொல்லும் செய்தி, இறைவனின் தூதர்களாக இருந்தாலும் அவர்களாகவே தங்களை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் நபிகள் நாயகத்துக்கு இறைவன், பிரார்த்திப்பதின் மூலம் பாதுகாவல் தேடச் சொல்கிறான்.
வெறுமனே பாதுகாப்புத் தேடச் சொல்லாமல், இறைவனின் மூன்று பண்புகளைக் கூறுவதன் மூலம் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டுத் தான் பாதுகாவல் தேடச் சொல்லுகிறான். அந்த மூன்று பண்புகளும் உள்ளவன் தான் பாதுகாப்பு தேடப்பட தகுதியானவன் என்பதால் பொருத்தமான அந்த மூன்று பண்புகளை இங்கே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
بِرَبِّ النَّاسِ - (பிரப்பின் னாஸி) மனிதர்களின் இரட்சகன்
ரப் என்றால் படைத்து பரிபாலிப்பவன். அதாவது மனிதனைப் படைத்ததோடு நின்றுவிடாமல் அவனைப் பராமரிக்கவும் செய்கிறான்.
செடி கொடிகளை நட்டுவைத்து விட்டு, பிறகு அதற்குத் தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து, பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு உரம், மருந்துகளைப் பயன்படுத்தி செடிகளைப் பராமரித்து பாதுகாத்து வருபவனுக்கு ரப் என்று சொல்லப்படும். அது போல அல்லாஹ் மனித குலத்தைப் படைத்து பராமரிக்கின்றான் என்று சொல்லுகிறான்.
مَلِكِ النَّاسِ - (மலக்கின் னாஸி) மனிதர்களின் அரசன்.
மலிக் என்றால் அரசன், உடமையாளன், சொந்தக்காரன் என்று சொல்லலாம். இதை விளங்கிக் கொள்வதற்கு மேற்சொன்ன உதாரணத்தையே விளக்கத்திற்கு எடுக்கலாம். செடி, கொடிகளை நட்டு வைத்துப் பராமரிப்பவர், சிலவேளை தானே அதற்குச் சொந்தக்காரனாக உடமையாளனாக இருப்பான். சில வேளை, செடி கொடிகளுக்கும் அவற்றை நட்டுவைக்கிற இடத்திற்கும் உடமையாளராக இருக்கிற தன்னல்லாத முதலாளிக்காக (கூலி வாங்கிக் கொண்டோ கூலி வாங்காமலோ) அவைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்வான். இப்படி பிறருக்காக பராமரிக்கும் போது, பராமரிப்பவன் உழவனாக இருந்தாலும் அதற்கு அவனால் உரிமை கொண்டாட முடியாது.
இது போன்று இறைவனை விளங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் பிரப்பின் னாஸுக்கு அடுத்ததாக மலிக்கின் னாஸைச் சொல்லி, மனிதனைப் படைப்பதும் பராமரிப்பதும் பிறர் சொந்தம் கொண்டாடுவற்கோ உடமையாக்கிக் கொள்வதற்கோ இல்லை என்பதை நிலைநாட்டுகிறான்.
அவன் தானாகவே தான் இதையெல்லாம் செய்கிறான். யார் சொல்லியும் இதைச் செய்யவில்லை. அவனே மனிதர்களுக்குரிய முழு உடமையாளன் என்பதை நம்ப வேண்டும் என்பதற்காவும் இந்த மலிக்கின்னாஸ்.
இதை இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ள, வீடு கட்டும் பணியைச் செய்யும் கொத்தனாரை உதாரணமாகச் சொல்லலாம். ஒருவர் ஒரு வீட்டைக் கட்டும் பணியைச் செய்கிறார். அதனால் அந்த வீட்டைக் கட்டுகிற கொத்தனார் அந்த வீட்டுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. வீட்டுக்குச் சொந்தக்காரன் இன்னொருவனாக இருப்பான். ஆனால் அல்லாஹ்வின் பராமரித்தல் இத்தகையது அல்ல. யாருடைய கட்டளையுமின்றி தானாகவே மனிதகுலத்தைப் படைத்து பராமரித்து வருகிறான். யாருக்காகவும் இறைவன் வேலை செய்யவில்லை. தானாகவே செய்கிறான். அதனால் தான் இறைவன் மனிதர்களுக்கு எஜமானாகவும் இருக்கிறான் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறான்.
إِلَهِ النَّاسِ - (இலாஹின் னாஸ்) மனிதர்கள் வணங்குவதற்குத் தகுதியான(கடவுள்)வன்.
நாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக நம்பியிருக்கிற லாஇலாஹ இல்லல்லாஹு (வணங்குவதற்குத் தகுதியானவன் (கடவுள்) அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்பதில் உள்ள வாசகத்தைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இலாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன்.
மனிதர்களின் அனைத்து வணக்கத்திற்கும் உரியவன், சொந்தம் கொண்டாடுகிற தகுதியுள்ளவன் என்று விளங்க வேண்டும்.
ஆக இறைவன் தனக்குச் சொந்தமான ரப்பின் னாஸ், மலிக்கின் னாஸ், இலாஹி ன்னாஸ் ஆகிய மூன்று பண்புகளின் மூலம் தன்னைப் புகழ்ந்து பாராட்டிய பிறகு தன்னிடம் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். இப்படி இறைவனைப் புகழ்ந்து பாராட்டிவிட்டு பிரார்த்தனை செய்வதை இறைவன் விரும்புகிறான் என்பதையும் இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
வஸ்வாஸின் விளக்கம்
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ - (மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்) மறைந்திருந்து தவறான எண்ணங்களை (வஸ்வாஸ்) ஏற்படுத்துகிற தீங்கிலிருந்து.
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ - (அல்லதீ யுவஸ்விஸு ஃபீ சுதூரின்னாஸ்) மனிதர்களின் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துகிறவன்.
வஸ்வாஸ் என்பதற்கு, இல்லாததை இருப்பதாகக் காட்டுவது, மாயை, பொய், எதார்த்தத்திற்கு மாற்றமானது அதாவது அறிவில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுதல், தவறானதை சரியாகக் காட்டுதல் ஆகிய கருத்தைக் கொள்ளலாம்.
மனிதனின் உள்ளத்திற்கு தவறானதைச் சரியாகக் காட்டுவதும், சரியானதைத் தவறாகக் காட்டுவதற்கும் வஸ்வாஸ் என்று சொல்லப்படும்.
இப்படி கெடுப்பவர்கள் ஷைத்தான்களில் மட்டும் இருக்க மாட்டார்கள். மனிதர்களிலும் இருப்பதாகக் குர்ஆன் சொல்கிறது.
مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ - (மினல் ஜின்னத்தி வன்னாஸ்) (இத்தைகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.
எனவே நாம் சரியாக நடக்க வேண்டுமெனில் நமது உள்ளத்தைப் பாதுகாப்பது முக்கியம். அதனால் தான் இறைவன், நமது உள்ளம் சரியாக வேலை செய்யாமல் வஸ்வாஸுக்கு ஆட்பட்டு, சரியானதை தவறு என்றும் தவறானதை சரியென்றும் காட்டும் போது வழி தவறி விடக்கூடும் என்பதினால் தான் இறைவன் வஸ்வாஸிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். முழுமையாக உள்ளத்தைப் பாதுகாக்க படைத்த இறைவனைத் தவிர யாராலும் முடியாது.
இதற்கு (வஸ்வாஸுக்கு) உதாரணம் சொல்வதாக இருந்தால், சிலர் உளூச் செய்யும் போது ஒன்றிரண்டு தடவைக்கும் அதிகமாக கைகளைக் கழுவிக் கொண்டேயிருப்பார்கள். காலை தேய்த்துக் கொண்டேயிருப்பார்கள். இதெல்லாம் வஸ்வாஸில் உள்ளது தான்.
அதே போன்று, ஒன்று இரண்டு தடவை அழுக்குத் தேய்த்து சோப்போ ஷாம்போ போட்டுக் குளிக்கலாம். இது குற்றமில்லை. ஆனால் சிலர் இல்லாத அழுக்கைத் தேய்த்துக் கொண்டேயிருப்பார்கள், பல தடவை சோப்புப் போட்டுக் குளித்தாலும் அவனது மனது திருப்தியடையாது. இதுவெல்லாம் கூட வஸ்வாஸு தான்.
பேய், பிசாசு என்பதே கிடையாது. அது தவறான மூடநம்பிக்கை. ஆனால் இல்லாத பேய் பிசாசுகளை அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்று சொல்வதும் கூட வஸ்வாஸ் தான்.
... இப்படி வஸ்வாஸை ஏற்படுத்தக்கூடிய மனிதனிடமிருந்தும் ஷைத்தான்களிடமிருந்தும் பாதுகாப்புத் தேடுவதைத் தான் அல்லாஹ் சொல்லுகிறான்.
ஷைத்தானும் ஜின்னும்
காய்ச்சலில் இருந்து பாதுகாப்புத் தேடவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். காய்ச்சலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கு முன் காய்ச்சல் என்றால் என்னவென்று தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிவிடும். ஏனெனில் அப்போது தான் அதற்கான மருத்துவத்தைச் சரியாக செய்து முழுமையாக குணமடைய முடியும். அது போன்று ஜின்களிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் பாதுகாப்புத் தேட இறைவன் நமக்கு வலியுறுத்துகிறான்.
இந்த வசனத்தில் வருகிற ஜின்கள் ஷைத்தான்களா? அல்லது வேறு படைப்பா? ஜின்கள் யார்? ஷைத்தான்கள் யார்? என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டால் தான் பாதுகாப்புத் தேடுவதற்கு சரியாக இருக்கும்.
அல்லாஹ் படைத்த படைப்புகளில் மனிதர்கள் ஒரு இனம். அதே போன்று ஜின்களும் அவனது படைப்பில் உள்ளவர்கள் தாம். இவர்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள். மனிதர்களின் கண்களுக்குப் புலப்பட மாட்டார்கள். ஆடு மாடுகளைப் போன்ற கால்நடைகளுக்கு பகுத்தறிவை அல்லாஹ் கொடுக்கவில்லை. ஆனால் ஜின்களுக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். மனிதர்களுக்கு இறைவன் சட்டதிட்டங்களைக் கொடுத்திருப்தைப் போன்று ஜின்களுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. அடிப்படை நம்பிக்கைகள், தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள், ஹலால், ஹராம் போன்ற சட்டங்கள் ஜின்களுக்குமுண்டு.
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன்: 51:56)
இந்த வசனத்தில் இறைவன் மனிதர்களையும் ஜின்களையும் ஒரே அந்தஸ்தில் தான் சொல்லிக் காட்டுகிறான். ஜின்கள் இறைவனின் கட்டளைக்கு மீறி நடப்பார்களானால் அவர்களுக்கும் நரகம் உண்டு. கட்டுப்பட்டு நடந்தால் சுவர்க்கமும் உண்டு.
ஜின்களிலும் இறைத் தூதர்
மனிதர்களுக்கு நன்மையை ஏவி தீமையயைத் தடுப்பதற்கு இறைவன் இறைத் தூதர்களை அனுப்பியதைப் போன்று ஜின்களுக்கும் இறைவன் ஜின்களிலிருந்தே இறைத் தூதர்களை அனுப்பியுள்ளான். ஜின்களுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. ஆனால் ஆடு மாடுகள் போன்ற படைப்பினங்களுக்கெல்லாம் இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லை.
ஜின் மற்றும் மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.
(அல்குர்ஆன்: 6:130)
ஜின்களில் நல்லவர், கெட்டவர்
ஜின்களுக்கு அவர்கள் இனத்திலிருந்து ஒரு தூதரை அனுப்பி ஏவல் விலக்கலை சட்டதிட்டங்களாக ஆக்கியிருப்பதால், மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பதைப் போன்று அவர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பொதுவாக ஏவல், விலக்கல் கொடுக்கப்படுகிற இனமாக இருந்தால் கட்டாயம் அறிவுள்ளவர்களாகத் தான் இருப்பார்கள்.
மலக்குமார்களைப் போன்று ஒரே மாதிரியானவர்களாக (பகுத்தறிவற்றவர்களாக) ஜின்களை அல்லாஹ் படைக்கவில்லை. அதனால் தான் மலக்குமார்களில் அனைவருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். கெட்டவர்களே கிடையாது. ஜின் வர்க்கம் முழுவதும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. அவர்களில் மனிதர்களைப் போன்று பிரச்சாரகரும் இருப்பார்கள்.
(முஹம்மதே!) இக்குர்ஆனை செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக! அவை அவரிடம் வந்த போது "வாயை மூடுங்கள்!'' என்று கூறின. (ஓதி) முடிக்கப்பட்ட போது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.
"எங்கள் சமுதாயமே! மூஸாவுக்குப் பின் அருளப்பட்ட ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துகிறது. உண்மைக்கும் நேரான பாதைக்கும் அது வழி காட்டுகிறது'' எனக் கூறின.
"எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளியுங்கள்! அவரை நம்புங்கள்! அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.
அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதிலளிக்காதவர் பூமியில் அல்லாஹ்வை வெல்பவராக இல்லை. அவனன்றி அவருக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்கள் தெளிவான வழிகேட்டிலேயே உள்ளனர்'' (என்றும் கூறின.)
(அல்குர்ஆன்: 46:29,30,31,32)
ஜின்களிலிருந்து அவர்களுக்கே தனியாக தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருந்தாலும், நம்முடைய நபியவர்கள் மனித ஜின் ஆகிய இரண்டு இனத்தவர்களுக்கும் தூதராவார்கள். எனவே இறுதி நபியாக இருக்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கும் அவர்களே இறுதி நபியாவார்கள். இதற்கு ஆதாரமாக மேற்சொன்ன வசனங்களே சான்றாக இருக்கின்றன.
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக! அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம். எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எங்களில் மூடன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுபவனாக இருந்தான். "மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய்கூறவே மாட்டார்கள்'' என்று எண்ணிக் கொண்டிருந்தோம். மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர். அல்லாஹ் யாரையும் திரும்ப உயிர்ப்பிக்க மாட்டான் என்று நீங்கள் நினைத்தது போலவே அவர்களும் நினைத்தனர். வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார். பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம். நம்மில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு இல்லாதோரும் உள்ளனர். பல வழிகளில் சிதறிக்கிடந்தோம். பூமியில் அல்லாஹ்வை நம்மால் வெல்ல முடியாது எனவும், (தப்பித்து) ஓடியும் அவனை வெல்ல முடியாது எனவும் உணர்ந்து கொண்டோம். நேர்வழியை செவியுற்ற போது அதை நம்பினோம். தமது இறைவனை நம்புகிறவர் நஷ்டத்தையும், அநீதி இழைக்கப்படுவதையும் அஞ்சமாட்டார். நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக்கொண்டனர். அநீதி இழைத்தோர் நரகத்திற்கு விறகுகளாக ஆனார்கள். (என்று ஜின்கள் கூறின)
(அல்குர்ஆன்: 72:1...15)
வளரும் இன்ஷா அல்லாஹ்
மே 2011 தீன்குலப்பெண்மணி
No comments:
Post a Comment