Sunday, June 12, 2011

இப்படியும் சில தஃப்ஸீர்கள்

        "வன்ஹர்' என்பதன் பொருள் 
தொடர்: 6
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

 

ஒரு அரபு சொல்லுக்குப் பொருள் செய்வதாக இருந்தால் அரபு அகராதியின் படி பொருள் செய்ய வேண்டும். குறிப்பாக, குர்ஆனில் உள்ள ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்யும் போது இதே வார்த்தை குர்ஆனின் ஏனைய இடங்களில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ஹதீஸ்களில் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைக் கவனித்து பொருள் செய்ய வேண்டும்.
இந்த அணுகுமுறை இறைவனுடைய வார்த்தையை சரியான முறையில் புரிய, அவ்வார்த்தைக்குப் பிழையில்லாத பொருள் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த வழிமுறையை மீறும் பட்சத்தில் மொழியாக்கம் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத பொருளை உதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. இந்த வகையிலமைந்த ஒரு விளக்கத்தை இங்கே காண்போம்.
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
அல்குர்ஆன் 108:2
எந்த ஒரு வணக்க வழிபாட்டையும் "இறைவனுக்காக' என்ற தூய எண்ணத்துடன் செய்திட வேண்டும் என்ற அடிப்படையில், "இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவீராக 'என இவ்வசனத்தில் இறைவன் நபிகளாருக்குக் கட்டளையிடுகின்றான்.
"அறுப்பீராக' என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வன்ஹர் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இது நஹ்ர் என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. இவ்வார்த்தைக்கு அறுத்தல் என்பது பொருளாகும்.
இந்த வார்த்தை இதே பொருளில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அறுத்துப் பலியிடுவதற்கான நாள் என்ற பொருளில் யவ்முன் நஹ்ர் என்ற சொல் ஹதீஸ்களில் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க புகாரி 67, 369, 968)
வன்ஹர் என்பதற்கு அனைத்து தர்ஜுமாக்களிலும் அரபு அகராதியின் படி "அறுப்பீராக' என்றே மொழிபெயர்த்துள்ளனர்.
ஆனால் இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம் வித்தியாசமாக இருக்கின்றது.
அரபி ??? 1
நூல்: அத்துர்ருல் மன்சூர்
பாகம் 15 பக்கம் 704
நீர் அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்குவீராக என்று பொருள் என அபுல் அஹ்வஸ் கூறுகிறார்.
அரபி ??? 2
நூல்; அத்துர்ருல் மன்சூர்
பாகம் 15 பக்கம் 703
அதாஃ கூறுகிறார்: நீர் தொழும் போது ருகூவிலிருந்து தலையை உயர்த்தி சீராக நிற்பீராக என்று பொருளாகும்.
அரபி ??? 3
தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்துவீராக என்று பொருளாகும் என அபூ ஜஃபர் கூறுகிறார்.
நூல்: அத்துர்ருல் மன்சூர்
பாகம் 15 பக்கம் 702
வன்ஹர் என்ற வார்த்தைக்குப் பொருள் ஒருவர் கிப்லாவை முன்னோக்குதல் என்கிறார். மற்றொருவர் சீராக நிற்குதல் என்கிறார். மிகவும் எளிதான அனைவருக்கும் நன்கு தெரிகின்ற ஒரு வார்த்தைக்கு இந்த இமாம்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விளக்கமளித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த வார்த்தைக்கு அரபு அகராதியிலும், ஏனைய ஹதீஸ்களிலும் பொருளைப் பார்த்திருந்தால் இத்தகைய விளக்கத்தை இமாம்கள் அளித்திருக்க மாட்டார்கள்.
குர்ஆன் வசனங்களை சரியாகப் புரிந்து கொள்ள இமாம்கள் கூறும் விளக்கங்கள் தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

No comments:

Post a Comment