Wednesday, August 10, 2011

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகையில் நபிமொழியில் கூறப்பட்டதைவிட அதிகப்படுத்துவது தவறா?

உபரியான வணக்கம் என்பது என்ன?

உமர் (-லி) 20 ரக்அத் தொழுதார்களா?

 

இரவுத் தொழுகையில் நபிமொழியில் கூறப்பட்டதைவிட அதிகப்படுத்துவது தவறா?


      


      20 ரக்அத் தொழுகைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் ஏதாவது காரணம் கூறி அதைச் சிலர் நியாயப்படுத்த முயன்று வருகின்றனர்.
      20 ரக்அத்துக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் நன்மைகளை அதிகம் செய்வது தவறா? என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாகும்.
      அதிகமாகச் செய்கிறோமா? குறைவாகச் செய்கிறோமா? என்பது பிரச்சனையில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த படி
      செய்கிறோமா? என்பது தான் இஸ்லாத்தில் கவனிக்கப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இத்தகைய வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
      இதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயங்களில் சிலவற்றை முதலில் எடுத்துக் காட்டுகிறோம்.
      சுபுஹ் தொழுகைக்கு இரண்டு ரக்அத்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
      இது குறைந்த அளவாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ஒருவர் சுபுஹ் தொழுகைக்கு நான்கு ரக்அத் தொழலாமா? என்ற கேள்விக்கு மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இவ்வாறு செய்யக் கூடாது என்று தான் பதிலளிப்பார்கள்.
      இரண்டு ரக்அத்தை விட நான்கு ரக்அத்கள் அதிகம் தானே! அதனால் சுப்ஹுக்கு நான்கு ரக்அத் தொழலாம் என்று யாரும் வாதிடுவதில்லை. இதற்கு என்ன காரணம்?
      ரக்அத்களின் எண்ணிக்கை இதில் முக்கியம் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; அவர்கள் காட்டியதை விட அதிகப்படுத்தினால் அதில் பல விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.
      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சிறந்த வழியை, முழுமையான வழியைக் காட்டவில்லை; அதை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம்' என்று கூறும் விபரீதம் இதனுள் அடங்கியுள்ளது.
      நாம் இரண்டை நான்காக ஆக்கினால் அடுத்து வருபவர் அதை ஆறாக ஆக்குவார். அடுத்த ஒரு காலத்தில் அது எட்டாக ஆகும். வணக்கத்தை நாங்கள் குறைக்கவில்லையே? அதிகப்படுத்துவது நல்லது தானே என்று அனைவரும் வாதிடுவார்கள். இதனால் இஸ்லாம் என்ற பெயரால் உலகெங்கும் முரண்பட்ட பல வணக்கங்கள் உருவாகி விடும்.
      எனவே தான் இரண்டு ரக்அத்தை நான்காக ஆக்கக் கூடாது என்கி றோம்.
      வணக்கம் செய்வதில் நம் அனைவரையும் விஞ்சி நிற்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்களைத் தொழுது வழி காட்டவில்லை எனும் போது நாம் அதிகப்படுத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிந்தித்தாலே இந்த வாதத்தை யாரும் எடுத்து வைக்க மாட்டார்கள்.
      இதுபற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
      உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகின்றீர்கள்!
      திருக்குர்ஆன் 7:3
      'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம். திருக்குர்ஆன் 2:38
      இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வருமானால் எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார்; துர்பாக்கியசா-லியாகவும் மாட்டார். 20:123
      திருக்குர்ஆன்
      அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது  தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 24:51
      திருக்குர்ஆன்
      'அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!' என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
      திருக்குர்ஆன் 24:54
      'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்' என்றுகூறுவீராக!
      திருக்குர்ஆன் 3:31
      இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலி-யுறுத்துகிறான்.
      திருக்குர்ஆன் 6:153
      தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்
      திருக்குர்ஆன். 6:159
      நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை  அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.ருக்குர்ஆன் 4:59
      அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
      திருக்குர்ஆன் 33:36
      இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
      திருக்குர்ஆன் 5:3
      மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றிப் பல விதங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர்.
      எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்.
      அறிவிப்பவர்: ஆயிஷா (-லி),
      நூல்: முஸ்லி-ம் 3442
      'இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: ஆயிஷா (-லி),
      நூல்: புகாரி 2697
      '(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (-லி),
      நூல்: நஸயீ 1560
      மார்க்கத்தின் பெயரால் வணக்கத்தை உண்டாக்குவதும் அதிகப்படுத்துவதும் குற்றம் என்பதையும், அதனால் சொர்க்கம் கிடைப்பதற்குப் பதிலாக நரகம் தான் கிடைக்கும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
      உபரியான வணக்கம் என்பது என்ன?

      இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படலாம்.
      மார்க்கத்தில் நாமாக விரும்பிச் செய்கின்ற நபில்கள் எனும் உபரியான வணக்கம் இல்லையா? எட்டு ரக்அத் போக எஞ்சியதை உபரி வணக்கம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்பது தான் அந்தச் சந்தேகம்.
      கடமையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போக ஒருவர் தனக்கு விருப்பம் ஏற்படும் போது உபரியான நோன்பை நோற்கலாம்.
      அது போல் கடமையான, சுன்னத்தான தொழுகை போக நாம் விரும்பும் போது உபரியாகத் தொழலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
      ஆனால் உபரியான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
      கடமையான தொழுகை அல்லது நோன்பு, சுன்னத்தான தொழுகை அல்லது நோன்பு அனைத்து முஸ்லி-ம்களுக்கும் ஒரே அளவு கொண்டதாக அமையும்.
      உபரியான தொழுகை அல்லது நோன்பு என்பது தனிப்பட்ட மனிதன் விரும்பித் தேர்வு செய்வதால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நேரம் கிடைத்தால் ஒரு புதன் கிழமை நோன்பு வைப்பார். அந்த நேரத்தில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள். இன்னொருவர் ஒரு செவ்வாய்க் கிழமை நோன்பு நோற்பார். அந்த நாளில் கோடான கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள்.
      முஹர்ரம் 9, 10ல் நோன்பு நோற்பது சுன்னத் என்றால் உலக முஸ்லி-ம்கள் அனைவரும் அந்த நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்.
      ஒருவர் விரும்பிய தினத்தில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிஞர்கள் மிஃராஜ் நோன்பு என்பதை மறுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தப் பெயரில் முஸ்-லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கூறப் படுகிறது. எனவே தான் இதை பித்அத் என்கிறோம்.
      சுன்னத் என்றால் இஷ்டம் போல் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. நபில் என்றால் ஒரு நாள் இரண்டு ரக்அத்கள் தொழுதவர் மறு நாள் நான்கு தொழலாம். அதற்கு மறு நாள் அதை விட்டு விடலாம். நபில் என்பது முழுக்க முழுக்க தனித் தனி நபர்களின் விருப்பத்தின் பாற்பட்டதாகும்.
      இப்போது தராவீஹ் என்ற பெயரில் தொழும் தொழுகையை எடுத்துக் கொள்வோம். குர்ஆன், நபிவழி ஆதாரமின்றி 20 ரக்அத் என்று தீர்மானித்துக் கொண்டு அதை அனைவர் மீதும் திணிக்கின்றனர். இது தான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய, மார்க்கத்தின் கட்டளை எனவும் தவறாக நம்புகின்றனர்.
      இவர்கள் தொழும் தராவீஹ் என்பதற்கு உபரியான வணக்கம் என்ற வாதம் பொருந்தாது.
      உபரியான வணக்கத்துக்கு இன்னும் சில நிபந்தனைகள் உள்ளன.
      நபிகள் நாயகம் காட்டித் தந்த வணக்கத்தைத் தான் மேலதிகமாக ஒருவர் செய்ய அனுமதி உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்துவது நபில் எனும் உபரியான வணக்கத்தில் சேராது.
      உதாரணமாக தராவீஹ் தொழுகையின் நான்கு ரக்அத்களுக்கிடையில் சில திக்ருகளை ஓதுகின்றனர். இந்த திக்ருகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் கற்றுத் தரவில்லை. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை கற்பனையாக உருவாக்கிக் கொண்டு நாங்களாக விருப்பப்பட்டு ஓதுகிறோம் என்று வாதிட்டால் அது ஏற்கப்படாது.
      மார்க்கம் வரையறுத்துள்ள எல்லையைக் கடந்து விடாத அளவுக்கு உபரி வணக்கங்கள் இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.
      தினமும் முழுக் குர்ஆனை ஓதி முடிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தனர். உபரி என்ற பெயரில் இந்த எல்லையை மீறக் கூடாது. (புகாரி 1978)
      உடலுக்கும், மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பாதிக்கும் வகையில் உபரியான வணக்கம் இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லை வகுத்தனர்.
      இந்த எல்லையை மீறி உபரி வணக்கம் கூடாது.
      (புகாரி 1968, 1975, 5199, 6134, 6139)
      எனவே உபரியான வணக்கத்தின் இலக்கணத்தை அறியாமல் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்து 20 ரக்அத்தை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.
      உமர் (ர-லி) 20 ரக்அத் தொழுதார்களா?

      நபித் தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்.
      ஆனால் உண்மை என்னவென்றால், உமர் (-லி) அவர்கள் 20 ரக்அத் களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம் முற்றிலும் தவறானதாகும். உமர் (-லி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (-லி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத் கள்  பற்றிய அறிவிப்புக்களை ஆய்வு செய்வோம்.
      அறிவிப்பு 1
      7682  حدثنا وكيع عن مالك بن أنس عن يحيى بن سعيد أن عمر بن الخطاب أمر رجلا يصلي بهم عشرين ركعة - مصنف ابن أبي شيبة - (ج 2 / ص 163)
      மக்களுக்கு இருபது ரக்அத் தொழுகை நடத்துமாறு உமர் (-லி) அவர்கள் ஒரு மனிதருக்குக் கட்டளையிட்டார்கள்.
      நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா, பாகம்:2, பக்கம் :163
      உமர் (ரலி-) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரியாவார். இவர் உமர் (-லி) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல!
      உமர் (-லி) அவர்கள் ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு மரணித்தார்கள். யஹ்யா பின் ஸயீத் அன்ஸாரி அவர்கள் ஹிஜ்ரி 139 அல்லது 144வது ஆண்டு மரணித்தார்கள்.
      உமர் (-லி) அவர்கள் மரணித்து 120 வருடங்களுக்குப் பின்னால் மரணித்தவர் உமர் (-) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க முடியாது.
      உமர் (-லி) 20 ரக்அத் தொழுமாறு கட்டளையிட்டதை அவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் அறிய முடியும். எனவே இந்தச் செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் உமர் (-லி) அவர்கள் இதற்கு மாற்றமாகக் கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
       قال الشافعي : أخبرنا مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد قال : " أمر عمر بن الخطاب أبي بن كعب ، وتميما الداري ، أن يقوما بالناس بإحدى عشرة ركعة قال : وكان القارئ يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " - معرفة السنن والآثار للبيهقي  - كتاب الصلاة
      நூல்: மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார் - பைஹகீ
      أنبأ أبو أحمد المهرجاني ، أنبأ أبو بكر بن جعفر المزكي ، ثنا محمد بن إبراهيم العبدي ، ثنا ابن بكير ، ثنا مالك ، عن محمد بن يوسف ابن أخت السائب ، عن السائب بن يزيد ، أنه قال : " أمر عمر بن الخطاب رضي الله عنه أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة ، وكان القارئ يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " هكذا في هذه الرواية *- السنن الكبرى للبيهقي  - كتاب الصلاة
      நூல்: பைஹகீ
      وحدثني عن مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد ، أنه قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة قال : وقد " كان القارئ يقرأ بالمئين ، حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " - موطأ مالك - (ج 2 / ص 159)
      நூல்: முஅத்தா
       أخبرنا قتيبة بن سعيد ، عن مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن " يقوما ، للناس بإحدى عشرة ركعة " *- السنن الكبرى للنسائي
      நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா - நஸயீ
      மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (-லி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
      நூல்கள்: அஸ்ஸுனனுல் குப்ரா - நஸயீ, முஅத்தா, மஃரிஃபதுஸ் ஸுனன் வல் ஆஸார், பைஹகீ
      உமர் (-லி) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டது ஆதாரப்பூர்வமானதாக இருப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவும் அமைந்துள்ளது.
      அறிவிப்பு 2
      உமர் (-லி) அவர்களின் காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்கள் தொழுது வந்தோம் என்று ஸாயிப் பின் யஸீத் கூறுகிறார்.
      நூல்: பைஹகீ ஸகீர்
      இந்த அறிவிப்பில் அபூ உஸ்மான் அல் பஸரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் அம்ரு பின் அப்துல்லாஹ். இவரது நம்பகத் தன்மையைக் குறித்து ஹதீஸ் கலை வல்லுனர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. யாரென்று அறியப்படாதவர் என்ற நிலையில் இவர் இருக்கிறார். இதன் காரணமாக இச்செய்தி பலவீனமடைகிறது.
      மேலும் இந்தச் செய்தியில் உமர் (-லி) அவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களின் காலத்தில் மக்கள் இவ்வாறு செய்ததாக இந்த அறிவிப்பு கூறுகிறது ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய அறிவிப்பில் உமர் (-லி) நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர்.
      ஒருவர் எதைக் கட்டளையிடுகிறாரோ அதில் தான் அவருக்குச் சம்பந்தம் இருக்கும். அவரது காலத்தில் நடந்தவைகளில் அவருக்குச் சம்பந்தம் இருப்பது சந்தேகத்திற்கிடமானது.
      மேலும் இதே ஸாயிப் பின் யஸீத் அவர்கள் உமர் (-லி) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதாக அறிவிக்கிறார்.
      وحدثني عن مالك ، عن محمد بن يوسف ، عن السائب بن يزيد ، أنه قال : أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الداري أن يقوما للناس بإحدى عشرة ركعة قال : وقد " كان القارئ يقرأ بالمئين ، حتى كنا نعتمد على العصي من طول القيام ، وما كنا ننصرف إلا في فروع الفجر " *- موطأ مالك - (ج 2 / ص 159)
      மக்களுக்குப் பதினொரு ரக்அத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (-லி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.       நூல்: முஅத்தா
      ரக்அத்களின் எண்ணிக்கை குறித்து ஸாயிப் பின் யஸீத் முரண்பட்டு அறிவித்துள்ளதால் 20 ரக்அத் தொழுதோம் என்ற அறிவிப்பு மேலும் பலவீனப்படுகிறது.
      அறிவிப்பு 3
      உமர் (ரலி-) அவர்கள் காலத்தில் ரமளான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று யஸீத் பின் ரூமான் அறிவிக்கிறார்.                        நூல்: பைஹகீ, முஅத்தா
      இதை அறிவிக்கும் யஸீத் பின் ரூமான் உமர் (-லி) காலத்தவர் அல்ல! உமர் (-லி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மரணித்தார்கள். யஸீத் பின் ரூமான் ஹிஜ்ரி 130ல் மரணித்தார்கள். அதாவது உமர் (-லி) அவர்கள் மரணித்து 107 ஆண்டுகளுக்குப் பின் இவர் மரணித்துள்ளார். இவர் நூறு வயதில் மரணித்திருந்தால் கூட உமர் (-லி) அவர்கள் காலத்தில் பிறந்திருக்க மாட்டார்.
      உமர் (-லி) அவர்கள் காலத்தில் பிறக்காத யஸீத் பின் ரூமான் உமர் (-லி) அவர்கள் காலத்தில் நடந்ததை அறிவிப்பதால் இதை ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
      உமர் (-லி) அவர்களின் வழிமுறையைத் தான் ஏற்போம் என்று கூறுவதில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதினொரு ரக்அத் தான் தொழ வேண்டும்.
      இரவுத் தொழுகையை விட்டவர் என்ன செய்ய வேண்டும்?
      இரவுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடாமல் தொழுது வந்தனர் என்றாலும் சில நேரங்களில் அவர்கள் இரவுத் தொழுகையை விட்டதற்கும் ஆதாரம் உள்ளது.
      நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிய போது ஒரு இரவு அல்லது  இரண்டு இரவுகள் அவர்கள் தொழவில்லை.
      அறிவிப்பவர் : ஜுன்துப் (-லி),
      நூல் : புகாரி 1124, 4983
      ஏதேனும் ஒரு காரணத்தால் இரவுத்  தொழுகை விடுபட்டு விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழலாம்.
      நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு - மற்றும் ஏதோ ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை தவறி விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
      அறிவிப்பவர் : ஆயிஷா (-லி),
      நூல் : முஸ்லிம் 1357
      நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் இரவுத் தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றி மறுமையில் வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறாம்.

      (தீன்குலப்பெண்மணி ஆகஸ்ட் 2011)

      No comments:

      Post a Comment