Sunday, January 08, 2012

அல்லாஹ்வை எப்படி நம்புவது?


அல்லாஹ்வை எப்படி நம்புவது?

அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.

ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை.

அப்படியே நம்பினா லும் அந்த நம்பிக்கையில்  குறை செய்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே நமது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மார்க்க விசயங்களில் தொழுகை போன்ற வணக்கங்களில் அல்லாஹ் சொன்னபடி அவனுடைய தூதர் சொன்னபடி தொழுகிறோம். ஆனால் நமது வாழ்வில் பல விஷயங்களில் நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்றால் நடப்பதில்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.

திருமணம் இறுதிச் சடங்கு இதரசடங்கு, சம்பிரதாயங்கள், வீடு கூடிபோகுதல், வியாபாரம், தொழில் துறைகள் என்று வரும் போது இவ்வாறு நாம் நடந்து கொள்வதில்லை. மார்க்கக் கடமைகளில்  சரியாகச் செய்யும் நாம் உலகக் காரியங்களில் மார்க்க நெறியை அலட்சியம் செய்பவர்களாக இருக்கிறோம், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எவ்வாறு சொன்னார்களோ அதை செய்வதற்கு தெரிந்து கொண்டே பின்வாங்குகிறோம். அது மாத்திரமின்றி நமது அடிமனதில் மார்க்க விசயங்களை மட்டும் தான் அல்லாஹ் பார்க்கிறான். அது அற்பாற்பட்ட செயல்களை அவன் பார்ப்பதில்லை என்ற ஒரு தப்பான எண்ணம் நம்முடைய உள்ளத்தில் இருப்பதனால் தான் நாம் உறுதியான முறையில் அல்லாஹ்வை நம்புவதில்லை.


 அல்லாஹ்வை உறுதியாக நம்புகிற விசயத்தில் இஸ்லாமியர்கள்  மத்தியில் இரு சாரார்கள் இருப்பதாக திருமறைக்குர்ஆனில்

அல்லாஹ்வே நமக்கு சொல்கிறான்.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக் கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சி யடையுங்கள்!'' எனக் கூறுவார்கள்.                 

அல்குர்ஆன் (41:31)

அல்லாஹ்வுடைய வானவர்களின் உதவி உறுதியான நம்பிக்கையில் இருப்போருக்கு கிடைக்கிறது. அல்லாஹ்வை வாயளவில் இறைவன் என்று நம்பி இருப்போருக்கு இப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறவில்லை.

அல்லாஹ்வின் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நமக்கு உதவி செய்வார்கள் என அல்லாஹ் கூறுவதால் அந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கும் போது மனிதர்களின் உதவி எதற்கு? என்ற எண்ணம் தானாக நமக்கு வந்து விடும். நம்முடைய நல்ல, கெட்ட, எல்லாவற்றுக்கும் வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். நாம் பிராத்தனை செய்யும் போது  அவர்கள் ஆமீன் சொன்னால் அல்லாஹ் நமது பிராத்தனைகளை  ஏற்றுக் கொள்வான் அதே போன்று அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசினால் அந்தப் பரிந்துரையையும் அல்லாஹ் எற்றுக்கொள்கிறான். இப்படி நாம் எண்ணி நமது   உள்ளத்தில் இந்த நம்பிக்கையை ஆழமாக பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் தான் நமது உள்ளத்தைப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்கு திருமறைக்குர்ஆனில் பல்வேறு இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அல்லாஹ் படிப்பினையாக சொல்லிக் காட்டுகிறான்.

எது நடக்க முடியாது என்று நாம் நம்புகிறோமோ அது அல்லாஹ்வால் நடத்த முடியும் என்று நம்புவது தான் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை நமது உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். ஆனால்  இந்த நம்பிக்கைதான் முஸ்லிம்களாகிய நம்மிடம் இன்று குறைந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். திருமறைக்குர்ஆனில் வரலாறுகளைப் படித்து நமது ஈமான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இறைத்தூதர்களின் வாழ்கை வரலாற்றைக் கூறுகிறான்.

மூஸா (அலை) அவர்களும் பிர்அவ்னுடைய படையும்

மூஸா (அலை) அவர்கள், பிர்அனுக்கு பல வருடங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை போதனை செய்து கொண்டிருந்தார்கள். இனி முடியாது இங்கு  இருந்தால் பிர்அவ்ன் நம்மை அழித்து விடுவான் என்ற நிலை வந்த போதுதான் ஊரை விட்டு வேளியேறுகிறார்கள். இதனை அறிந்த பிர்அவ்னுடைய பட்டாளங்கள்  பிர்அவ்னிடம் சென்று மூஸாவும் அவரோடு இருப்போரும் தப்பிச் செல்கிறார்கள்.

பிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும் மூஸா (அலை) அவர்களையும் பனூஇஸ்ரவேலர்களையும் பூண்டோடு அழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு  என்று தன்னுடைய படையுடன் விரட்டிக் கொண்டு வருகிறார்கள். மூஸா (அலை) அவர்களும் பனூ இஸ்ரவேலர்களும் எப்படியாது இவனுடைய இந்த அநியாயத்தில் இருந்த தப்பிக் வேண்டும் என்று திக்குத் திசையில்லாமல் ஓடுகிறார்கள்  கடைசியில் அவர்கள் சங்கமித்த இடம் கடலாகும்.

  பின்னால் பிர்அவ்னுடைய படையும் முன்னால் கடலும். இப்போது தான் அல்லாஹ் பற்றிய உறுதியான நம்பிக்கையும் சங்கமிக்கிறது.

அப்போது அவர்களை ஏற்றுக் கொண்ட  பனூ இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து நாம் மூழ்கடிக்கப்படுவோம் இன்று தப்ப முடியாத நாள், வசமாக மாட்டிக் கொண்டோம்  மூஸாவே! என்று சொன்னபோது அப்படி நடக்காது.  உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களே இதுதான் உங்களின் ஈமான் இது தான் உங்களுக்கு எனக்கும் உள்ள வித்தியாசம். சகல வல்லமையும் பொருந்திய என்னுடைய இறைவனால் இது முடியும். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று கூறி மூஸா (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையை அப்போது வெளிப்படுத்தி னார்கள். அப்போது அல்லாஹ் அவர்ளுக்கு வழிகாட்டினான். இது பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.  உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (26:62-68)

அல்லாஹ் எதற்கு இந்தச் சம்பவத்தை நமக்கு கூறிக் காட்டுகிறான்.

திக்கற்ற நிலையில் நாம் இருந்தாலும் சரி என்னுடைய இறைவனுக்கு முடியும் என்று நினைக்க வேண்டும். உளப்பூர்வமாக நம்ப வேண்டும் அதுதான் ஈமானிய உறுதியும் அல்லாஹ் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும்.

இது முடியுமா எப்படி சாத்தியப்படும்? என்று தப்பாக நினைத்து சில விசயங்களில் போடுபோக்குத் தனத்தை வெளிப்படுத்துகிறோம்.

அல்லாஹ்வின் வல்லமை பற்றி மூஸா (அலை) அவர்கள் எப்படி உறுதியாக நம்பினார்களோ அப்படி நம்ப வேண்டும். அவனால் முடியாதது எதுவுமே இல்லை அவன் நமக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறான். எப்போது அவனிடம் நம்முடைய ஈமானிய உறுதியை வெளிப்படுத்துகிறோமோ அப்போது இது போன்ற அற்புத ஆற்றலுடைய அல்லாஹ்வின் உதவியைக் காணமுடியும்.

இறைத்தூதர்களுக்கு  இப்படியான நிலை ஏற்பட்ட போதல்லாம் இன்றைய இஸ்லாமியர்கள் நடந்து கொள்வது போன்று அவர்கள் நடந்து கொள்ளவில்லை. எத்தனை இடர்களையும் கஷ்டங்கயையும் துன்பங்களையும் அவர்கள் சந்தித்த போதும் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அவர்கள் இழக்கவில்லை அதே நிலையை நாம் அடைந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதற்கு  மற்றொரு நிகழச்சியைப் பார்ப்போம்.

குழந்தைப் பேறு இல்லாத ஸகரிய்யா (அலை) அவர்களின் நம்பிக்கை ஸகரிய்யா (அலை) அவர்கள் தம்முடைய தள்ளாத வயதிலும் குழந்தைப் பாக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இறுதி வரை  அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அவர்களின் அபரிதமான இந்த முயற்சியை அல்லாஹ் எற்றுக் கொண்டு குழந்தைப் பாக்கியத்தை கொடுத்ததை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மறந்து விடலாகாது.

பிள்ளைப் பேறு என்பதைப் பொறுத்தவரை இன்று உலகத்தில் அறியப்பட்ட நியதிகளில் ஒன்றுதான். ஒரு கூறிப்பிட்ட ஒரு வயதுக்குள் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்காது. அவர்களின் ஹார்மோன்கள் அந்தத் தன்மையை இழந்து விடுகின்றன. இதுதான் உலக நியதி  ஆனால் அல்லாஹ் நாடினால் எந்த ஒன்றும் அவனுக்கு முடியாதது இல்லை என்பதற்கு ஸகரிய்யா (அலை) அவர்களின் வரலாறு நமக்கு மிகப் பெரிய படிப்பினையாகும்.

 நாம் இன்று பிள்ளைப் பேறு அற்றவர்களைப்  பார்க்கிறோம்  ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி நமக்கு  குழந்தை பெறும் தன்மை என்ற இருக்கின்றதா? இது சாத்தியமா? என்று ஏங்கித் தவிப்பதைப் பார்க்கின்றோம். குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் சமுகத்தினால் ஒரு விதமான  சந்தேகப் பார்வையினால் நோக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த வயதில் பிள்ளைப் பேறா? இது சாத்தியமா? இது உங்களுக்கு கொஞ்சம் அதிமாகத் தெரியவில்லையா? என்றல்லாம் இவர்கள் பழிக்கப்படுகிறார்கள்.

இந்த சமுதாயத்தில் முஸ்லிம்கள் என்று சொல்லக் கூடிய நாம் இப்படியானவர்களை ஏளனம் செய்கிறோம்  இதுதான் நாம் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு

அல்லாஹ்வை நம்பியுள்ளோம் அவன் எங்களுக்குப் போதுமானவன் அவனால் இதுவும் முடியும். எங்கள் இறைவன் நினைத்தால் இதையும் செய்து காட்டுவான் என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிறவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்று திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

அல்குர்ஆன் (65:03)

திருமறையில் ஸகரிய்யா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை நீ எனக்கு வழங்குவாயாக அவர் எனக்கும், யஃகூபின் குடும் பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப் பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.) "ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம்.  அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத் தியதில்லை'' (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்'' என்று அவர்  கூறினார்.

அல்குர்ஆன் (19:1-8)

அல்லாஹ் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு செய்த அருளைப் பற்றி மேற் கூறப்பட்ட வசனத்தில்  கூறுகிறான் அவருடைய வயதை இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவர் வயது முதிந்தவராகி, தலையும் நரைத்து எழும்புகள் எல்லாம் பலமிழந்த நிலையிலும் அவர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. அல்லாஹ்விடம் கேட்பதில் அவர் துர்ப்பாக்கியசாலியாக இருக்கவில்லை. இந்த தள்ளாத வயதிலும் நான் என் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. அதே நேரம் என் மனைவியும் மலடியாக இருக்கிறாள்  இறைவா உன்னால் முடியும் உன்னால் முடியாத ஒன்றை நான் கேட்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக  இறுதிவரை போராடினார். இதனால் அவருக்கு நடந்தது என்ன?

அல்லாஹ் அவருக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்தது மாத்திரமின்றி அந்தக் குழந்தைக்கு யஹ்யா என்ற பெயரையும் சூட்டினான். இது தான் அல்லாஹ்வை நம்புவதற்குரிய அடையாளமும் ஆகும்.

வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்

No comments:

Post a Comment