அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்
(ஏப்ரல் 2007) (தொடர் 1)
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.சி.
சில வருடங்களுக்கு முன்னால் நமது அனைத்து முயற்சிகளும் இணை வைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை ஒழிப்பதற்காக முடுக்கி விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர் கொள்கையில் இருந்தவர்கள் நமது பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார்கள். இதையெல்லாம் முறியடித்து மக்களை வென்றெடுத்தோம், அல்ஹம்து லில்லாஹ்!
ஆனால் நம்முடன் சேர்ந்து இக்கொள்கையைப் பரப்பியவர்கள் இன்று நமது சொற்பொழிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக் கட்டையாக மாறியுள்ளனர். இயக்க வெறியும், பொறாமையும், குரோதக் கண்ணோட்டமும் இவர்களைத் தூண்டிவிட்டு குராஃபிகளுக்கு வேலையில்லாமல் இவர்களைச் சதி செய்ய வைக்கிறது.
குர்ஆன், ஹதீஸ் இந்த இரண்டை மாத்திரம் சொன்னால் தான் மக்கள் தம்மை அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்ந்துள்ள இவர்கள் ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் நம்மை வசை பாடுகிறார்கள். விதிவிலக்காக நல்லெண்ணத்துடன் நமது கருத்தை விமர்சிப்பவர்களும் இருக்கலாம்.
"அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லாத ஹதீஸாக இருந்தாலும் அதற்குச் சரியான எந்த ஒரு விளக்கமும் கொடுக்க இயலாத வகையில் அது குர்ஆனுடன் மோதுமானால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற அடிப்படையை நாம் கூறி வருகிறோம். இதன் அடிப்படையில் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை ஏற்கக் கூடாது என்று எழுதி வருகிறோம்.
இதை அங்கீகரிக்காதவர்கள் நாம் கூறிய இந்த அடிப்படை, யாரும் கூறாத ஒன்று; ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதியே இல்லை; மனோ இச்சைப்படி ஹதீஸை மறுப்பதற்காக இந்த வழிகளைத் திறந்து விடுகிறார்கள் என்று கூறி தங்களது அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.
விரலை ஒடித்தாலும் ஹதீஸைச் செயல்படுத்துவோம்; அவ்ஸில் தூக்கிப் போட்டாலும் ஹதீஸைச் செயல் படுத்துவோம்; தாய், தந்தையர் பேசாவிட்டாலும் பரவாயில்லை ஹதீஸ் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி நிரூபித்துக் காட்டிய இந்த ஜமாஅத்தைப் பார்த்து ஹதீஸை மறுக்கிறார்கள் என்ற அவதூறு இவர்களால் சமீபத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் வேரில்லாத மரம் என்பதைப் பின்வரும் சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் மனோ இச்சையைப் பின்பற்றச் சொல்கிறதா?
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் (16:44)
ஹதீஸிற்கும், குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இவ்வசனம் எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது.
அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் மட்டும் வரவில்லை; நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அவனிடமிருந்து வந்தவையே! இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் (53:4)
குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வராது. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அல்லாஹ்வின் கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் (4:82)
இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
அல்குர்ஆன் (41:42)
குர்ஆன் கூறும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் இந்த முரண்பாடே அது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகி விடும். தன் பெயரால் அறிவிக்கப்படும் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல்: முஸ்லிம் (1)
திருக்குர்ஆன் கூறும் இக்கருத்தைக் கூறிய நாம் மனோஇச்சையைப் பின்பற்றுவர்கள் என்றால் குர்ஆன் மனோஇச்சையைப் பின்பற்றச் சொல்கிறது என்ற மாபாதகக் கருத்தை இவர்கள் தங்களை அறியாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
நபித்தோழர்கள் ஹதீஸை மறுத்தார்களா?
குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை; அதன் அடிப்படையில் செயல்படவுமில்லை என விமர்சனம் செய்கிறாôகள்.
ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் இந்த மேதைகள் ஹதீஸைப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம்! நாம் கூறும் இந்த அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்)'' என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், "அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பாத்திமா பின்த் கைஸ்(ரலி)
நூல்: முஸ்லிம் (2953)
அபூஇஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை என அறிவித்தார்கள்'' (என்பது தான் அந்த ஹதீஸ். அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள், "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் பகிரங்கமான வெட்கக் கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று கூறியுள்ளான்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (2963)
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்கு கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது; எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத்தன்மையில் உமர் அவர்கள் எள்ளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒருபோதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம்.
உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்டக் கூட்டத்தைச் சார்ந்தவர் என்றெல்லாம் இந்த ஹதீஸ் பாதுகாவலர்கள் (?) நம்மை விமர்சனம் செய்ததைப் போல் விமர்சனம் செய்வார்களா?
சுருக்கமாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது சரியா தவறா? என்ற ஆய்வுக்குள் செல்ல மாட்டோம். அந்தக் கருத்தை இதற்கு முன்னால் யாராவது சொன்னார்களா என்றே கேட்போம் என்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளைக் கூட நாம் இங்கு குறிப்பிடுவது, சஹாபாக்களின் நடைமுறைகள் மார்க்க ஆதாரம் என்பதற்காக அல்ல. முன்னோர்கள் யாராவது சொல்லியிருந்தால் தான் சரி என மத்ஹப் வாதிகள் சென்ற பாதையில் இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு முன்னோர்களும் நமது வழிமுறையை கடைபிடித்துள்ளார்கள் என்று உரைப்பதற்காகத் தான் இதைக் கூறுகிறோம். குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றும் கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் காட்டிய குர்ஆன் வசனமே நம்பிக்கை கொள்வதற்குப் போதுமானது.
குர்ஆனுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி முரண்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிப்பாகக் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக அந்தச் செய்தியை அறிவித்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து தான் தவறு ஏற்பட்டிருக்கும் என்ற இந்த நியாயமான கருத்தை உமர் அவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஹதீஸ்களை நம் சமுதாயத்திற்குத் தந்த அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களும் முன் வைத்துள்ளார்கள்.
அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் "சகோதரரே! நண்பரே!'' எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? "இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?'' என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொல்லி விட்டு, "அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53:43); ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார் (35:18) (என்று கூறும்) குர்ஆனே உங்களுக்குப் போதும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1694)
உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது: "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்'' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இ(ப்னு உமர் அறிவிருத்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்க) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.
"நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதை செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.
(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது
(27:80)
(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது
(35:22)
அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1697)
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, "பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப் பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (1693)
உமர் (ரலி) அவர்களும், அவர்களுடைய மகன் இப்னு உமர் அவர்களும் பிரபலமான நபித் தோழர்கள். குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆனிற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக "அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள்'' என்று இவர்கள் சொல்ல முன்வருவார்களா? இவர்கள் முன்வந்தாலும் ஒரு போதும் நமது உள்ளம் அதை ஏற்றுக் கொள்ளாது. இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து "சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, "அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக "அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்'' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு "இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது'' (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)
நூல்: அஹ்மத் (24894)
ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753, 5772 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. "வீடு, பெண், கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுனம் பார்க்கலாம்'' என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம்.
இந்த மூன்று செய்திகளிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதைக் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் தான் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று நாம் கூறும் அடிப்படையில் நபித் தோழர்களும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காகத் தான் இந்தச் செய்திகளைக் கூறியுள்ளோம்.
ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?
குர்ஆனைப் படிக்காத ஒருவர், "குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் "அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது தான்' என்று சொல்பவர்களைப் பார்த்து, "யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள்' என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் யாரும் கூறாத கருத்து என்று இவர்கள் கூறுவதும் அறியாமை தான்.
இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று, இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம்பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை. தெரிந்து கொண்டே மறைக்கிறார்களா? அல்லது அறியாமை இருளில் சிக்கித் தவிக்கிறார்களா?
இமாம் ஷாஃபியின் கூற்று
"ஒரு ஹதீஸ் நம்பத்தன்மையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா?'' இமாம் ஷாஃபி அவர்கள், "கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்'' என்று கூறியுள்ளார்கள்.
நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438
இமாம் குர்துபீயின் கூற்று
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.
நூல்: தஃப்சீருல் குர்துபீ, பாகம்: 12, பக்கம்: 213
இமாம் ஜுர்ஜானியின் கூற்று
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.
நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113
இமாம் சுயூத்தியின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276
இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவதாகும்.
நூல்: அல்மனாருல் முனீஃப், பக்கம்: 80
இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி: குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவது, அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.
நூல்: நக்துல் மன்கூல், பாகம்: 2, பக்கம்: 218
இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.
நூல்: உசூலுஸ்ஸர்ஹசீ, பாகம்: 1, பக்கம்: 364
இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை (நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.
நூல்: கஷ்ஃபுல் அஸ்ரார், பாகம்: 4, பக்கம்: 492
(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.
நூல்: ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ், பாகம்: 2, பக்கம்: 368
இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று
"சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள்'' என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார்.
நூல்: தர்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 277
எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக் கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 275
அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று
சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.
நூல்: மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ், பாகம்: 1, பக்கம்: 62
விதியை செயல்படுத்திய மேதைகள்
குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாமல் இருந்து ஆனால் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்ட ஹதீஸாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
புகாரி, முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் அந்த ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் தவறு வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு நடந்து கொண்ட இந்த இமாம்கள் வழிகேடர்களா? ஹதீஸைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்களா? அல்லது அழிப்பதற்காகக் கிளம்பியவர்களா?
இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை
சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்று சொல்லப்படும் அறிஞர். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்குப் பதிலாக இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸை எப்படிக் குறை காணுகிறார் என்று பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் "நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?'' என்று கேட்பார்கள்.
அதற்கு அவர்களின் தந்தை "இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் "இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெது (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது?'' என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் "நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்'' என்று பதிலளிப்பான்.
பிறகு "இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்'' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3350)
இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.
இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார்:
அல்லாஹ் வாக்கு மீற மாட்டான் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படி எடுத்திருப்பார்கள்? "இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர்'' என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 8, பக்கம்: 500
மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹிம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர். மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹிம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை; மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.
எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது இப்படிக் கூறியுள்ளாரா? என்று கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் மத்ஹபை நோக்கி வந்த வழியே செல்லக் கூடியவர்களே! இப்போது உங்கள் உள்ளம் குளிர்ந்து விட்டதா?
இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (1854)
இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்து பின்வருமாறு கூறுகிறார்கள்.
குர்துபீ கூறுகிறார்: மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70
ஹஜ் செய்வதற்கு சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் சம்பந்தப்பட்டப் பெண்மணி வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாகக் கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸை பின் தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானது என்பதில் நமக்கு மறுப்பில்லை, குர்ஆனுக்கு முரண்படாத வகையில் இதற்கு நாம் விளக்கம் தர முடியும். இளமையில் ஒருவருக்கு ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமலே தள்ளாத வயதை அடைந்தால் அவர் மீது இருந்த ஹஜ் செய்யும் கடமை நீங்காது என்பதை மாலிக் இமாம் கவனிக்கத் தவறி விட்டார்கள்.
குர்ஆனுக்கு நேரடியாக ஒரு ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நம்முடைய அடிப்படைக் கொள்கை தான் மாலிக் இமாம் அவர்களின் கொள்கையாகவும் இருந்தது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்
அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்க சரி தான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் பலரால் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது அவருக்கு அக்கறை இல்லை என்று பொருளா?
இமாம் இப்னு தைமியாவின் வழிமுறை
இப்னு தைமியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4997)
படைப்பின் துவக்கம் சனிக்கிழமையில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.
நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா, பாகம்: 4, பக்கம்: 34
வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக திருமறைக் குர்ஆன் சொல்லும் போது இந்த ஹதீஸ் ஏழு நாட்களில் படைத்ததாகக் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தைமியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம். இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்ற வார்த்தை இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
2. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.
எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.
இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும், ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். "தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்''
(4:48 & 4:116)
மேலும், "தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39:53) என்றும் கூறுகிறான்.
நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தைமியா, பாகம்: 2, பக்கம்: 185
இப்னு தைமியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அணுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொருத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்துப் பல செய்திகளை இப்னு தைமியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.
இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை
ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேலுள்ள ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தைமியாவை விட ஒரு படி மேலே சென்று "இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு'' என்று கூறியுள்ளார்.
அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்து விட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இந்த ஹதீஸ் மொத்தம் ஏழுநாட்களில் படைத்ததாகக் கூறுகிறது.
இமாம் புல்கீனீயின் வழிமுறை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பிவிடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.
அறிவிப்பவர்: அபஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (7449)
இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். இவர்களை யாரும் எவ்விதத்திலும் குறை காண முடியாது. மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது, "உமது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான்' (18:49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38:85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவுசெய்துள்ளார்.
இமாம்களில் ஒரு கூட்டத்தினர் இதை மாற்றப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்கள். "நரகம் இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நிரம்பும்' என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் "உமது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான்' என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.
நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 13, பக்கம்: 437
இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அஸ்ஸஹீஹா, பாகம்: 6, பக்கம்: 39
அறிவீனர்களின் வழிமுறையல்ல; அறிஞர்களின் வழிமுறை
இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள் என்ற தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.
நாய் மற்றும் மற்றவைகள் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்து விடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். "ஒருவன் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்' (6:164) என்ற இறைவனது கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
நூல்: ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப், பாகம்: 3, பக்கம்: 342
இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்குப் பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் இந்த உண்மையை உரியவர்களுக்கு உணர வைப்பானாக!
No comments:
Post a Comment