Sunday, January 08, 2012

பழுத்ததும் புழுத்ததும்

பழுத்ததும் புழுத்ததும்

அவ்லியாக்களின் ஆற்றலை மிகைப்படுத்தி காட்ட முயன்ற நூல் ஆசிரியர் அவ்லியாக்கள் கைப்பட்டால் புழுத்த பழங்கள் கூட பழுத்த பழங்களாக மாறிவிடுமாம். அதே நேரத்தில் அவ்லியா அல்லாதவர்கள் கைபட்டால் அந்த பழங்கள் புழுத்துவிடுமாம். இதற்கு பின்வரும் கதை கூறுகிறார் நூலாசியர்.

இன்னொரு தடவை கலீபா அபுல் முஜப்பர் என்பவர் ஆண்டகை அவர்களின் சமுகத்துக்கு வந்திருந்தார். அவர் தமக்கு ஓர் அத்தாட்சி காட்டப்பட வேண்டும் என்று கேட்டார். என்ன அத்தாட்சி வேண்டும் என்று ஆண்டகை அவர்கள் கேட்கவும், இரண்டு மாதுளம் பழங்கள் வேண்டுமென்றார். அக்காலமோ மாதுளை காய்க்காத காலமாய் இருந்தது. ஆனால் கலீபா மாதுளை வேண்டும் என்றதுமே ஆண்டகை அவர்கள் தங்கள் கரத்தை உயரே நீட்டினார்கள். அதில் இரண்டு மாதுளம் பழங்கள் வந்திருந்தன. அவற்றில் ஒன்றைக் கலீபாவிடம் கொடுத்து உடைக்கச் சொல்லிவிட்டு, மற்றதைத் தம் கரத்தால் உடைத்தார்கள், ஆண்டகை அவர்கள் உடைத்த மாதுளம் பழம் மதுரமானதாய் இருந்தது. கலீபா உடைத்த பழத்தில் புழுக்கள் நெளிந்தன. இதன் காரணம் என்ன என்று கலீபா கேட்டதும்  ஆண்டகை அவர்கள் சொன்னார்கள் : அநியாயக்காரர் கை பட்ட பழம் புழுத்திருக்கிறது, அல்லாஹ்வின் அடியான் கைபட்ட பழம் பழுத்திருக்கிறது என்று

(மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் : 1, பக்கம் : 54)

அநியாயம் செய்யும் மனிதன் கை பட்டால் பழம் புழுத்துவிடும் என்றால் ஓரிறைக் கொள்கை ஏற்காத அநியாயம் செய்யும் எத்தனையே நபர்கள் இன்று சுவையான நல்ல பழங்களை எப்படி சாப்பிடுகிறார்கள்?


மேலும் யாருக்கும் கிடைக்காத பொருட்கள் அவ்லியா நினைத்தால் அவருக்கு கிடைக்கும் அரிய ஆற்றல் உண்டு என்ற கருத்தை விதைக்கவும் இந்த கதை புனையப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பசியால் வீட்டில் எதுவும் கிடைக்காமல் வெளியேறி தம் தோழர்களிடம் உணவு வேண்டியதையும் இந்த கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்' அல்லது "ஓர் இரவு' (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?'' என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!'' என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்) தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது'' என்று கூறி விட்டு, "எழுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்'' என்று பதிலளித்தார்.அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை'' என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்'' என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிரிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (4143)

கேட்டது எல்லாம் கிடைக்கும் என்றால் முதலில் நபிகளாருக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தாங்க முடியாத பசி ஏற்பட்டு அடுத்தவரின் உதவியை நாடும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்றால் அப்துல் காதிர் ஜீலானிக்கு மட்டும் எப்படி கேட்டவுடன் அக்காலத்தில் கிடைக்காத பொருள் கிடைத்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்லியாக்கள் எதையும் செய்வார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டவே இந்த கற்பனை கதை.

பாம்புக்கு பயப்படாத இறைநேசர்

ஒரு நான் ஆண்டகை அவர்கள் விதியைப் பற்றிய் பேசும்போது அவனன்றி ஓர் அணுக்கூட அசையாது என்று கூறி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படியே சகலமும் நடக்கும் என்று நம்பும் முஸ்லிம்கள், அத்தருணத்திலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது, பயத்துக்கோ பீதிக்கோ இதயத்தில் இடந்தரக்கூடாது என்று போதித்துக் கொண்டிருக்கையில் மேல் முகப்பிலிருந்து திடீரென பாம்பு ஒன்று ஆண்டகை அவர்களின் தலைப்பாகையின் மீது விழுந்தது. அதைக் கண்ணுற்ற சபையினரிடையே பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஆனால் ஆண்டகை அவர்கள் கொஞ்சமும் கலக்கமோ தயக்கமோ இன்றித் தமது உபந்நியாசத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாம்பு அவர்கள் உடலைச் சுற்றிக் கீழே வந்தது. அது தரையில்  இறங்கும் வரை ஒருவரும் மூச்சுக்கூட விடவில்லை. ஆண்டகை அவர்கள் மட்டும் தங்கள் உபந்நியாசத்தை நிறுத்தவே இலலை. சர்ப்பம் அவர்களை விட்டு விலகிச் சுவர்ப்பக்கமாகச் சென்ற பிறகு, அவர்கள் அதைச் சுட்டிக்காட்டி. கேவலம் ஒரு சிருஷ்டிப் பொருளான இப்பாம்பு அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தாலன்றி என்ன செய்ய இயலும்? என்று கூறி அங்கிருந்தோர்களின் ஈமானை (மெய்யுறுதியை) இன்னும் அதிகப் பலமுள்ளதாக்கினார்கள்.

(மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் : 1, பக்கம் : 63)

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால்

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எந்த பாம்பிற்கும் அஞ்சா நெஞ்சராக சித்தரிக்கிறது இந்த கதை. விதியை நம்புபவன் இது போன்ற கொடிய விசஜந்துகளுக்கு பயப்படக்கூடாது என்று அறிவுருத்துகிறார் அப்துல் காதிர் ஜீலானி. ஆனால் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை கவனியுங்கள்.

"மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று இறைவன் கேட்டான். "இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன'' என்று அவர் கூறினார். "மூஸாவே! அதைப் போடுவீராக!'' என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. "அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 20:17-21)

கைத்தடி பாம்பாக மாறிய போது பயந்து போன மூஸாவை பார்த்து அல்லாஹ் பயப்படவேண்டாம். அதை கைத்தாடிய மாற்றிவிடுவோம் என்று கூறியுள்ளான்.

பயந்த மூஸா (அலை) அவர்களைப் பார்த்து விதி நம்பும் நீ எப்படி பயப்படலாம் என்று அல்லாஹ் கேட்கவில்லை. பாம்பை பார்க்கும் எவரும் பயப்படத்தான் செய்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை. விதி நம்புபவன் பாம்பால் ஏது நேர்ந்துவிடக்கூடாது என்பதற்கு எச்சரிக்கையாக இருப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதல்ல.

நம்மை நோக்கி பாம்பு வந்தால் விதி என்று சொல்லிக் கொண்டு

அமைதியாக இருக்கச் சொல்லவில்லை நபிகளார். மாறாக அதை கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

நாங்கள் நபி (ஸல்)  அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம்.  அப்போது "வல்முர்ஸலாத்'' எனும்  (77ஆவது) அத்தியாயம் அவர்களுக்கு அருளப்பெற்றது.  அதை நான் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது.  அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது.  உடனே நபி (ஸல்)  அவர்கள், "அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள்.  நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது.  அப்போது நபி (ஸல்)  அவர்கள் "அதன் தீங்கிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டது போன்றே உங்கள் தீங்கிலிருந்து அதுவும் காப்பாற்றப்பட்டுவிட்டது!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),

நூல் ; புகாரி 1830

பாம்பை கொல்லுமாறு கட்டளையிட்ட நபிகளார் விதியை நம்பாதவர்களா? அதை அடிக்கச் சென்ற நபித்தோழர்களும் விதியை நம்பாதவர்களா?

ஹஜ் என்ற கடமையை செய்ய செல்பவர் பாம்பு போன்ற விசஜந்துக்களை பார்த்தால் அதை கொல்லலாம். அதை கொல்வது குற்றம் இல்லை என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.

இஹ்ராம் அணிந்தவர் எந்த உயிரனத்தையும் கொல்லக்கூடாது என்ற விதியிருந்தும் நம் உயிருக்க பாதிப்பை ஏற்படுத்தும் உயிரனங்களை கொல்வதை நபிகளார் அனுமதித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எரிலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (2254)

விசஜந்துக்களை கொல்ல கட்டளையிட்ட நபிகளாரின் வழிகாட்டுதலை புறக்கணித்துவிட்டவர் எப்படி இறைநேசராக இருக்க முடியும்?

எந்த நோயையும் குணப்படுத்தும் அவ்லியா

இரண்டு பணியாட்கன் ஒரு கூடையைக் கொண்டவந்து அவர்கள் முன் வைத்தனர். ஆண்டகை அவர்கள் அக்கூடையைத் திறக்க உத்தரவிட்டார்கள். அதனுள் வீட்டுக்காரரின் நோய்வாய்ப்பட்ட மகன் இருந்தான். குஷ்டமும் வாத நோயும் கண் குருடும் உடையவனாய் அவன் இருந்தான். ஆண்டகை அவர்கள் அல்லாஹ்வின் ஆணணை கொண்டு ஆரோக்கியம் பெறுவாயாக என்று கூறியதும் அச்சிறுவனின் சகல ரோமங்களும் மறைந்து கண்பார்வை உண்டாகி அவன் எழுந்து வெளியில் வந்தான். இதைக் கண்டவர்கள் அடைந்த வியப்புக்கு அளவில்லை.

(மாபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் :1 , பக்கம் : 65)

அன்றைய காலத்தில் குணப்படுத்த முடியாத நோயாக குஷ்ட நோய் இருந்தது. அந்த நோயைக்கூட அவ்லியாவால் குணப்படுத்த முடியும். எனவே எந்த நோயாக இருந்தாலும் அவ்லியாக்களிடம் செல்லுங்கள் என்று சொல்வதற்காக இந்த கதை புனையப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் நோயாளிகள் வரும் போது அவர்கள் இறைத் தூதராக இருந்தும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்களே தவிர அல்லாஹ்வின் ஆணைப்படி விலகிவிடு என்று அவர்கள் கட்டளை போடவில்லை.

இறைநேசர்கள் இவ்வாறு கட்டளை போட்டால் போய்விடும் என்று அல்லாஹ்வே நபிகளாரோ கூறவும் இல்லை.

இந்த கதை நோய்கள் எதுவானாலும் அவ்லியா கட்டளைபோட்டால் அது நீங்கிவிடும் என்ற நம்பிக்கை ஊட்டவே இந்த கதை சொல்லப்படுகிறது. இவை திருக்குர்ஆனுக்கும் நபிபோதனைகளுக்கு எதிரானதாகும்.

உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவ்லியாவுக்கு

வயோதிகப் பெண்பொருத்தி தன் மகனை ஆண்டகை அவர்களின் மதரஸாவில் கொண்டுவிட்டு அவனுக்கு மார்க்கப் பயிற்சி அளிக்குமாறு அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் தன் மகனைப் பார்க்க வந்தாள். அவன் மெலிந்து இருப்பதையும் காய்ந்த ரொட்டித் துண்டுகளைத் தின்று கொண்டிருப்பதையும் கண்டாள். ஆண்டகை அவர்களின் சமுகத்துக்கு அவள் வந்த சமயம், அவர்கள் பொறித்த கோழிக் கறியை உண்டு கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அப்பேதைப் பெண், தாங்கள் பொறித்த கோழியை உண்ணும்போது என் பிள்ளைக்குக் காய்ந்த ரொட்டியைத் தரலாமா? என்று அவர்களிடம் வினவினாள். அது கேட்ட ஆண்டகை அவர்கள் புன்னகையுடன் கோழியின் எலும்புகளையும் உயிர்ப்பிக்கக்கூடிய அல்லாஹ்வின் ஆணை கொண்டு எழுந்திரு என்று கூறினார்கள். உடனே கோழி எழுந்து கொக்கரிக்கத் தொடங்கிற்று. உன் மகன் இத்தகைய காரணத்தை அடைந்துவிட்டால், பிறகு அவன் வேண்டியதை உண்ணத் தடையில்லை என்று அப்பெண்மணிடங் கூறினார்கள்.

 (மபெரும் தவசீலர் முஹியித்தீன் ஆண்டகை, பாகம் : 1, பக்கம் : 67)

அவ்லியாக்கள் நாடினால் இறந்து போனவற்றைக்கூட உயிர்ப்பிக்க முடியும். அது மட்டுமல்ல அவர்களிடம் பயிற்சி பெற்ற முரீதுகள் கூட உயிர்ப்பிக்கும் ஆற்றலை பெறமுடியும் என்ற இந்த கதை கூறுகிறது. ஆனால் திருக்குர்ஆனில் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உயிப்பிக்கும் ஆற்றல் உண்டு என்று கூறுகிறது.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.

அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

(அல்குர்ஆன் 9:116)

அவன் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். பூமி செத்த பிறகு அதற்கு உயிரூட்டுகிறான். இவ்வாறே நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.                                     

(அல்குர்ஆன் 30:19)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

இறந்தவற்றை உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவனுக்கு தவிர வேறு எவருக்கும் இல்லை என்று இறைவன் சுட்டிக்காட்டிருக்கும் போது இறைவனின் தனிப்பற்ற ஆற்றலை மனிதர்களுக்கு வழங்கி இணை வைப்புக் கொள்கை மக்களிடம் கொண்டு சென்று பெரும்பாவிகளாக மக்களை மாற்றும் முயற்சியில் இது போன்ற கதைகள் கொண்டு செல்கின்றன இஸ்லாமிய சமுதாயம் இது போன்ற கதைகள் விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment