Thursday, April 05, 2012

இப்படியும் சில தப்ஸீர்கள் --தொடர்: 14


குர்ஆனை மறந்த நபிகள் நாயகம்?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.

அல்குர்ஆன் 22:52

இறைத் தூதர்களின் ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்று மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. ஓதுதலில் என்றால் ஓதப்பட்டதில் என்று பொருள். அதாவது இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து பெற்ற தூதுச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது, அவை பற்றி தவறான குழப்பத்தையும், வீண் சந்தேகங்களையும் மக்களுக்கு மத்தியில் ஷைத்தான் ஏற்படுத்துவான் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்வதே குர்ஆனுக்கும், நபிவழிக்கும் பொருத்தமானதாகும்.

தவறான கொள்கையுடைய பல இஸ்லாமிய இயக்கங்கள், குழுக்கள் தங்களது கொள்கைகளை திருக்குர்ஆன் ஆதரிப்பதாகப் பிரச்சாரம் செய்வதை இன்றைக்கும் காண முடிவது இந்த வசனத்தின் அடிப்படையில் தான். ஷைத்தான் ஏற்படுத்துகின்ற குழப்பத்தின் காரணத்தாலே இந்தத் தவறான கொள்கைகள் அவர்களுக்கு சரியானதாகத் தோன்றுகின்றன. எனவே ஓதுதலில் என்பது ஓதப்பட்டதில் என்பதையே குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்திற்குச் சில அறிஞர்களால் தவறான பொருள் செய்யப்படுவதோடு அதன் அடிப்படையில் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும், கொள்கையை ஆட்டம் காணச் செய்யும் அளவில் சில கட்டுக்கதைகளும் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

"இறைத்தூதர்கள் இறைச் செய்திகளை ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தி, இறைத்தூதர்களின் ஓதுதலில் பல தவறுகளை நிகழ்த்தி விடுவான். எனவே இறைத்தூதர்கள் வசனங்களை மாற்றி, தவறாக ஓதிவிடுவார்கள். ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்பதன் அர்த்தம் இதுதான். நபிகள் நாயகம் அவர்களின் ஓதுதலிலும் ஷைத்தான் புகுந்து விளையாடியுள்ளான்'' என்று இந்த வசனத்திற்கு சில இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

நபியவர்கள் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய ஓதுதலில் ஷைத்தான் புகுந்து, நபியவர்களை தப்பும் தவறுமாக ஓத வைத்து விட்டான் என ஒரு கதையை விரிவுரை நூல்களில் உலாவ விட்டிருக்கின்றார்கள். அந்தக் கதையையும், அது எவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதையும் தொடர்ந்து காண்போம்.

நபியவர்கள் ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தியதாக இமாம்களால் விரிவுரை நூல்களில் கூறப்படும் கதை இது தான்.

நபியவர்களுக்கு மக்காவில் இருக்கும் போது அரபுகளின் கடவுள்கள் பற்றி இறைவசனம் அருளப்பட்டது. எனவே அவர்கள் லாத், உஸ்ஸா பற்றி திரும்ப, திரும்ப ஓதலானார்கள். தங்களுடைய கடவுகள்களைப் பற்றி நபியவர்கள் ஓதியதை அம்மக்கள் செவியுற்ற போது சந்தோஷம் கொண்டு, அதைக் கேட்பதற்காக மேலும் நபியவர்களை நெருங்கி வந்தார்கள். அப்போது அவர்களின் ஓதுதலில் "அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள், பரிந்துரை அவைகளிடம் வேண்டப்படும்'' என்று (தவறாக ஓதுமாறு) ஷைத்தான் போட்டான். நபியவர்களும் இதை ஓதினார்கள். அப்போது தான் இறைவன் இவ்வசனத்தை (22:52) அருளினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம் 10, பக்கம் 514

நபியவர்கள் மகாமு இப்ராஹீமில் தொழுது, (நஜ்ம் அத்தியாயத்தை) ஓதிக் கொண்டிருக்கும் போது சற்று தூங்கலானார்கள். அப்போது "லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள். அவைகளிடம் பரிந்துரை வேண்டப்படும்'' என்று (தவறாக) ஓதினார்கள். தங்களது கடவுள்களுக்கு பரிந்துரை செய்யும் ஆற்றல் உண்டு என நபியவர்கள் கூறியதை அவர்கள் செவியுற்ற போது சந்தோஷம் அடைந்தனர். பிறகு நபியவர்கள் "லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை.'' என்று (திருத்தி, சரியாக) ஓதினார்கள்.

நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான், பாகம் 2, பக்கம் 387

இணை வைப்பாளர்கள் பெரிதும் மதித்த, கடவுள்களாகப் போற்றிய லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளைப் பற்றி திருக்குர்ஆனில், "இவை மக்களால் சூட்டப்பட்ட வெறும் பெயர்கள் தாம், கற்பனைப் பாத்திரங்கள் தாம்' என்று இறைவன் நஜ்ம் அத்தியாயத்தில் (53:19-23) குறிப்பிடுகின்றான்.

நபியவர்கள் தொழுகையில் இந்த வசனங்களை ஓத முற்படும் போது ஷைத்தான் ஜிப்ரீல் வடிவில் வந்து லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகள் உண்மைப் பாத்திரங்கள் என்றும், அவைகளுக்குப் பரிந்துரை செய்யும் ஆற்றல் உள்ளது எனவும் வசனங்களை மாற்றி ஓதுமாறு நபியவர்களைக் குழப்பி விட்டானாம். ஷைத்தானால் குழப்பத்திற்குள்ளான நபியவர்களும் அவ்வாறு வசனங்களை மாற்றி ஓதிவிட்டார்கள் என்று மேற்கண்ட விளக்கவுரை (?) யில் கூறப்படுகின்றது. தங்கள் கடவுள்களுக்குச் சக்தி உள்ளது என்பதை நபியவர்கள் தங்கள் வாயாலே ஒப்புக் கொண்டதைக் கண்டு இணை வைப்பாளர்களும் சந்தோஷம் அடைந்தார்கள் என்றும் அவ்விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல விரிவுரை நூல்களில் கூறப்பட்ட இச்சம்பவம் எந்த ஹதீஸ் நூலிலும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சில இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் இச்சம்பவத்தை எந்தக் கண்டனமும் இன்றி பதிவு செய்வதற்கு முன், இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா என்றும், இதை உண்மை என ஒப்புக் கொண்டால் ஏற்படும் விளைவு என்ன என்றும் சிந்தித்திருக்க வேண்டும்.

ஆம்! இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் ஒரு கட்டுக்கதை இது! குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் போர் தொடுக்கும் ஒரு பொய்க்கதை இது!

பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகம்

சாதாரண மனிதர்களுக்கு மறதி உள்ளதைப் போன்று நபியவர்களுக்கும் மறதி ஏற்படும். பல நிலைகளில் நபியவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. அரிதாகத் தொழுகையில் சில ரக்அத்களை கூட்டியும், குறைத்தும் நபியவர்கள் தொழுதது மறதியினால் தான்.

அந்தச் சந்தர்ப்பத்திலேயே, "நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களுக்கு மறதி ஏற்படுவதைப் போன்று எனக்கும் மறதி ஏற்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 401)

எனினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபியவர்கள் ஒரு போதும், கிஞ்சிற்றும் மறந்துவிட மாட்டார்கள். நபிகளார் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச் செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய் விடும். எனவே தான் வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகத்திற்கு மறதி ஏற்படாது என்ற ஒரு பாதுகாப்பை இறைவன் வழங்கியுள்ளான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் எந்த ஒன்றையும் மறந்து விட மாட்டார்கள்.

நபியவர்களின் உள்ளத்தில் புகுந்து, சரியான வசனங்களை மறக்கடிக்கச் செய்து, தவறான வசனங்களை ஓதச் செய்யும் ஆற்றல் ஷைத்தானுக்குத் துளியும் இல்லை. நபிகளாரின் உள்ளத்தை இது போன்ற கேடு ஏற்படாதவாறு இறைவன் பலப்படுத்தியுள்ளான்.  

திருக்குர்ஆனில் உள்ள பல வசனங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

(முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம் நீர் மறக்க மாட்டீர்.

அல்குர்ஆன் 87:6

(முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

அல்குர்ஆன் 25:32

அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!

அல்குர்ஆன் 11:75

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

நபியவர்கள் குர்ஆனில் எதையும் மறக்க மாட்டார்கள் என்று இத்தனை வசனங்கள் கூறும் போது லாத், உஸ்ஸாவை ஆதரித்து நபியவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டிக்காது. அவைகளுக்கு ஆற்றல் உண்டு என நபிகளார் மறந்தும் கூறியிருக்க மாட்டார்கள் என்பதில் அறிவுடைய மக்களுக்குத் துளியும் சந்தேகமிருக்காது. விரிவுரையில் கூறப்பட்ட அந்த விஷமத்தனமான விளக்கம் இத்தனை இறை வார்த்தைகளோடும் நேரிடையாக மோதுவதை அறியலாம்.

விடைதரும் விளக்க வார்த்தைகள்

மேலும் பின்வரும் குர்ஆன் வசனங்களையும் சிந்தித்துப் பார்த்தாலே மேற்கண்ட கதையை நம்புவது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணரலாம்.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 69 :44

"நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 10 :15

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:4

(முஹம்மதே!) நாம் உமக்கு தூதுச் செய்தியாக அறிவிக்காததை நம் மீது நீர் இட்டுக் கட்ட வேண்டும் என்று உம்மைத் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள். (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

அல்குர்ஆன் 17: 73

நபியவர்கள் குர்ஆனில் உள்ளதை மறந்து விட மாட்டார்கள்.

குர்ஆனில் இல்லாத எதையும் ஓத மாட்டார்கள்.

குர்ஆனில் இருப்பதை மாற்றி ஓத மாட்டார்கள்.

இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுபவை தவிர வேறெதையும் ஓத மாட்டார்கள்.

இறைவன் கூறாததைக் கூறியதாக இட்டுக்கட்ட மாட்டார்கள்.

தவறு ஏற்படாதவாறு இறைவன் நபியவர்களை நிலைப்படுத்தியுள்ளான்.

என்பன போன்ற பல கருத்துக்கள் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளை ஆதரித்து, சரியான வசனங்களை மறந்து நபியவர்கள் தொழுகையில் ஓதினார்கள் என்றால் இறைவனின் முத்து முத்தான மேற்கண்ட வசனங்களுக்கு என்ன அர்த்தம்? அச்சம்பவத்தை நம்புவது இவ்வளவு இறைவசனங்களை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமில்லையா? இந்த விளக்கங்கள் குர்ஆனை விளங்க உதவுமா?

இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க நினைக்கும் கயவர்கள் விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கும் இது போன்ற விளக்கங்களைக் கையிலெடுத்து தான் பிரச்சாரம் செய்கின்றனர். எச்சிலைச் சோற்றுக்கு நாக்கைத் தொங்கவிட்டு அலையும் நாய்கள் போல இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைக்க சல்மான் ருஷ்டி போன்ற மனித ஷைத்தான்கள் அலைகின்றார்கள்.

இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களுக்குத் தீனி போடும் விதமாகவே விரிவுரை நூல்களில் காணப்படும் இது போன்ற விளக்கங்கள் அமைந்துள்ளன என்பதை இமாம்களின் விளக்கங்களைக் கண்மூடித்தனமாக நம்பும் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குர்ஆனின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் இமாம்கள் கூறிய இக்கதை அமைந்துள்ளது. இது முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது. இதையும் எவ்விதக் கண்டனமும் இன்றி இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்றால் இதிலிருந்தே விரிவுரை நூல்களின் நிலையை, இமாம்களின் விளக்கங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபியின் கப்பல்

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். "நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:38

திருக்குர்ஆன், நூஹ் நபியின் வரலாற்றை மனிதர்களுக்கு அழகாக எடுத்துரைக்கின்றது. 950 வருடம் தம் சமுதாய மக்களிடையே வாழ்ந்து, ஏகத்துவப் பிரச்சாரம் செய்தும் சொற்ப நபர்களே நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். எனவே ஒரு கப்பல் செய்யுமாறு நூஹ் நபிக்கு இறைவன் கட்டளையிட்டு அதில் நம்பிக்கை கொண்ட மக்களை அழைத்து செல்லுமாறும், ஏனைய மனிதர்களுக்குத் தனது தண்டனையை இறக்கப் போவதாகவும் இறைவன் தெரிவித்தான். நூஹ் நபியும் இறைவனது கட்டளைக்கு இணங்கி, தனிக்கப்பலில், தன்னை நம்பிக்கை கொண்ட மக்களுடன் இறைவழியில் பயணமானார்கள். ஏனையோர் இறை தண்டனைக்கு ஆளானார்கள்.

பல்வேறு படிப்பினைகள் நிறைந்த இந்த வரலாற்றுச் சம்பவம் துளியும் மாற்றமின்றி திருக்குர்ஆனில் பல வசனங்களில் கூறப்படுகின்றது. அவற்றில் இந்த வசனமும் ஒன்று.

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? இதுவரையிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனினும் இமாம்கள் இதில் தலையிட்டு விளக்கமளிக்க புகுந்த பிறகு தான் புற்றீசல்களைப் போன்று பிரச்சனைகளும் கிளம்ப ஆரம்பித்து விட்டன. நல்ல கருத்துக்களை விளக்கியிருந்தால் அதை இவ்வாறு நாம் விமர்சித்திருக்க மாட்டோம். இந்த வசனத்தில் அவர்கள் விளக்கியிருப்பது நூஹ் நபியின் கப்பலைப் பற்றி....

இதோ அந்த விளக்கங்கள்:

ஈஸா அலை அவர்களிடம், "(நூஹ் நபியுடன்) அக்கப்பலில் கலந்து கொண்ட ஒரு மனிதரை நீங்கள் உயிருடன் எழுப்பலாமே. அவர் நமக்கு அதைப் பற்றி தெரிவிப்பாரே'' என்று ஹவாரிய்யீன்கள் கேட்டனர். அவர்களை மண் நிறைந்த பகுதியை நோக்கி ஈஸா அலை அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து இது என்னவென உங்களுக்குத் தெரியுமா? என மக்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என அவர்கள் பதிலளித்தனர். அதற்கு ஈஸா (அலை), "இது நூஹுடைய மகன் கஃப்'' என்று கூறி தனது அஸாவினால் அதை அடித்து, "அல்லாஹ்வின் அனுமதியுடன் நீ நிலைபெறு'' என கூறினார்கள். அப்போது தனது தலையிலிருந்த மண்ணை தட்டிவிட்டவாறே அவர் (நூஹுடைய மகன்) எழுந்து நின்றார்.  அவர் முதியவராக இருந்தார்.

அப்போது ஈஸா (அலை), "நீ இவ்வாறு தான் அழிக்கப்பட்டாயா?'' என வினவினார். அதற்கு அவர், "இல்லை நான் இளைஞனாக இருந்தபோதே மரணித்து விட்டேன். எனினும் அது ஒரு நேரம். இப்போது நான் நரைத்து விட்டேன்'' என பதிலளித்தார். "சரி நூஹுடைய கப்பலை பற்றி நமக்கு நீ கூறு'' என ஈஸா (அலை) கூறினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:

அதன் நீளம் ஆயிரத்து இருநூறு முளங்கள், அதன் அகலம் அறுநூறு முளங்கள், அதில் மூன்று தட்டுக்கள் இருந்தன. ஒரு தட்டில் கால்நடைகள், மற்றொரு தட்டில் மனிதர்கள், மற்றொரு தட்டில் பறவைகள் இருந்தன.

கால்நடைகளின் சாணங்கள் அதிகரித்த போது, "யானையின் தும்பிக்கையை வெட்டி விடு'' என இறைவன் வஹீ அறிவித்தான். நூஹ் (அலை) அவர்களும் அதை வெட்டினார்கள். அதில் அந்த இடத்தில் ஒரு ஆண் பன்றியும் ஒரு பெண் பன்றியும் தங்கின. அவைகள் சாணத்தை நோக்கி வந்தன.

எலி ஒன்று கப்பலின் நங்கூரத்தில் வந்த போது அந்த நங்கூரத்தை எலி சாப்பிட ஆரம்பித்தது. உடனே இறைவன், சிங்கத்தின் இரு கண்களுக்கிடையில் அடி என நூஹ் (அலை) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். அதன் மூக்குத் துவாரத்திலிருந்து ஆண் பூனை, பெண் பூனைகள் வெளிப்பட்டன. அவ்விரண்டும் எலியை நோக்கி வந்தன.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8, பக்கம் 44

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 15, பக்கம் 312

நூஹ் (அலை) அவர்களின் கப்பல் 1200 முழம் நீளம், 600 முழம் அகலம் கொண்டதாக இருந்தது எனவும், அக்கப்பலில் மனிதர்களுக்கு ஒரு தட்டு, பறவைகளுக்கு ஒரு தட்டு, ஏனைய விலங்கினங்களுக்கு ஒரு தட்டு என மொத்தம் 3 தட்டுக்கள் இருந்ததாகவும் இவ்விளக்கத்தில் கூறப்படுகின்றது. இவ்விளக்கத்திற்கு அச்சாரமாக அமைந்த திருக்குர்ஆன் வசனம் எது என்பதை இமாம்கள் விளக்குவார்களா? அல்லது இந்தச் சம்பவத்தை நபிகள் நாயகம் கூறியதற்கான ஆதாரத்தைத் தான் முன்வைப்பார்களா?

விலங்கினங்களின் சாணம் நிறைந்த போது பன்றியை உருவாக்கி அதைக் காலி செய்தது, எலியின் சேட்டை அதிகரித்த போது அதை அழிக்க சிங்கத்தின் மூக்குத் துவாரத்திலிருந்து (என்ன மர்மமோ?) பூனையை உருவாக்கியது என வழக்கம் போல மாயாஜாலக் கதைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. மொத்தத்தில் இதுவும் அடிப்படை ஆதாரமற்ற ஒரு கதை தானே ஒழிய இதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment