கடன் வாங்கியவர் கவனிக்க வேண்டியவை
இன்று சிலர் கடன் வாங்குகின்றார்கள். ஆனால் கொடுக்கின்ற தவணை வரும் போது கொடுக்க முடியாமல் பல பொய்கள் சொல்லியும் ஏமாற்றியும் விடுகின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்கள் பல எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறார்கள். நாம் கடனை வாங்கும் போது, "நான் இந்தக் கடனை நிறைவேற்றுவேன்' என்ற எண்ணம் முதலில் வேண்டும். பின்னால் அல்லாஹ் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான்.
மாறாக அதனை மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அல்லாஹ் அதனை அப்படியே ஆக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பின் வரக்கூடிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்கüன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 2387
நபி (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்கு பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் (நபியவர்களின் தோழர் ஒருவரை அழைத்து எனக்கு யாரிடத்திலாவது) கடன் வாங்கி வர வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர், அவர்களிடம் "உம்முல் முஃமினே, நீங்கள் கடன் வாங்கி வருமாறு கேட்கிறீர்கள். உங்களிடம் நிறைவேற்றுவதற்கு ஒன்றும் இல்லையே'' என்று கூறினார். அதற்கு மைமூனா (ரலி) சொன்னார்கள்: "யார் நிறைவேற்ற நாடியவராக கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
நூல்: திர்மிதி 4608
மரணிப்பவருடைய வஸிய்யத்
ஒரு மனிதன் அவனுடைய மரணத் தருவாயில் கண்டிப்பாக வஸிய்யத் செய்ய வேண்டும். தன்னுடைய பிள்ளைகளை அழைத்து வஸிய்யத் செய்ய வேண்டும். "நான் இன்னாரிடம் இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறேன். அதனை நீங்கள் நிறைவேற்றிட வேண்டும்'' என்று கூற வேண்டும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, "நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்!'' என்றார். மறுநாள்(போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்றில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது.
(நூல்: புகாரி 1351)
பெற்றோரின் கடனைத் தீர்ப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இன்றைக்குப் பெற்றோரின் கடனை நிறைவேற்றாமல் அவர்களுக்காக மார்க்கம் காட்டாத கத்தம் பாத்திஹா, மவ்லூது போன்றவற்றை ஓதி வருவதைக் காண்கிறோம், இதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். நான் கட்டளையிடாத ஒன்றை ஏன் செய்தாய்? என்று தான் கேட்பான்,
ஆனால் தந்தை, தாய் பட்ட கடன் பிள்ளையிடம் தான் சேரும். அதனை இன்றைய சமூகத்தில் அப்படியே விட்டு விடுவதைகக் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சபைக்கு ஒரு மனிதர் வந்து, "என்னுடைய தாயோ அல்லது தந்தையோ (இரண்டு விதமாகவும் ஹதீஸ்களில் வருகிறது) ஹஜ் கடமையான நிலையில் மரணித்து விட்டார். அவருக்காக வேண்டி நான் நிறைவேற்றவேண்டுமா? ஹஜ் கடமையா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதரிடம், "உம்முடைய தாய் கடன் வாங்கினால் அதனை நீர் தானே நிறை வேற்றவேண்டும் அப்படி என்றால் அல்லாஹ்வுடைய கடனை நிறைவேற்று! கடன் எப்படி கடமையோ அதேபோன்று தான் ஹஜ்ஜும் கடமை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பெற்றோர் பட்ட கடனுக்கு அவருடைய பிள்ளைகள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது, நமது பெற்றோருடைய நண்பர்களிடமும் விசாரிக்க வேண்டும். அப்படி கடன் பட்டு இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற முடியாது என்றால், "எனது தந்தை மரணித்து விட்டார். என்னிடமும் அதை நிறைவேற்றுவதற்கு வசதி இல்லை. ஆகையால் அதனை இந்த உலகத்திலேயே மன்னித்து விடுங்கள்'' என்று கூறவேன்டும். இதனை யாரும் செய்வது கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ் வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான்.
"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 4.11.12)
ஆண்களுக்கு இவ்வளவு, பெண்களுக்கு இவ்வளவு என்று கூறிக்காட்டும் போது இது எல்லாம் அவர் செய்து விட்டுச் சென்ற வஸிய்யத்துக்குப் பின்னாலும் அவருடைய கடனை அடைத்ததற்குப் பின்னாலும் தான். அதற்கு முன்னால் அதை வாரிசு எடுக்க முடியாது. ஆனால் இதை இன்றைக்கு யாரும் செய்வதில்லை.
பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலுள்ள சொத்தை விட்டுச் சென்றால் அதனை அப்படியே கடன் வாங்கியவனிடம் கொடுத்து விடவேண்டும். அது போக அதிகமாக இருந்தாலும் நம்முடைய கையிலிருந்து அதனைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் இதனை நாம் எத்தனை நபர்கள் செய்கிறோம்?
நபி (ஸல்) அவர்கள் கடன்பட்ட ஒருவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அப்படியென்றால் நம்முடைய தாய், தந்தையரின் கடனை அடைக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் சென்று விடுவார்களே! எனவே நாம் எப்பாடு பட்டாவது கடனை அடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது பிள்ளைகள் மீது கடமையாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.
(நூல்: புகாரி 1852)
நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது கவலை காரணமாக வசூல் வாங்குவதெல்லாம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் இருந்ததெல்லாம் காலியாய் போய் ஒன்றுமில்லாமல் இருந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே எல்லாவற்றையும் முடுக்கி விடுகிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம் வரும் என்று தகவல் வந்தவுடன் அபூபக்கர் (ரலி) ஓரிரு நாட்கள் தாமதிக்கிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம் அல்லது பேரித்தம் பழம் அல்லது கோதுமை ஏதோ ஒன்று அங்கிருந்து வந்த உடன் அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களை எல்லாம் அழைத்துக் கூறினார்கள்.
"மக்களே! ஒரு பொருள் வந்திருக்கிறது. அதில் யாரிடத்திலாவது நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டு இருந்தால் அல்லது வாக்குறுதி அழித்திருத்தால் அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். அதனை ஏன் அபூபக்கர் நிறைவேற்ற வேண்டும்? தந்தையுடைய கடனை எப்படி மகன் நிறைவேற்ற வேண்டுமோ அதே போன்று ஆட்சியாளர் பெற்ற கடனுக்கு அவருக்குப் பிறகு யார் வருகிறாரோ அவர் தான் அதற்கு பொறுப்பாளி.
எப்படி நல்லது கெட்டதுக்கு பொறுப்பாளியோ அப்படித் தான் கடனுக்கும் அவர் பொறுப்பாளியாவார். எனவே அதனை அவர் நிறைவேற்ற வேன்டும் இதன் அடிப்படையில் அதனை அபூபக்கர் (ரலி) நிறைவேற்றினார்கள். அந்த அடிப்டையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யாரிடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் கடன் வாங்கியிருந்தார்களோ அவர் வந்து எடுத்து கொள்ளட்டும் என்று கூறினார்கள். அப்போது ஆளுக்கு ஆள் அதனை வாங்கிப் போக ஆரம்பித்தார்கள்.
அந்த அடிப்படையில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு ஒன்று தருவேன் என்று வாக்களித்திருந்தார்கள். அதனைப் போய் கேட்டவுடன் அப்படியே அள்ளி, அள்ளி ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். திரும்பவும் இன்னும் கொஞ்சத்தை கொடுங்கள் என்று கேட்கிறார். மீண்டும் ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். மீண்டும் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்க, மீண்டும் ஐநூறு திர்ஹம், ஆக மொத்தம் ஆயிரத்தி ஐநூறு திர்ஹங்கள் ஜாபிருக்கு அபூபக்ர் (ரலி) கொடுக்கிறார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, "நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று "நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. "இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக!'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2296 2298 2683 3137 3165 4383
நாம் மேலே விவரித்தது எல்லாம் கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேன்டிய விஷயங்கள் ஆகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment