Sunday, June 03, 2012

ரியா

ரியா என்னும் சிறிய இணைவைப்பு
அப்துல் அஜீஸ், சென்னை.

ஒரு மனிதன் செய்கின்ற எந்த  நல்ல அமல்களாக இருந்தாலும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமலும் இதற்காக மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் பிறருடைய பாராட்டுதலையும் புகழையும் எதிர்பார்த்து செய்கின்ற செயலுக்கு தான் அரபியில் ரியா என்று சொல்லப்படுகிறது.
ரியா என்ற பாரதுôரமான பாவத்தின் விபரீதத்தைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ளாததின் காரணத்தால் இந்த எண்ணம் நம்மில் பலரிடத்தில் இருப்பதை காணலாம். எனவே இந்த பாவத்தின் வீபரீதத்தைப்பற்றி நாம் முழமையாக அறிந்துக் கொள்வோம்.
ரியா ஏற்படுவதற்கு காரணம்:
ஒருவன் தன்னுடைய தொழுகை, நோன்பு, தர்மங்கள் ஆகிய நல்ல அமல்களை மக்களுக்கு காட்டுவதற்காக செய்து அதன் மூலம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் முக்கிய காரணியாக திகழ்கிறது. இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் ஒரு உதாரணத்தை  சொல்லி நம்மை எச்சரிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 2:264)
ரியாவைப் பற்றி வந்துள்ள எச்சரிக்கைகள்:
ரியா என்பது சிறிய இணைவைப்பு என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்கள் விஷயத்தில அச்சப்படுவதொல்லாம் சிறிய இணைவைப்பைத்தான் என்றார்கள். அப்போது நபிதோழர்கள் அல்லாஹ்வின் துôதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ரியா என்று பதிலளித்தார்கள்.
(நூல் : அஹ்மத் 22523)
இந்த அளவுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எச்சிரிக்கை செய்த விஷயத்தில் இன்றைக்கு நாம் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். உதரணமாக நம்மில் ஒரு சிலர் நாங்கள் தான் ஆரம்பகாலத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக மிகவும் கஷ்டப்பட்டோம் என்றும் அதே போல் நாங்கள் இல்லை என்றால் இந்த ஊரில் தவ்ஹீத் வளர்ச்சி அடைந்திருக்காது என்றொல்லாம் தங்கள் அர்பபணிப்பவை சொல்லிக் காட்டுவதை பார்க்கிறோம்.
அதே போல் இது மாதிரியான எண்ணங்கள் இன்னும் சில செயல்களை நாம் செய்யும் போது ஏற்படும்.
தஃவா பணிகளை வீரியமாக மாவட்டம், கிளைகள் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாநிலத் தலைமை, அதிக தஃவா செய்யும் மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் புள்ளிகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இதில் தஃவா பணிகளை அதிகம் செய்து மக்களிடம் நற்பணிகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் மிகைத்து நிற்க வேண்டுமே தவிர நாங்கள் அதிக புள்ளிகள் வாங்குகிறோம் என்று மக்களிடம் காட்டவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிகைத்து நின்றுவிடக்கூடாது.
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
திருக்குர்ஆன்(2:265)
ரியாவால்  மறுமையில் ஏற்படும் விபரீதங்கள்:
இறைவனுக்காக நல்ல அமல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் இவ்வுலகில் என்னதான் மிகப்பெரிய காரியங்களை செய்தாலும் மறுமையில் அவர்களுக்கு அணுவளவும் கூலி கிடைக்காது. மாறாக நரக வேதனை தான் கிடைக்கும்.
சுலைமான் பின் யசார்  அவர்கள் கூறியதாவது: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ""அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், ""(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்'' என்று பதிலளிப்பார்.
இறைவன், ""(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ""மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு ""அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், ""(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ""(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) ""அறிஞர்' என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; ""குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ""அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ""நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்'' என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ""(இல்லை) நீ பொய் சொல்கிறாய் ""இவர் ஒரு புரவலர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
நூல் முஸ்லிம்:3865
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட மூவரும் சாதாரன அமல்களைச் செய்யவில்லை  மாறாக இஸ்லாத்தில் மிகப்பெரிய நன்மை பெற்று தரக்கூடடிய அமல்கள் என்று சொல்லப்பட்டவைகள். இப்படிப்பட்ட செயலைச் செய்தவர்களின் செயல் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் அவர்களுடைய எண்ணத்தையே கவனித்து கூலி கொடுக்கிறான்.
அவர்களுடைய எண்ணம் சரியில்லாத காரணத்தால் அவர்களை முகம் குப்புற நரகத்தில் வீசுகிறான்.  இவர்களிடத்தில் இறைவனின்  திருப்தியை பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தததான் இந்த இழிவான நிலைக்கு காரணமாகும்.
அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்காது:
யார் பிறருடைய மன குளர்ச்சிக்காக ஒரு நல்ல அமலை செய்தாரோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் எந்த கூலியும் கிடைக்காது. மாறாக யாருக்காக அந்த அமலை செய்தாரோ அவரிடத்தில் சென்று கூலி வாங்கவேண்டிய நிலைஏற்பட்டு ஒன்றும் கிடைக்காத நிலை ஏற்படும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் தீர்ப்பு வழங்கப்படும் போது) பிறருக்காக அமல்களை செய்தவரை நோக்கி அல்லாஹ் கூறுவான்: யாரிடம் உங்கள் செயல்களை காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் சென்று ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள்.           
நூல் அஹ்மத்:22523
மறுமையில் அல்லாஹ் விளம்பரப்படுத்துவான்:
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ""யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன்.
நூல் புகாரி : 6499
யார் விளம்பரத்திற்க்காகவோ முகஸ்துதிக்காகவோ ஒரு நல்ல அமலை இவ்வுலகில் செய்கிறாரோ அவருடைய கெட்ட எண்ணத்தை அல்லாஹ் மறுமையில் அம்பலப் படுத்துவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
மறுமையில் இறைவனுக்கு சஜ்தா செய்ய முடியாது:
எந்த மனிதர்கெல்லாம் தன்னுடைய தொழுகை மற்றும் நல்ல அமல்களை  முகஸ்துதிக்காக செய்கிறானோ அவனால் மறுமையில் அல்லாஹ்வுக்கு சிரவணக்கம்  (சஜ்தா) செய்ய முடியாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில்      இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி).
நூல் புகாரி; 4919
எனவே ரியா என்னும் மிக மோசமான தீய எண்ணம் சாதாரண முஸ்லிம் முதல் மார்க்க அறிஞர்கள் வரை என எல்லரிடத்திலும் ஏற்படக்கூடய ஒன்றாகும். இந்த தீமையில் நாம் விழுந்துவிட்டால் என்னதான் அதிக அளவுக்கு நன்மைகள் செய்தாலும் அதனால் மறுமையில் கூலி கிடைக்காது. என்பதை நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளும் தெளிவாக எச்சரிக்கிறது. எனவே இந்த அறிவுரைகளை நம் மனதில் நிறுத்தி கொண்டு இதை (ரியாவை) விட்டும் அல்லாஹ்விடத்தில் அதிக அதிமாக பாதுகாப்பு தேடக் கூடிய நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்குவானாக

No comments:

Post a Comment