Thursday, May 12, 2011

நபிகளாரின் உதாரணங்கள்


பாவத்தைக் கழுவும் தொழுகை
கே. அர்ஷத் எம்.ஐ.எஸ்.ஸி. பனைக்குளம்
உங்கல் ஒருவரது வாசல் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது என்று மக்கள் பதிலத்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாசலில் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.
(அல்குர்ஆன் 29:45) இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்லித் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களிலிருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும். இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, (தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும் என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50
நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான். மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது.... தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான்.
அல்குர்ஆன் 87:14, 15 பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது. யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160
சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது. தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.
நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா? என்று கேட்டார்கள். அவர், ஆம்! என்றார். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் அல்லாஹ் உமது பாவத்தை அல்லது உமக்குரிய தண்டனையை மன்னித்து விட்டான் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)
தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.
பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)
இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)
இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள் எனக் கேட்டார். அப்போது, நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)
அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூலிகள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களிலிருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள்; வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.
தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அல்குர்ஆன் (107:4, 5)
இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.
இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி (657)
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378
தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

No comments:

Post a Comment