Monday, May 30, 2011

முரண்பாடுகள் களைவோம்.


முரண்பாடுகள் களைவோம்.
பி.ஜே

(அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அவர் எழுதிய கட்டுரை- திருத்தங்களுடன்)


திருக்குர்ஆனையும். நபிவழியையும் மட்டுமே தங்கள் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரண்படும் எவரது கருத்தையும் நிராகரித்து விடும் கடமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதில் சர்வ அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
இதெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையே இவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்ற என்ன காரணம்?
 திருக்குர்ஆனையும் நபிவழியையும் புறக்கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்களா? இல்லை இத்தகைய அலட்சியப் போக்கை ஏற்படுத்துவதற்காகவே சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பல பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் சொன்னதாக சிலரால் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் (?) தான் இந்தச் சமுதாயம் குர்ஆன் ஹதீஸைப் புறக்கணித்துச் செல்லக் காரணமாகி விட்டன.
 அவற்றில் அதிக அளவில் மவ்லவிகளால் அரங்கேற்றப்படும் ஒரு ஹதீஸை (?) நாம் ஆராய்வோம். அந்த ஹதீஸ் மேடைகள் தோறும் சமீபகாலமாக முழங்கப்படுகின்றன. ஏடுகளில் எழுதவும்படுகின்றன. தங்களின் தவறான போக்குகளை நியாயப்படுத்திட அந்த ஹதீஸ் (?) இவர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கின்றது. சாதாரணமாகச் சிந்தித்துப் பார்ப்பவனுக்கும் கூட பொய்யென்று தெரிந்துவிடும் இந்த நச்சுக் கருத்தை துணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் சொல்ல எப்படித் துணிந்தார்கள்? வேண்டுமென்றே இதைக் கூறுகிறார்களா? அல்லது அறியாமை இருளில் அவர்கள் சிக்கிக் கொண்டார்களா? என்பது நமக்குப் புரியவில்லை
.
اختلاف العلماء رحمة للامة
இக்திலாபுல் உலமாயி ரஹ்மதுன் லில் உம்மா
(அறிஞர்கள் ஆளுக்கொரு விதமாக சட்டங்களைக் கூறுவது இந்த சமுதாயத்திற்குக் கிடைத்த அருட்கொடையாகும்.(
اختلاف امتي رحمة
இக்திலாபு உம்மதீ ரஹ்மா
(என் சமுதாயத்தினர்கள் ஆளுக்கொரு விதமாக நடப்பது ரஹ்மத் (எனும் இறையருள்) ஆகும்,
இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் இந்த நச்சுக் கருத்தைத் தான் நபிகள் நாயகத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனின் எத்தனை வசனங்களுடன் இது நேரடியாக மோதுகின்றது. ஆதாரப்பூர்வமான நபிமொழிகளைப் பொய்யாக்க முற்படுகின்றது என்பதை ஏனோ இவர்கள் உணர மறுக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொன்னார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால்
நபிகள் நாயகத்திடம் செவியுற்றவர் யார்?
 அவரிடமிருந்து செவியுற்ற மற்ற அறிவிப்பாளர்கள் யார்?
அவர்களின் தகுதிகள் என்ன?
எந்த நூலில் இது பதிவாகியுள்ளது
என்றெல்லாம் அலசி ஆராய்ந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் எந்த ஒன்றையும் கூற வேண்டும். இவ்வாறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. யாருக்கோ வந்த விருந்தாகவே மார்க்கத்தைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் அரபியில் சொல்லப்படுமானால் ஆமீன் சொல்வதற்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த ஹதீஸின் தரத்தை நாம் ஆராய்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுபவைகளை அறிவிப்பவர் நினைவாற்றல் குறைந்தவராகவோ, தீய நடத்தை உடையவராகவோ இருந்தால் அந்தச் செய்திகள் பலவீனமானவை என்று தள்ளப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் திட்டமிட்டுப் பொய் கூறுபவராக இருந்தால் அவர் மூலம் வருகின்ற செய்தி இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறி முற்றாக நிராகரிக்கப்பட்டு விடும்.
இட்டுக்கட்டப்பட்டவை என்றாலும் பலவீனமானவை என்றாலும் ஏதேனும் ஹதீஸ் நூலில் அது இடம் பெற்றிருக்கும். ஆனால் மவ்லவிமார்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஹதீஸ் எந்த ஹதீஸ் நூலிலும் இடம் பெறவே இல்லை. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை விடவும் ஒரு படி கீழே இறங்கி வடிகட்டிய பச்சைப் பொய்யாகி விடுகின்றது.
இந்த ஹதீஸ் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் அறிமுகமானதல்ல. ஆதாரப்பூர்வமான அல்லது பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசை கூட இதற்கு உள்ளதாக எனக்குத் தெரியவில்லை என்று ஸுப்கீ என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார். இவரது நூல்களில் சில அரபிக்கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் உள்ளது.
பைளாவி என்னும் நூலின் ஓரக் குறிப்பில் ஷைகு ஜகரிய்யா அன்சாரி என்பவரும் இதை ஊர்ஜிதம் செய்கிறார்கள்.
 இந்த மவ்லவிகள் தாங்கள் ஒப்புக் கொண்ட அறிஞர்களின் கூற்றையாவது நம்பி இந்தப் பொய்யை அரங்கேற்றுவதைத் தவிர்க்க வேண்டாமா?
பல தவறான் கருத்துக்களையும் நியாயப்படுத்தும் ஸுயூத்தி என்ற அறிஞர் நமக்குக் கிடைக்காத ஏதேனும் ஹதீஸ் நூலில் இது இருக்கக்கூடும் என்று விசித்திரமான தீர்ப்பு வழங்குகிறார். ஹதீஸ் கலையில் ஓரளவாவது ஈடுபாடு உள்ளவர்களும் இவரது அர்த்தமற்ற வாதத்தை ஏற்க மாட்டார்கள்.
 இந்த நூலில் தான் இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் கூட அறிவிப்பவர்களின் தகுதிகளைப் பரிசீலனை செய்தே எற்க வேண்டும் என்றிருக்க ஏதோ ஒரு நூலில் இருக்கலாம் என்ற அனுமானம் எப்படிப் போதுமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் பல பொய்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் அறிவிப்பாளர்களை எடைபோட்டுப் பரிசீலிக்கும் துறையில் இறங்கி ஹதீஸ் கலை வல்லுநர்கள் பொய்களைக் களை எடுத்தனர். இவரோ ஏதோ ஒரு நூலில் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே இதை சரி காண்கிறார்.
இது எவ்வளவு ஆபத்தான வாதம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு பாதுகாப்பற்றதாக ஆகி விடும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நபிமொழி என்று கூறமுடியும். ஆதாரம் கேட்டால் நாம் பார்க்காத ஏதோ கிதாபில் இருக்கலாம் என்று சொல்லிவிட முடியும்.
 இது எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை என்பதே இதைத் தூக்கி எறிய போதுமானதாகும். இதன் கருத்தும் ஆபத்தானதாகவும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் இருக்கும் போது இதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?
அறிஞர்களும் சமுதாயமும் ஆளுக்கொரு விதமாக நடப்பது அல்லாஹ்வின் அருட்கொடை என்ற கருத்து சரியானது தானா என்று ஆராய்வோம்.
 இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏரளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்
أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 4:82
இந்தக் குர்ஆனில் முரண்பாடு இல்லாமல் இருப்பது தான் இறை வேதம் என்பதற்கு சரியான சான்று என்று அல்லாஹ் இதன் மூலம் தெளிவு படுத்துகிறான். முரண்பாடுகள் தான் அருட்கொடை என்றிருந்தால் எவ்வளவு முரண்பாடு பார்த்தீர்களா என்றல்லவா அல்லாஹ் சொல்லியிருப்பான்.
ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين(118)إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين(119)
 உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். "மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
திருக்குர் ஆன் 11:118,119
இறைவனின் அருள் பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே நீடிப்பார்கள் என்று அல்லாஹ் கூறுவது கருத்து வேறுபாடுகளை நீக்கிக் கொள்வது தான் அல்லாஹ்வின் அருள் என்ற கருத்தைத் தருகிறது. கருத்து வேறுபாடுதான் அல்லாஹ்வின் அருள் என்று கூறுவது அல்லாஹ்வின் மேற்கண்ட வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.
கருத்து வேறுபாடு கொண்டு அதை நியாயப்படுத்துவது கொள்கை கெட்டவர்களின், வழிகேடர்களின் செயல் என்று பின்வரும் வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
 كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم(213)2
மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.
திருக்குர் ஆன் 2:213
 إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب(19)3
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
திருக்குர் ஆன் 3:19
ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم(105)3
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.
திருக்குர் ஆன் 3:105
وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون(19)10
மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர். பின்னர் முரண்பட்டனர். உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிராவிட்டால் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்.
திருக்குர் ஆன் 10:19
ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون(93)10
இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.
திருக்குர் ஆன் 10:93.
 وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون(64)16
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
திருக்குர் ஆன் 16:64
إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون(76)27
7இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டவற்றில் அதிகமானவற்றை இக்குர்ஆன் அவர்களுக்கு விவரிக்கிறது.
திருக்குர் ஆன் 27:76
 ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب(45)41
4மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து வார்த்தை முந்தியிருக்காவிட்டால் இவர்களுக்கிடையே தீர்ப்பளிக் கப்பட்டிருக்கும். இவர்கள் இதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.
திருக்குர் ஆன் 41:45
وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون(17)45
இம்மார்க்கம் பற்றி பல சான்றுகளையும் அவர்களுக்கு வழங்கினோம். அவர்களுக்கு அறிவு வந்த பின்னரே அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமை காரணமாக முரண்பட்டனர். உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் தீர்ப்பளிப்பான்.
திருக்குர்ஆன் 45:17
கருத்து வேறுபாடுகளைக் களை எடுத்து இறவனின் ஒரே வழிகாட்டலின் பால் அழைப்பதே இறவனின் விருப்பம் என்று இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே கருத்து வேறுபாடுகளை நியாயபடுத்துவதும் அது அல்லாஹ்வின் அருள் என்று வாதிடுவதும் இஸ்லாத்துக்கு எதிரான வாதமாகும்.
அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவதைக் கண்டால் அதில் எது சரியானது என்பதை நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து சரியான ஒரே கருத்தையே ஏற்று மற்றதை மறுக்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் சரியான பாதையாகும்
.
(onlinepj)




No comments:

Post a Comment