Sunday, May 08, 2011

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா


அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா
 மவ்லிது, மீலாது விழா போன்ற அனாச்சாரங்களை ஆதரிக்கக் கூடியவர்கள் தங்களுடைய இந்த பித்அத்தான காரியங்களை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுக்கதைகளை ஆதாரங்களாகக் கூறிவருகின்றனர். அந்த கட்டுக்கதைகளில் ஒன்றுதான் அபூ லஹப் விரலில் நீர் வடிந்ததாக வரக்கூடிய செய்தி.
நபிகள் நாயகம் பிறந்த உடன் அந்தப் பிறப்புச் செய்தியை சுவைபா என்ற பெண் அபூ லஹபிடம் கூறினாராம். உடனே அபூ லஹப் தன்னுடைய விரலால் சுவைபாவை நோக்கி, நீ விடுதலையாகி விட்டாய்' என்றானாம். இதனால் அபூ லஹப் நரகத்திற்குச் சென்றாலும் நபிகள் நாயகத்தின் பிறப்பிற்காக அவன் சந்தோஷப்பட்டு விரலால் சுட்டிக்காட்டி சுவைபாவை விடுதலை செய்த காரணத்தினால் தான் அவனுக்கு இந்த இன்பமாம்.
இது அபூ லஹப் கொண்டாடிய மீலாது விழாவாம். இந்த அபூ லஹப் வழியைப் பின்பற்றித் தான் இவர்கள் மீலாது விழா கொண்டாடுகிறார்களாம். அபூ லஹப் மீலாது விழா கொண்டாடிய ஹதீஸ் புகாரியிலேயே வருகிறதாம்.
அபூ லஹபிற்கு நரகத்தில் விரல்கள் வழியாக நீர் புகட்டப்படுவதாக புகாரியில் வரக்கூடிய செய்தியைப் பற்றி அறிவதற்கு முன்னால் புகாரி இமாம் அந்த நூலை எவ்வாறு தொகுத்திருக்கிறார் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

புகாரி இமாம் அவர்கள் நபிகள் நாயகம் கூறியதாக ஒரு ஹதீஸைக் கூறுவதற்கு முன்னால் அந்த ஹதீஸின் பாடத் தலைப்பின் கீழ் சில அறிஞர்களின் கருத்துக்களையோ அல்லது அறிவிப்பாளர் தொடர் முறிந்த வழியில் வரக்கூடிய நபிமொழிகளையோ குறிப்பிடுவார். புகாரி இமாம் அவர்கள் பாடத் தலைப்பில் நபியவர்கள் கூறியதாக ஒன்றைக் குறிப்பிட்டால் அது ஸஹீஹ் என்பது கிடையாது. அது ஸஹீஹாகவும் இருக்கலாம், பலவீனமானதாகவும் இருக்கலாம். அது போன்று ஒரு ஹதீஸைப் பதிவு செய்த பின் சில இடங்களில் அந்த ஹதீஸோடு சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்களின் கருத்துக்களையும் பதிவு செய்திருப்பார்.
இவ்வாறு புகாரி இமாம் பதிவு செய்திருப்பதால் அந்த அறிஞரின் கருத்து சரியானது என்றோ அல்லது அதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது என்றோ எந்த உத்தரவாதமும் கிடையாது. புகாரி இமாம் அவர்கள் சரியான, முறிவில்லாத அறிவிப்பாளர்கள் வரிசையுடன் எதனைக் குறிப்பிட்டுள்ளார்களோ அது மட்டும் தான் ஸஹீஹானதாகும். இது புகாரி நூலைப் பற்றி ஞானமுடைய உலகத்திலுள்ள அனைத்து அறிஞர்களும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயமாகும். இப்போது இவர்கள் குறிப்பிட்டுள்ள செய்திக்கு வருவோம். புகாரியில் 5101வது ஹதீஸாக வரக்கூடிய செய்தியை இமாம் புகாரி அவர்கள் சரியான அறிவிப்பாளர்கள் வரிசையில் பதிவு செய்துள்ளார்கள்.  இவ்வாறு பதிவு செய்த பின் அந்த அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா என்ற அறிஞர் கூறிய கருத்தை அதன் கீழ் பதிவு செய்துள்ளார்கள். உர்வா என்ற அறிஞர் கூறியதாக வருவது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்ததாகும். இதற்கும் 5101வது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடருக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.
இது சம்பந்தமான விளக்கங்களைக் கீழே தருகின்றோம்.
அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், "(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?'' என்று அவர் கேட்டார்.  உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்கனூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார்.  (புகாரி 5101 வது ஹதீஸின் கீழ் உள்ள குறிப்பு)
1.     மேற்கண்ட செய்தியை உர்வா என்ற அறிஞர் கூறுகின்றார். இவர் தாபியீன்களில் (ஸஹாபாக்களுக்கு அடுத்த தலைமுறையினர்) நடுத்தரத்தில் உள்ளவராவார். ஆனால் அபூ லஹப் சுவைபாவை விடுதலை செய்த நிகழ்வோ நபியவர்கள், நபியாக ஆவதற்கு முன்னால் அதிலும் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோது நடைபெற்றதாகும். அப்படியென்றால் இந்தச் செய்தியை உர்வா நேரடியாகக் கண்டிருக்க முடியாது. இதனை நேரடியாகக் கண்ட ஒருவர் தான் கூறியிருக்க முடியும். நபியவர்களின் காலத்தில் நடந்த இந்தச் செய்தியை உர்வாவிற்குக் கூறியவர் யார் என்பதை உர்வா குறிப்பிடவில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயே இந்தச் செய்தி உண்மையானதல்ல என்பது நிரூபணமாகிவிட்டது. இதைப் பற்றி புகாரியின் விரிவுரையாளரான இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தச் செய்தி முர்ஸலானதாகும். இதனை முர்ஸலாக உர்வா என்பவர் அறிவித்துள்ளார். தனக்கு இதனைக் கூறியவர் யார் என்பதை உர்வா அறிவிக்கவில்லை.  (நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 9, பக்கம்: 145)
முர்ஸல் என்றால் தாபீ ஆக உள்ள ஒருவர் ஸஹாபி இல்லாமல் அறிவிப்பதாகும். 2. அபூ லஹப் இறந்த போது அபூ லஹபின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் கனவில் கண்டதாக மேற்கண்ட செய்தியில் வந்துள்ளது. அவர் யார்? அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரா? அல்லது இஸ்லாத்தை ஏற்ற பிறகு இந்தக் கனவைக் கண்டாரா? அல்லது காஃபிராக இருக்கும் போது இந்தக் கனவைக் கண்டாரா?  என்பது போன்ற எந்த விவரங்களும் மேற்கண்ட செய்தியில் இல்லை. மேலும் உண்மையில் அவர் கனவில் அவ்வாறு கண்டார் என்பதை உறுதிப்படுத்துபவர் யார்? ஏனெனில் தான் காணாத ஒன்றைக் கூட கனவில் கண்டதாக பொய் சொல்லக்கூடிய பொய்யர்கள் ஏராளமாக உள்ளனர். மேலும் நபிமார்களைத் தவிர வேறொரு ஒருவர் கனவில் ஒன்றைப் பார்த்துவிட்டால் அது மார்க்க ஆதாரமாகிவிடும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? சில ஸஹாபாக்கள் கண்ட கனவிற்கு நபியவர்கள் விளக்கம் கூறி உள்ளார்கள். அது போன்ற மேற்கண்ட கனவிற்கு மீலாது விழா கொண்டாடுவது தான் விளக்கம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்களா? என்பதையெல்லாம் மேற்கண்ட கனவுச் செய்தியை கேடுகெட்ட மவ்லிதிற்கு ஆதாரம் காட்டுபவர்கள் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர். சிலர் அப்பாஸ் (ரலி) அவர்கள் கனவில் கண்டதாக எழுதி வைத்துள்ளனர். இதுவும் அறிவிப்பாளர்கள் தொடர் இல்லாத ஆதாரமற்ற செய்தியாகும்.
3. சுவைபாவை விடுதலை செய்ததன் காரணமாக அபூ லஹபின் விரல்கள் வழியாக அவனுக்கு நீர் புகட்டப்படுவதாக மேற்கண்ட செய்தியில் வந்துள்ளது.  மேலும் இது யாரோ ஒருவர் கனவில் கண்ட காட்சிதான். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரும் முறிவுடையது தான்.  இத்தனை குறைகளுக்கு மேல் இது உண்மையான இறைவேதத்தின் வரிகளுக்கு நேரடியாக முரண்படுகிறது. அல்லாஹ் அபூ லஹபைச் சபிக்கும் போது அவனுடைய இரு கரங்களும் நாசமாகட்டும் என்று அவனது கரத்தை குறிப்பிட்டுத் தான் சபிக்கின்றான். அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.  கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. (அல்குர்ஆன் அத்தியாயம் 111)
மேற்கண்ட வசனங்களை ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன' என்று அல்லாஹ் கூறுகிறான். இரு கைகள் என்றால் அதில் உள்ள விரல்களும் சேர்ந்து தான் அழியும். ஆனால் மேற்கண்ட பலவீனமான செய்தியோ அபூ லஹபின் இருவிரல்களில் இருந்தும் தண்ணீர் வருவதாகக் கூறுகிறது. இது இறைவனின் வசனத்திற்கு நேர் எதிரானதாகும். இறைவசனத்துடன் நேரடியாக மோதுவதே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்குப் போதுமான மிகப்பெரும் சான்றாகும். மேலும் மேற்கண்ட இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் சுவைபாவை விடுதலை செய்ததற்குப் பகரமாக அபூ லஹபிற்கு விரலில் இருந்து தண்ணீர் வந்ததாக வந்துள்ளது. அதாவது சுவைபாவை விடுதலை செய்தது என்ற நற்செயலுக்குக் கூலியாகத் தான் அவனுக்கு விரலிலிருந்து தண்ணீர் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதுவும் குர்ஆன் வசனத்திற்கு நேர் எதிரானதாகும்.
அபூ லஹப் செய்த எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் நற்கூலி கிடையாது என அல்லாஹ் கூறிவிட்டான். இதனைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை' இந்த வசனத்தில் அபூ லஹப் செய்த எந்த ஒரு செயலும் அவன் நாசமாவதிலிருந்து அதாவது அவன் நரகத்தில் நுழைவதிலிருந்து காக்கவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதாவது அபூ லஹப் செய்த எந்த நற்செயலுக்கும் கூலியில்லை என்று உண்மை இறைவனின் உயர்வான வசனம் சான்று பகர்கிறது. ஆனால் அறிவிப்பாளர் தொடர் சரியில்லாத, யாரோ ஒருவர் கனவில் கண்டதாக வருகின்ற மேற்கண்ட இட்டுக்கட்டப்பட்ட செய்தியோ அபூ லஹப் செய்ததற்கு கூலி கிடைக்கும் என்று கூறுகிறது. இப்பொழுது இதைக் காட்டி மவ்லூது ஓதவேண்டும் என்று கூறுபவர்கள் இறைவசனத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது யாரோ ஒருவர் கண்ட கனவை, அதிலும் அது உண்மையா? பொய்யா? என்று அல்லாஹ்வை தவிர யாருமே அறிய முடியாத ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?
கொழுந்து விட்டெரியும் நரகில் அவன் கரிவான்' என்று அல்லாஹ் கூறிவிட்டான். இதில் அவன் விரல்கள் மட்டும் கரியாது என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறவில்லை. ஆனால் மேற்கண்ட செய்தியோ இறைவசனத்திற்கு நேர் முரணாக அவன் விரலில் நீர் வடிவதாகக் குறிப்பிடுகிறது. இப்படி முழுவதுமாக, நேரடியாக இறைவசனங்களுக்கு முரணாகத் தான் யாரோ ஒருவர் கண்ட மேற்கண்ட கனவுச் செய்தி அமைந்துள்ளது. 4.       மேலும் மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் பிறந்ததற்காகத்தான் அபூ லஹப் சுவைபாவை விடுதலை செய்தான் என்பது இல்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய  பிறகுதான் அபூலஹப் சுவைபாவை விடுதலை செய்தான் என்று வரலாற்றில் உள்ளதாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூலஹப் ஹிஜ்ரத்திற்கு முன்னால் சுவைபாவை விடுதலை செய்தான் என்றே வரலாற்றில் வந்துள்ளது. இது பாலூட்டுதலுக்கு மிக நீண்ட காலத்திற்குப் பிறகாகும். (ஃபத்ஹுல் பாரி, பாகம் : 9, பக்கம் : 145)
ஒரு வாதத்திற்கு அபூ லஹப் நபியவர்கள் பிறந்ததற்காகத் தான் சுவைபாவை விடுதலை செய்தான் என்று வைத்துக் கொண்டாலும் அபூ லஹப் செய்தது மார்க்கமாகுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குப் பிறந்த நாள் கொண்டாடுங்கள் என்று எங்காவது கூறியுள்ளார்களா? மாறாக பிறந்த நாள் கொண்டாடுவது எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரமாகும். யார் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை (அஹ்மத்) என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இந்த மவ்லூது, மீலாது அனைத்தும் நபியவர்களுக்குப் பின்னால் உருவாக்கப்பட்ட அனாச்சாரங்களான பித்அத்துகளாகும். இன்னும் சொல்லப் போனால் அபூ லஹபின் கலாச்சாரமாகும். எனவே இது போன்ற அனாச்சாரங்களை விட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ  அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி 2697

No comments:

Post a Comment