Sunday, May 08, 2011

இப்படியும் சில தஃப்ஸீர்கள்


இப்படியும் சில தஃப்ஸீர்கள்      
(தொடர் 5)
முட்டையிடும் ஷைத்தான்?

மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை போலும். ஒரு விஷயத்தை முழுமையாக, சரியாகத் தெரிந்து கொள்ள அவற்றை ஆய்வு செய்வது அவசியமே. எனினும் நாம் செய்யும் ஆய்வு இறைவன் விதித்த வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருளைப் பற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறதோ அதைப் பொறுத்து நமது ஆய்வு அமைவது அவசியம்.
உதாரணமாக ஒருவர் விதியைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப் போகிறார் எனில் அது தொடர்பாக மார்க்கம் கூறுகிற ஒழுங்கை அவர் கடைப்பிடிக்க வேண்டும்.
நடந்து முடிந்த விஷயத்தில் இறைவன் விதித்த விதியின் மீதும், நடக்கவிருக்கும் காரியங்களில் நம்முடைய முயற்சியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விதி தொடர்பாக இறைவனும், இறைத்தூதரும் நமக்குக் கூறியுள்ளனர். இதை தாண்டி விதி சம்பந்தமாக விவாதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும் என்பதால் அதை நமது மார்க்கம் தடை செய்துள்ளது. விதி தொடர்பாக ஆய்வு செய்பவர் இறைவன் விதித்த மேற்கண்ட வரம்பை மீறாத வகையில் தனது ஆய்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.  இறைவனைப் பற்றி ஆய்வு செய்யத் தலைப்பட்ட ஒருவர் இறைவன் எவ்வாறு தோன்றினான்? அவனுக்கு மகத்தான ஆற்றல் எவ்வாறு உண்டானது என்பன போன்ற ஆய்வுகளுக்குள் செல்லக் கூடாது.
இது போன்ற இறைவன் நிர்ணயித்த எல்லைகளைக் கவனத்தில் கொண்டு ஆய்வு அமைந்திட வேண்டும். ஆக, ஆய்வு செய்வது அவசியம் என்றாலும் அது ஒரு வரையரைக்குள் நிற்க வேண்டுமே தவிர வகுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி சென்றுவிடக் கூடாது. அவ்வாறு ஆய்வு செய்வது அறிவார்ந்த செயலாகக் கருதப்படாது. மாறாக, குற்றச் செயலாகவே கருதப்படும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. அல்குர்ஆன் 18:50

ஷைத்தான்களுக்குச் சந்ததிகள் இருப்பதாக இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். இவ்வசனத்தில் (நபிமொழிகளின் துணையுடன்) விளக்குவதற்கும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவும் வேறு விஷயமே இல்லாதது போல ஷைத்தான்கள் எவ்வாறு சந்ததிகளை உருவாக்குகிறார்கள் என்ற ஆய்வை அறிஞர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.
அதைப் பற்றிய ஆய்வில் இறைவன் வகுத்த எல்லையைத் தெளிவாக மீறியுள்ளார்கள் என்பதைப் பின்வரும் விளக்கங்களைக் கண்டால் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
அவன் (ஷைத்தான்) தனது வாலை அவனுடைய பின் துவாரத்தில் நுழைத்து, ஒரு முட்டையை இடுவான். பிறகு அம்முட்டை ஷைத்தான்களின் கூட்டத்தை வெளிப்படுத்தும் என சொல்லப்படுகிறது.
 (அவர்களின் இனப்பெருக்கமாகிறது) கிழக்குத் திசையில் பத்து, மேற்கு திசையில் பத்து, பூமியின் மையப்பகுதியில் பத்து என அவன் (ஷைத்தான்) முப்பது முட்டைகளை இடுவான். ஒவ்வொரு முட்டையிலிருந்தும் இஃப்ரீத் எனும் ஜின்கள், பாலைவனத்தில் காணப்படும் ஒரு வகை ஷைத்தான்கள், கதாரிப் எனும் ஷைத்தான்கள் ஆகியோரைப் போல ஷைத்தான்களின் இனத்தவர் தோன்றுவார்கள். அவர்களின் பெயர்கள் பலதரப்பட்டது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆதமின் மக்களுக்கு எதிரிகளாவர்.
நூல்: தஃப்ஸீருல் ரூஹூல் பயான்
பாகம் 5, பக்கம் 197
ஷைத்தான்களின் சந்ததிகள் என்ற இறைவனின் ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் யோசித்து விளக்கமளித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.
ஷைத்தான் ஒரு சமயத்தில் முப்பது முட்டைகள் (?) இட்டு, தன் சந்ததியைப் பெருக்குவதாக இமாம்கள் விளக்கமளிக்கின்றனர். அதிலும் கிழக்கு, மேற்கு என வாஸ்து பார்த்து முட்டையிடுவதாக வேறு கூறுகின்றார்கள்.
இது தான் மார்க்க வரம்பிற்கு உட்பட்டு ஆய்வு செய்வதன் இலட்சணமா? இவற்றில் ஒன்றுக்காவது குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தைக் குறிப்பிட இயலுமா? இமாம்களைப் பின்பற்றுவோர் இதற்குப் பதிலளிக்கட்டும் பார்க்கலாம்.
சோதனை மேல் சோதனை?

இறைவன் இப்ராஹீம் நபிக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கினான். இறைவன் வழங்கிய அனைத்து சோதனைகளிலும் இப்ராஹீம் நபியவர்கள் வென்றார்கள். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 2:124
இப்ராஹீம் நபியவர்கள் எப்படியெல்லாம் சோதிக்கப்பட்டார்கள் என்பதைக் குர்ஆனிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஹஜ்ஜூப் பெருநாள் உரையின் போதும் இப்ராஹீம் நபிக்கு இறைவன் வழங்கிய சோதனைகளையும், அதில் அவர் வென்ற வரலாறையும் மார்க்க அறிஞர்கள் தவறாமல் நமக்கு நினைவூட்டுகின்றனர்.
ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தன் தந்தைக்கு எடுத்துரைத்த போது தந்தை அவரை வீட்டிலிருந்து வெளியேற்றியது, மக்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொன்ன போது நெருப்பிலிட்டுத் துன்புறுத்தியது, நெடுங்காலத்திற்குப் பின் தனக்குப் பிறந்த மகனை அறுத்துப் பலியிட உத்தரவு, மனைவி மற்றும் மகனைப் பாலைவனத்திலே தன்னந்தனியாக விட்டுவிடுமாறு இடப்பட்ட கட்டளை போன்ற எண்ணற்ற சோதனைகளுக்கு இப்ரஹீம் நபி ஆளானார்கள். இது போக இன்னும் பல கட்டளைகளையிட்டு இறைவன் இப்ராஹீமைச் சோதித்துள்ளான்; இவை அனைத்திலும் இப்ராஹீம் வெற்றி பெற்றார் என்று இவ்வசனத்தின் மூலம் நாம் புரிகிறோம்.
மேற்கண்ட வசனத்திற்கு இமாம்கள் விளக்கமளிக்கின்றனர். அதாவது இப்ராஹீம் நபியவர்கள் எவ்வாறெல்லாம் சோதிக்கப்பட்டார்கள் என்பதை விலாவாரியாக தங்களுக்கே உரிய பாணியில் (அதாங்க.. கதை சொல்வது) விளக்குகின்றனர். இதோ அவை உங்கள் பார்வைக்கு: ??? அரபி 3
நட்சத்திரத்தின் மூலம் அவரை (இப்ராஹீமை) அவன் சோதித்தான். அதை அவர் பொருந்திக் கொண்டார். சந்திரன் மூலம் சோதித்த போது அதையும் அவர் பொருந்திக் கொண்டார். சூரியன் மூலம் சோதித்த போது அப்போதும் பொருந்திக் கொண்டார். அற்புதத்தை கொண்டு சோதித்த போதும் பொருந்திக் கொண்டார். கத்னா விஷயத்தில் சோதித்தான். அதைப் பொருந்திக் கொண்டார். அவரது மகன் மூலம் சோதித்த போது அதையும் பொருந்திக் கொண்டார் என்று ஹஸன் அவர்கள் கூறுகிறார்.
நூல்: தஃப்ஸீரு இப்னு அபீ ஹாதம்
பாகம் 4, பக்கம் 432
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹன்ஷ் பின் அப்துல்லா கூறுகிறார்:
(இறைவன் இப்ராஹீமை பல கட்டளைகள் மூலம் சோதித்தான்) அக்கட்டளைகள் மொத்தம் பத்தாகும்.  அவற்றில் ஆறு மனிதனுடன் தொடர்புள்ளது. மேலும் நான்கு இஸ்லாமிய சின்னங்கள் தொடர்புடையதாகும். மறை உறுப்பு மற்றும் அக்குள்களில் உள்ள முடிகளை மழிப்பது, கத்னா செய்வது, (இம்மூன்றும் சேர்ந்து ஒன்று என இப்னு ஹூபைரா கூறுகிறார்) நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது, மிஸ்வாக் செய்வது, வெள்ளிக்கிழமை குளிப்பது, ஆகியவை மனிதனுடன் தொடர்புடையது.  கஅபாவை தவாஃப் செய்வது,  ஸஃபா மர்வாக்கிடையில் ஸயீ செய்வது, ஷைத்தான்களுக்கு கல்லெறிவது, தவாஃபுல் இஃபாளா செய்வது ஆகியவை இஸ்லாமியச் சின்னங்கள் தொடர்புடையதாகும்.
நூல்: தஃப்ஸீரு இப்னு அபீ ஹாதம்
பாகம் 4, பக்கம் 428
இறைவன் இப்ராஹீம் நபிக்கு இரு வகைகளாக மொத்தம் பத்துக் கட்டளைகளை இட்டதாக மேற்கண்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற கட்டளைகளை இட்டு இப்ராஹீம் நபியை இறைவன் சோதித்தான் என இமாம்கள் கூறுகின்றார்கள். இவைகள் தாம் சோதனைகளா? இவைகள் ஒவ்வொன்றையும் இப்ராஹீம் நபிக்குக் கட்டளையிட்டான் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள்?
இறைவன் இப்ராஹீம் நபிக்கு வழங்கிய சோதனைகள் மொத்தம் பத்து தான் என்று குறிப்பிடுகிறார்களே! இதற்கு என்ன ஆதாரம்?
மேலும் பல இமாம்கள் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் குறிப்பிட்டு விட்டு இவைகள் தாம் இப்ராஹீம் நபிக்கு ஏற்பட்ட சோதனைகள் என்று குறிப்பிடுகிறார்கள்.  இதை என்னவென்பது? இப்போது தலைப்பின் அர்த்தத்தை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
பொருளில்லா பொருள்
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 4:36
இவ்வசனத்தில் முதலில் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லி விட்டுப் பின், நெருங்கிய அண்டை வீட்டுக்காரர், தூரத்து அண்டை வீட்டார் என அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என இறைவன் கூறுகிறான். இவை ஒவ்வொன்றுக்கும் ஸஹ்ல் என்ற அறிஞர் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்.
அல்ஜாரிதுல் குர்பா (நெருங்கிய அண்டை வீட்டுக்காரர்) என்பது உள்ளமாகும். அல்ஜாரிதுல் ஜூனுப் (தூரமான அண்டை வீட்டுக்காரர்) என்பது ஆத்மாவை குறிக்கும். அஸ்ஸாஹிபு பில் ஜன்ப் (பயணத் தோழர்) என்பது  நபிவழி மற்றும் ஷரீஅத்தைப் பின்பற்றுவதில் வெளிப்படுகிற அறிவு என்பதாகும். இப்னுஸ் ஸபீல் (நாடோடிகள்) என்பது இறைவனுக்குக் கட்டுப்படக்கூடிய உறுப்புகள் ஆகும்.
நூல்: தஃப்ஸீருல் பஹ்ருல் முஹீத்
பாகம் 3, பக்கம்  199
இந்த வார்த்தைகளுக்கு இவர் குறிப்பிடும் பொருள் அரபு அகராதி நூல்களில் தேடினாலும் கிடைக்காது என்ற அளவில் தன்னுடைய தத்துவங்களை உதிர்த்துள்ளார்.
இறைவனுடைய வசனங்களைக் கேலி செய்வதில் இதுவும் ஒரு வகை. இதை இமாம்கள் செய்யத் துணிந்திருக்கிறார்கள். அல்லது துணிந்து செய்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?
வளரும் இன்ஷா அல்லாஹ்
(ஏகத்துவம் May 2011)

No comments:

Post a Comment