Thursday, May 12, 2011

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்


ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்
யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
திருக்குர்ஆனின் அத்தியாயங்கள், அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாகக் கூறப்படும் சிறப்புகள் பற்றி, அவை ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா என்பதை நாம் பார்த்து வருகிறோம். இத்தொடரில் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255ஆவது வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகளை ஆய்வு செய்துள்ளோம்.

வசனங்களின் தலையானது?
ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் உள்ளது. அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி 2803
இந்தச் செய்தி ஹாகிம் (பாகம்: 2, பக்கம் 285, 286), முஸன்னப் இப்னு அபதுர் ரஸ்ஸாக் (பாகம்: 3, பக்கம் 376) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஹகீம் பின் ஜுபைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் அந்த ஹதீஸின் கீழே ஹகீம் பின் ஜுபைர் என்பவரை ஷுஅபா அவர்கள் விமர்சித்து அவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் அஹ்மத் அவர்கள் இவர் பலவீனமானவர், குளறுபடி செய்பவர் என்றும், இப்னு மயீன் அவர்கள் இவர் மதிப்பற்றவர் என்றும், ஷுஅபாவிடம் இவருடைய ஹதீஸ்களைப் பற்றி கேட்ட போது நான் நரகத்தைப் பயப்படுகிறேன் என்றும், இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர், நிராகரிக்கப்பட்டவர் என்றும், இமாம் நஸயீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்றும், இமாம் அபூதாவூத் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம்: 2, பக்கம்: 383)
எனவே இந்தச் செய்தியை நாம் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.
பாதுகாப்பு தரும் வசனம்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹாமீம் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் யார் ஓதுவாரோ, மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலை நேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலை வரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 2804
இந்த ஹதீஸ் தாரமி (3252), ஷுஅபுல் ஈமான் (பாகம்: 2, பக்கம்: 483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் (இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர்ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ் கலை அறிஞர்களில் சிலர் விமர்சித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் தகுதியற்றவர் என்றும், இமாம் இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும், இமாம் அஹ்மத் அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும், இமாம் நஸயீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 263
வீடுகளைப் பாதுகாக்கும் வசனம்?

யார் பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள நான்கு வசனங்களையும் ஆயத்துல் குர்ஸியையும் அதற்கு அடுத்து வரும் இரண்டு வசனங்களையும் பகராவின் இறுதியில் உள்ள மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஷைத்தானோ அல்லது அவன் வெறுக்கும் எந்தப் பொருளும் அவனை நெருங்காது. மேலும் இவற்றை பைத்தியக்காரன் மீது ஓதினால் அவன் அதிலிருந்து விடுதலையாகாமல் இருக்க மாட்டான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: தாரமி 3249, 3248
ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாக இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

No comments:

Post a Comment