Sunday, May 08, 2011

ஸிஹ்ர் ஒரு விளக்கம்


தொடர்: 14
ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.
மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கு இஸ்மாயில் ஸலபி எழுதிய விளக்கத்தைப் பார்த்து வருகிறோம்.
இது குறித்து புகாரியில் இடம் பெற்ற ஹதீசுக்கு அவர் கொடுத்த விளக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம்.
அடுத்து சூனியம் செய்யப்பட்ட பொருள் எடுக்கப்பட்டது குறித்து நஸயீ, அஹ்மத் ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அது பலவீனமானது என்றும் அஃமஷ் அவர்கள் ஹதீஸில் மோசடி செய்பவர் என்றெல்லாம் அவர் எழுதி தன் அறியாமையைப் பின் வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
சலபியின் வாதம்
அடுத்து, நஸஈ அஹ்மதில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பு நேரடியாக இந்த ஹதீஸுடன் முரண்படுகின்றது.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இரண்டு மலக்குகள் வந்து உரையாடிய உரையாடல் மூலம் சூனியம் பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்ததாகக் கூற, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களது அறிவிப்பு, ஜிப்ரீல் வந்து நேரடியாகக் கூறியதாகக் கூறுகின்றது. அடுத்தது, ஏனைய ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் கிணற்றுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்ததாகக் கூற, நஸஈ அறிவிப்பு நபி(ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அந்தப் பொருட்கள் அவரிடம் எடுத்து வரப்பட்டதாகக் கூறுகின்றது.
இவை முரண்பாடுகள் தான். இப்படி முரண்பட்டால் இரண்டில் எது உறுதியான அறிவிப்பு என்று ஆய்வு செய்ய வேண்டும். ஹதீஸ் துறையில் அறிவும், அனுபவமுமுள்ள சகோதரர் அதைச் செய்யாமல் இரண்டு ஹதீஸ்களையும் மோத விட்டு இரண்டையும் நிராகரிப்பது விசித்திரமானதாகும்.
பலவீனமான ஹதீஸை எடுத்து, பலமான அறிவிப்புடன் மோத விட்டு, பலமான ஹதீஸை மறுக்க முற்பட்டது அதை விட ஆச்சரியமாகும்.
அவர் குறிப்பிட்டுள்ள நஸஈ, அஹ்மத் அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.

(1) அல் அஃமஷ் என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களில் இருட்டடிப்புச் செய்யக் கூடிய முதல்லிஸ் ஆவார். இவர், இன்னாரிடம் நான் கேட்டேன் என்று தெளிவாக அறிவிக்காமல் அன் அனா என்று கூறப்படக் கூடிய விதத்தில் அவர் மூலம் என அறிவித்தால் அவர் நேரடியாகக் கேட்காமலேயே அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் அறிவிப்பாளரில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பில் இது ஒரு குறைபாடாகும். இவர் அறிவிப்பாளர் தொடரில் மோசடி செய்பவர் என்றாலும் மிக மோசமான அறிவிப்பாளர்களிடம் செய்தியைக் கேட்டு மோசடி செய்யும் குணம் கொண்டவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அஃமஷ் மூலம் அபூ முஆவியா அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படும். எனினும் இதில் மற்றுமொரு குறைபாடும் உள்ளது.
(2) அடுத்ததாக, யசீத் இப்னு ஹய்யான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் தவறு விடக் கூடியவர்; முரண்பாடாக அறிவிக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த இரண்டு குறைபாடுகளால் இந்த ஹதீஸ் பலவீனமாகின்றது.
அது போக, சூனியம் பற்றிய ஹதீஸுடன் ஆயிஷா(ரலி) அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், இதன் அறிவிப்பாளர் யஸீத் இப்னு அர்கம் அவர்கள் அதனுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்.
அடுத்ததாக நஸஈ, அஹ்மத் ஹதீஸ் ஆதாரபபூர்வமான அறிவிப்பாளர்களின் ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளது. இப்படி இருக்க, பலவீனமான ஹதீஸின் கருத்தை முன்வைத்து சூனியம் ஹதீஸில் முரண்பாடு உள்ளது என சகோதரர் பிஜே வாதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறியாமல் பிஜே இந்த வாதத்தை முன்வைத்திருக்கலாம் எனப் பிஜே மீது நல்லெண்ணம் வைக்கலாம். ஏனெனில், எத்தகைய அறிஞர்களுக்கும் தவறு நேரலாம். அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்ற எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அந்த அடிப்படையில் நல்லெண்ணம் வைப்பதற்குக் கூடப் பிஜே செய்துள்ள திருவிளையாடல் இடந்தராமல் போகின்றது.
113, 114 வது அத்தியாயங்கள் என்ற தலைப்பில் சூறதுன்னாஸ்-பலக் அத்தியாயங்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது அருளப்பட்டன என்ற கருத்தில் அமைந்த பலவீனமான அறிவிப்பை விமர்சனம் செய்யும் போது, ஹதீஸை விமர்சனம் செய்வதற்கு அறிவிப்பாளர் தொடர் பற்றிப் பேசாமல், அப்துல் ஹமீத் பாகவி-நிஜாமுதீன் மன்பயீ இருவருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏன் கூறுகின்றார்? என்று ஆய்வு செய்த போது ஒரு உண்மை புலப்பட்டது.
ஹதீஸ்களுக்கிடையில் அதிக முரண்பாடுகள் இருக்கின்றன எனக் காட்டுவதற்காகப் பிஜே எடுத்து வைத்த நஸஈ-அஹ்மத் அறிப்பாளர் தொடரும், நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது இவ்விரு சூறாக்களும் அருளப்பட்டன எனக் கூறும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் ஒரே தொடராகும்.
அபூ முஆவியா, அஃமஸ், யசீதிப்னு ஹய்யான், ஸைத் இப்னு அர்கம் - இந்தத் தொடரில் தான் இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கப்படுகின்றன. (ஒரேயொரு அறிவிப்பாளர் மட்டும் வேறுபடுகின்றார்.)
இதில் ஒன்றை ஏற்று பார்த்தீர்களா? ஹதீஸிற்கிடையில் முரண்பாடு இருக்கிறது. எனவே இரண்டு ஹதீஸ்களையும் ஏற்க முடியாது என வாதிட்டவர், அதே அறிவிப்பாளர் தொடரில் வந்த நாஸ்-பலக் அத்தியாயங்கள் அருளப்பட்டன என்ற ஹதீஸை மறுக்கின்றார். இரண்டுமே பலவீனமான அறிவிப்புகளாகும். தனது வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டுமென்றால் பலவீனமான ஹதீஸையும் எடுப்பேன் என்ற நிலைப்பாட்டை இதில் முன்வைக்கின்றார். தேவைப்பட்டால் ஹதீஸில் இல்லாததைச் சேர்த்து மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துவேன். தேவைப்பட்டால் குர்ஆனில் கூடச் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் செய்யாமல் விடுவேன் என்ற அவரது நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இவர் சொல்லும் கருத்தை விட இவர் செல்லும் இந்தப் போக்குத்தான் ஆபத்தானது என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இவரது போக்கு சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றதோ என்ற அச்சம் கலந்த ஐயம்தான் இது குறித்து எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
நமது மறுப்பு
நஸயீ, அஹ்மதில் இடம் பெறும் சூனியம் தொடர்பான ஹதீஸ் பலமானது என்று நாம் வாதிடுவது போலவும், இவர் மறுப்பது போலவும் எழுதியுள்ளார்.
நம்மைப் பொறுத்த வரை இவர் சுட்டிக்காட்டும் இந்த ஹதீஸ்கள் மட்டுமின்றி நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களுமே இட்டுக்கட்டப்பட்டவை என்பது தான் நமது நிலை.
இந்த நிலையில் அவர் பலவீனமானது என்று ஒப்புக் கொள்ளும் ஒரு ஹதீஸை நாம் பலமானது என்று கூறும் அவசியம் நமக்கு இல்லை. அவரது ஆதாரத்தில் ஒன்று குறைந்து விட்டதால் நமக்கு நல்லது தான். எனவே அவர் பலவீனமானது என்று தள்ளி விட்ட ஹதீஸை நாமும் விட்டு விடுகிறோம். அவர் பலமானது என்று கருதும் மேற்கண்ட அறிவிப்புகளில் காணப்படும் முரண்பாட்டுக்கு உரிய முறையில் விளக்கம் தரட்டும். அல்லது குர்ஆனுக்கு முரண்படுவதால் அவற்றை நாமும் நிராகரிக்கிறோம் என்று கூறட்டும்.
113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டது என்ற கருத்தில் உள்ள ஹதீஸும் நம்மைப் பொறுத்த வரை இட்டுக் கட்டப்பட்டது தான். குர்ஆனுடன் மோதும் காரணத்துக்காக அது பலவீனமானது எனும் போது அறிவிப்பாளர் குறித்து அலசும் அவசியம் நமக்கு இல்லை.
அறிவிப்பாளர் பலமாக இருந்தாலும் குர்ஆனுடன் மோதினால் ஏற்க மாட்டோம் என்ற நமது நிலைபாடு அவருக்கு இன்னும் புரியவில்லை. அவரைப் போலவே நாமும் கருத்து கொண்டிருப்பதாக எண்ணி நிழலுடன் சண்டை போடுகிறார். தள்ளுபடி செய்ய வேண்டிய செய்திகளில் அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்க வேண்டியதில்லை.
மொத்தத்தில் பயனற்ற வாதங்களை எடுத்து வைத்து நேரத்தைப் போக்கி இருக்கிறாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை மறுத்து நாம் எடுத்து வைத்த எந்த ஆதாரத்துக்கும் உருப்படியான பதில் தரவில்லை.
Thanks Onlinepj -ஏகத்துவம் 05-2011

No comments:

Post a Comment